AVENGERS INFINITY WAR



அதகளம்!

கதையை எல்லாம் விடுங்கள். இரண்டரை மணி நேரத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகளை 3டியில் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்கிற மனநிலை கொண்டவராக இருந்தால் உங்களுக்கான படம்தான் ‘Avengers: Infinity War’. படம் பார்க்கிறவர்கள் அத்தனை பேருமே ‘ஆ’வென்று வாயைப் பிளந்துகொண்டேதான் பார்க்கிறார்கள்.

அயர்ன்மேன், தோர், ஹல்க், ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா  என்று மார்வல் பிரபஞ்சத்தின் அத்தனை சூப்பர் ஹீரோக்களும் சேர்ந்து உலகத்தைக்  காப்பாற்றுகிறார்கள் என்று குத்துமதிப்பாக கதையைப் புரிந்துகொண்டால்  போதும். இந்தப் பிரபஞ்சமும் அதன் ஹீரோக்களும் காட்டக்கூடிய ஃபேன்டஸியில் நாம்  தன்னிலை மறந்து ரசிக்கலாம்.

ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ், கார்த்திக்கில் தொடங்கி அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் வரையிலான தமிழ் சினிமாவின் அத்தனை பெரிய ஹீரோக்களும் சேர்ந்து ஒரே படத்தில் அவரவருக்குரிய முக்கியத்துவத்தோடு நடித்தால் எப்படி இருக்கும்?

அதே அனுபவத்தைத்தான் இந்தப் படம் கொடுக்கிறது.மார்வல் ஸ்டுடியோஸ் நிறுவனம், தன்னுடைய படங்களில் உருவாக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மொத்தத்தையும் சேர்த்து ‘மார்வல் திரை பிரபஞ்சம்’ என்றொரு கற்பனையான வெளியை ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நடை பெறுவதாக வரும் பத்தொன்பதாவது படம் இது. ‘அவெஞ்சர்ஸ்’ வரிசையில் மூன்றாவது படம். இந்த மூன்றாவது படத்தின் முதல் பாகம் இது. அடுத்த பாகம், 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளிவர திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஓரிரு ஹீரோக்கள் என்றாலே அதகளம் எனும்போது, அத்தனை ஹீரோக்களையும் ஒரே படத்தில் களமிறக்கினால் எப்படியிருக்கும்? முதல் காட்சி தொடங்கி இறுதிக்காட்சி வரை சீட்டின் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்துவிடுகிறார்கள் இரட்டை இயக்குநர்களான அந்தோனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள்.

கோபாவேசப்படும்போது ராட்சத உருவம் எடுக்க முடியும் என்பதுதான் ஹல்க்கின் சிறப்பம்சமே. அப்படிப்பட்ட ஹல்க்கால் ராட்சத உருவத்தை எடுக்க முடியாமல் அவதிப்படுவதெல்லாம் முந்தைய ஹல்க் படங்களைப் பார்த்தவர்களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் காமெடி. அதே போல மாவீரனான ஸ்பைடர்மேனை வில்லன் புரட்டிப் புரட்டி எடுக்கிறான்.இப்படம் பார்த்த குழந்தைகளுக்கு இந்த கோடை விடுமுறை நீண்டகாலத்துக்கு நினைவில் நிற்கும்.