வீட்டுலேதான் நானும் அவனும் அப்பன் புள்ளை!



திடீர் தொடர் 4

சிவாஜி சார் பிடிவாதம் பிடிச்சி என்னை ‘கலாட்டா கல்யாணம்’ மூலமா இயக்குநரா நிலைநிறுத்தின விஷயத்தை போன வாரம் சொல்லியிருந்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு படம்னு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருந்தது.தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜிக்கு மற்ற மொழியில் வெற்றி பெற்ற படங்களை தமிழுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம்.

அம்மாதிரி அவருக்காக நான் இயக்கிய ரீமேக் படங்கள், கமர்ஷியலா பிரமாதமா போச்சு. அதுக்கப்புறம் ரீமேக் படம்னாலே, ‘சி.வி.ஆரை கூப்பிடுங்கப்பா. அவர்தான் தமிழுக்கு ஏத்தமாதிரி பக்காவா மாத்தி வேலை பார்ப்பாரு’ன்னு ஒரு பேரு இண்டஸ்ட்ரியில் உருவாகிடிச்சி. இதை நான் பெருமையா சொல்லலை. இப்படிப்பட்ட பேரு எடுத்ததில் எனக்கும் வருத்தம்தான்.

ஒரு கட்டத்துலே இனிமே ரீமேக்கே பண்ணக்கூடாதுன்னு சபதம்கூட போட்டேன். அந்த டைம்லேதான் கன்னடத்துலே ராஜ்குமார் சார் கூப்பிட்டாரு. அங்கே எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாமே அவர்தான். அவரோட சொந்தக் கம்பெனிக்காக படம் பண்ணணும்னு கேட்டுக்கிட்டாரு. அவருக்காக ‘திருமூர்த்தி’ன்னு ஒரு படம் பண்ணினேன். நல்ல படம்தான். ஆனா, கலெக்‌ஷன் சரியா ஆகலை.

இருந்தும், கன்னடத்துலேயும் நான் நல்ல டைரக்டர்னு பேரெடுத்தேன். தொடர்ந்து எனக்கு அங்கேயும் வாய்ப்புகள் வந்தது. ராஜ்குமார் சாரோட பிரெண்டுன்னு எனக்கு நல்ல மரியாதை. சிவாஜி சார் மாதிரியே அவரும் என்னோடு அன்பா பழகுவாரு. எனக்கு அந்த மண்ணோட ரசனை ஆரம்பத்துலே பிடிபடலை.

முதல்லே அங்கே வேலை செய்யுறப்போ எல்லாரும் என்னை, ‘தமிழ் டைரக்டர்’னு சொல்லித்தான் ப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. நான் வைராக்கியமா கன்னடம் கத்துக்கிட்டேன். மூணாவது படத்தின் பிரெஸ்மீட்டில் கன்னடத்திலேயே பொளந்து கட்டினேன். அதுக்கப்புறம் ரசிகர்கள் என்னையும் அவங்களில் ஒருத்தனா ஏத்துக்கிட்டாங்க.

ரொம்ப வருஷம் கன்னடத்துலே படம் பண்ணிட்டிருந்தேன். அப்பப்போ தமிழிலும் பண்ணுவேன். அந்த கேப்புலேதான் ரஜினி - கமலையெல்லாம் இயக்கினேன். தமிழுக்கு முழுமூச்சா திரும்ப வரணும்னு நெனைச்சாலும் நேரம் கிடைக்கலை. திரும்பவும் ஒரு வாய்ப்பு வந்தது. என்னோட சபதத்தை மீற வேண்டிய நிலைமையும் வந்தது. அதுதான் ‘வாழ்க்கை’. ராஜேஷ் கன்னா - சபனா ஆஸ்மி நடிச்சிருந்த ‘அவ்தார்’ என்கிற இந்திப் படத்தோட ரீமேக். செமத்தியா இங்கேயும் ஓடிச்சி.

நான் எப்பவுமே ரீமேக் பண்ணுறப்போ ஈயடிச்சான் காப்பி அடிக்கமாட்டேன். நம்ம ரசனைக்கு ஏத்தமாதிரி காட்சிகளை மாற்றியமைப்பேன். அதனாலேதான் ரீமேக் படங்களை தமிழில் செய்ய நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்காம என்னைக் கூப்பிடுவாங்க.பேச்சு சுவாரஸ்யத்துலே ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். சிவாஜி சாரோட பையன் பிரபுவை சினிமாவில் அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு எனக்குத்தான் கிடைச்சுது. அதைப்பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கறேன்.

சிவாஜி வீட்டுல அவரோட ரூமுக்குள்ள போகணும்னா, மத்தவங்க அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுத்தான் போவாங்க. நாலைஞ்சு பேர் மட்டுமே அவர்கிட்ட நெருங்க முடியும். நான் அப்போ சின்னப் பையனாட்டம் இருப்பேன். அதனால அவங்க ஃபேமிலியில ஒருத்தரா ஆனேன்.
அடிக்கடி அவங்க வீட்டுக்கு போகும் போது பிரபுவை பார்ப்பேன். துறுதுறுன்னு இருப்பார். ‘சங்கிலி’ படம் ஆரம்பிக்கும் போது சிவாஜிகிட்ட மெதுவா, “அண்ணே! பிரபுவை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்த விரும்புறேன்”னு சொன்னேன்.

உடனே என்னை ஏற இறங்க பார்த்தார்.... “அடப் போடா....! அந்த குண்டுப் பயலை நான் பெரிய போலீஸ்காரனா ஆக்கப்போறேண்டா. அவ்வளவு பெரிய உடம்பை வெச்சுக்கிட்டு அவன் சினிமாவுலே எதுக்கு நடிக்கணும்? மக்களுக்கு நேரடியா சேவை செய்யட்டும். ‘தங்கப் பதக்கம்’ படத்துலே நான் ஏத்து நடிச்ச கேரக்டரா, அவன் நிஜமாவே வாழப்போறாண்டா. சினிமாவெல்லாம் அவனுக்கு வேணாம்”னு கண்டிப்பா சொல்லிட்டாரு.

நான் என் முயற்சியைக் கைவிடலை. உடனே பிரபுவோட சித்தப்பா சண்முகத்துக்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். “தாராளமா அறிமுகப்படுத்துங்க”ன்னார். அதுக்குக் காரணம் இருக்கு. ஏன்னா, இந்தி நடிகை ஹேமமாலினி, ரேகா இவங்கள முதன் முதலில் நான் தான் போட்டோஷூட் எடுத்தேன். அதன்பிறகு அவங்க பாப்புலராகி, வரிசையா ஹிட் குடுத்தாங்க.

எனக்கு அப்படியொரு சென்டிமென்ட் சினிமாவில் உண்டு. சி.வி.ராஜேந்திரன் ராசியான ஆளுன்னு சொல்லுவாங்க. அந்த ராசியினாலதான் சண்முகம் எனக்கு ஓக்கே சொன்னாருனு நினைக்கிறேன். தம்பியோட பேச்சை என்னிக்குமே அண்ணன் சிவாஜி தட்ட மாட்டாரு. நான் ஷார்ட் ரூட்டுலே போய் பிரபுவை சினிமாவுக்குக் கொண்டு வந்தேன்.

‘சங்கிலி’யில் சிவாஜி, பிரபு ரெண்டு பேர் அறிமுகமாகும் காட்சியிலேயே ரெண்டு பேருக்கும் ஹீட்டான ஆர்க்யூமென்ட் வரும். அந்தக் காட்சிக்கு ரொம்பவுமே பவர்ஃபுல்லான டயலாக்குகள் இருந்தது. பிரபுவை அக்யூஸ் பண்ற மாதிரி டயலாக்குகளை ஃபோர்ஸா பேசிட்டிருந்தார் சிவாஜி.
“இப்படியெல்லாம் ரொம்ப ஃபோர்ஸ் வேணாம்ணா... பிரபு புதுமுகம். பயந்திடப்போறார்.... கொஞ்சம் குறைச்சுக்குங்கண்ணா”ன்னு சொன்னேன்.
உடனே என்னை பயங்கரமா முறைச்சார்.

“போடா.... டேய்.... எனக்கே நடிப்பு சொல்லிக் கொடுக்கறீயா? புதுமுகம்னு சொல்லிட்டு ‘பராசக்தி’யிலே எனக்கு கலைஞர் அவ்வளவு ஃபோர்ஸா டயலாக் எழுதிக் கொடுக்கலைன்னா, நானெல்லாம் இவ்வளவு பெரிய நடிகனா வந்திருக்க முடியுமா? அப்படியெல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்கவேகூடாது. வீட்லதான் நானும் அவனும் அப்பன் புள்ள.... இங்கே அவன் நடிகன்; நானும் நடிகன். அவன் என்னைத் தாண்டிடக் கூடாதுன்னு நான் போட்டி போட்டுக்கிட்டுதான் ஓடுவேன். முடிஞ்சா அவன் என்னை ஜெயிச்சிக்கட்டும். நான் அப்படித்தான்டா பேசுவேன்”னு ரொம்பவே சீரியஸா சொன்னார்.

அவர் சொன்னது மாதிரியே ஆவேசமாதான் நடிச்சார். சரி, இவர்கிட்ட நாம பேசி புண்ணியமில்லைனு முழுசா ஷூட் பண்ணிட்டேன். அப்புறம் எடிட்டிங்ல நான் நினைச்சது மாதிரி மாத்தினேன். சிவாஜியும் எடிட்டிங்கைப் பார்த்தார். ஆனா, என்கிட்ட எதுவும் கேட்கல. நானும் அதை ஞாபகப்படுத்தலை.

அவர் நடிப்பு விஷயத்தில் தீவிரமானவர். எதிரே நிற்கறது பையனா இருந்தாலும், சொந்த பந்தமா இருந்தாலும், அவருக்கு கேரக்டர் தான் முக்கியம். அப்படி ஒரு டெடிகேஷனானவர்.‘சங்கிலி’யும் ரொம்பவே நல்லா ஓடிச்சி...

எழுத்தாக்கம் :
மை.பாரதிராஜா
படங்கள் : ஆர்.சந்திரசேகர்
பழைய படங்கள்
உதவி : ஞானம்
(திரும்பிப் பார்ப்போம்)

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்