குட்டி தேவதைக்கு நல்வரவு!



‘தியா’ படத்தில் டைட்டில் ரோலில் நடித்த குட்டி தேவதை வெரோனிகா. கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்தான். இத்தனைக்கும் இதுவரை தமிழ்ப் படங்களில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்த சாய்பல்லவிக்கு இதுதான் முதல் நேரடி தமிழ்ப்படம். சாய்பல்லவியையே தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ஓவர்டேக் செய்துவிட்டார் வெரோனிகா.
‘தியா’ பட புரொமோஷனுக்காக தன் அம்மாவுடன் சென்னையில் தங்கியிருந்தவரை நேரில் சந்தித்தோம்.

“வணக்கம்” என்று தமிழிலேயே ஹலோ சொன்னார் இந்த அஞ்சு வயசு அழகி.தொடர்ந்து தமிழ் பேசத் தடுமாறியதால் மழலையான ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.‘‘என் பேர் வெரோனிகா. முதல் வகுப்பு படிக்கிறேன்.

டைரக்டர் விஜய் அங்கிள், சாய் பல்லவி அக்கா இரண்டு பேரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஜய் அங்கிள் எனக்கு நிறைய கிப்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்’’ பக்கத்தில் இருந்த பொம்மையோடு விளையாட ஆரம்பிக்கவே அருகிலிருந்த வெரோனிகாவின் அம்மா ருச்சிகா அரோரா நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘எங்களுக்கு சொந்த ஊர் டெல்லி. என் கணவர் பரிக் அரோரா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு வெரோனிகா ஒரே ஒரு மகள். வெரோனிகா என்றால் ‘வெற்றியைக் கொண்டுவருபவர்’. எங்கள் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு போன முதல் ஆள் வெரோனிகா மட்டுமே.வெரோனிகா கைக்குழந்தையாக இருக்கும்போதே நடிக்கும் வாய்ப்பு வந்தது.

உள்ளூர் விளம்பரங்களிலிருந்து நேஷனல் விளம்பரங்கள் வரை ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறாள். இப்போது பாரம்பரியமான டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வருவது என்னுடைய குழந்தைதான்’’ என்று பூரிப்புடன் தன் மகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தவர் தொடர்ந்து பேசினார்.

‘‘வெரோனிகா நடித்த ஒரு ரிசார்ட் விளம்பரம் மிகவும் பிரபலம். அந்த விளம்பரப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் ஏ.எல்.விஜய் சார் ஆபீஸிலிருந்து தொடர்பு கொண்டார்கள். நானும் என் கணவரும் விஜய் சாரை நேரில் சந்தித்தோம்.

ஒரேடியாக நாற்பது நாள் கால்ஷீட் கேட்டார்கள். சென்னை க்ளைமேட், உணவுப் பழக்கம் போன்ற விஷயங்கள் என் மகளுக்கு எந்தளவுக்கு செட்டாகும் என்று நானும் என் கணவரும் தயங்கினோம். எங்கள் குழப்பத்தையும் தயக்கத்தையும் புரிந்துகொண்ட இயக்குநர் விஜய், ‘நான் பார்த்துக்கிறேன்’ என்று கியாரண்டி கொடுத்தார்.

படமும் முடிந்து இப்போது ரிலீஸும் ஆகிவிட்டது. நாங்கள் ஏராளமான விளம்பரப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளோம்.‘தியா’ படப்பிடிப்பு அனுபவம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஸ்கிரிப்ட்டைப் பொறுத்தவரை வெரோனிகாவுக்கு டயலாக் கம்மி என்பதால் மொழி பிரச்னையில்லை. அதிகபட்சமாக எக்ஸ்பிரஷன்ஸ் காட்ட வேண்டும்.

அந்தக் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குநர் விஜய் குழந்தையின் மனசுல பதிவாகுமளவுக்கு மிகவும் பொறுமையாக நிதானமாக சொல்லிக் கொடுப்பார். சில சமயங்களில் நடித்தும் காண்பிப்பார்.அடுத்து, தமிழ் மக்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முகம் தெரியாத மனிதர்களாக இருந்தாலும் அன்பு காட்டுகிறார்கள். படக்குழுவினர் எங்கள் மீது காண்பித்த அன்பு அபரிமிதமானது.

வெரோனிகாவுக்கு எப்போதும் நான் ஹோம் மேட் ஃபுட்தான் கொடுப்பேன். ஓட்டல் உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். இதைத் தெரிந்துகொண்ட இயக்குநர் விஜய் எங்களுக்காக சிறப்பு சமையல் கலைஞரை ஏற்பாடு செய்துகொடுத்தார்.படத்தோட சம்பந்தப்பட்டவங்க அனைவரும் வெரோனிகாவை மகாராணி மாதிரி நடத்தினாங்க.

சாய்பல்லவிக்கு இந்தி தெரியும் என்பதால் இந்தியில் கம்பெனி கொடுப்பார். சில சமயம் விஜய், கேமராமேன் நீரவ்ஷா என்று யூனிட்ல உள்ளவங்க குழந்தை மாதிரி வெரோனிகாவுடன் விளையாடுவார்கள். ‘தியா’ பட அனுபவத்திலிருந்து மீண்டும் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

‘தியா’ படம் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் நிறையபேர் பாராட்டினாங்க. இன்னொரு மகிழ்ச்சியான செய்தி- இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் ஐடியா இருக்கு.

பொதுவா படிக்கிற பசங்க நடிக்க வரும்போது அவர்களுடைய படிப்பு கேள்விக் குறியாக இருக்கும். ஆனால் நாங்கள் சினிமாவுக்காக எங்கள் மகள் படிப்பை ஓரங்கட்டமாட்டோம். வெரோனிகா படிப்புல சுட்டி. வகுப்புல இவதான் முதல் ரேங்க் எடுப்பா. அதுக்கு முக்கிய காரணம் வெரோனிகாவோட டீச்சர்ஸ். இவளுக்காக ஸ்பெஷல் க்ளாஸ், எக்ஸ்ட்ரா க்ளாஸ் எடுப்பாங்க. நானும் வீட்டில் ஸ்பெஷலா கேர் எடுப்பேன்.

சினிமாவுக்காக படிப்பு விஷயத்தில் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. ஏன்னா, வெரோனிகாவுக்கு டாக்டர் ஆவதுதான் லட்சியம். நடிப்பு தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஹீரோயினாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சினிமாவோ படிப்போ, எங்கள் மகளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவோம்.’’

- சுரேஷ்ராஜா