வீரமும் ஈரமும் ஜாகுவார் தங்கம்



டைட்டில்ஸ் டாக் 64

தூத்துக்குடிதான் சொந்த ஊரு. இந்த ஊரு வீரத்துக்கும் ஈரத்துக்கும் பேர் போனதுன்னு உலகத்துக்கே தெரியும். அப்பா, அபாரமான சிலம்பு வீரர். சின்னக் குழந்தையா இருக்கிறப்பவே சிலம்பம், சுருள், கம்புச் சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை அப்பாவிடம் கத்துக்கிட்டேன். அண்ணன் சுயம்பு, அந்தக் காலத்துலே திருநெல்வேலி ஜில்லாவில் வீரத்துக்காக புகழ்பெற்றவர்.

எங்க காடு முழுக்கவே பனைமரம்தான். பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டுன்னு பனைசார்ந்த தொழிலை குடும்பத்தோடு செய்வோம். அஞ்சு வயசுலேயே இதுக்காக அப்பா, அம்மாவோடு காட்டுக்குப் போவேன். அப்பவே சின்ன அறுவா ஒண்ணை இடுப்புலே சொருகியிருப்பேன். ‘வீரமா இருக்கணும்’னுதான் அப்பா எப்பவுமே சொல்லிக்கிட்டிருப்பாரு.

குடும்ப மகிழ்ச்சி நீடிக்காம ரொம்ப சின்ன வயசுலேேய அப்பா, அம்மாவை இழந்துட்டேன். திருச்சியில் அக்கா வீட்டில்தான் வளர்ந்தேன். அங்கே ஒரு வாட்டி உறவுக்காரர் ஒருத்தரு அக்காவைத் தப்பா பேசிட்டாரு.

பொறுக்க முடியாம கோடாரியை எடுத்து ஒரு போடு போட்டேன். அவரோட கட்டைவிரல் சிதைஞ்சிடிச்சி. போலீஸ் என்னை புடிச்சிடுமோன்னு அச்சத்துலே ஓடி தலைமறைவாயிட்டேன். அந்த சம்பவத்துலே இருந்து, ‘டேய், உன்னைப் பார்க்க போலீஸ் வந்திருக்குடா’ன்னு அடிக்கடி அக்காகூட கிண்டல் பண்ணும்.

எனக்கு தற்காப்புக் கலைகள் குழந்தையிலேயே அறிமுகமானாலும் முறைப்படி திருச்சியில்தான் கத்துக்கிட்டேன். என்னோட நண்பர் துரை ஆச்சார்யாதான் இதுக்கு தூண்டுகோல். நான் சண்டை கத்துக்க தேர்ந்தெடுத்த மாஸ்டர், என்னை அவரோட வீட்டு முறைவாசல் வேலைகளுக்குதான் அதிகம் பயன்படுத்துக்கிட்டாரு. அதே நேரம், அவர் மத்தவங்களுக்கு கத்துக் கொடுக்குறதைப் பார்த்து நானே தனியா பயிற்சியும் பண்ணுவேன்.

ஒருமுறை என் மாஸ்டரை இன்னொருத்தர் வம்புக்கு இழுத்தார். அந்த ஆளோட மோதுவது தன்னோட வீரத்துக்கு இழுக்குன்னு மாஸ்டர் நெனைச்சார். “அந்த ஆளுகிட்டே மோதினா நான் ஜெயிச்சிடுவேன்”னு ஒருத்தர்கிட்டே நான் சொல்லிக்கிட்டிருந்ததை யதேச்சையா மாஸ்டர் கேட்டுட்டார். “உன்னாலே முடியும்னா, அவனைப் போய் அடிடா...”ன்னு க்ரீன் சிக்னல் கொடுத்தார். கம்பை சுத்திக்கிட்டே போய் அந்தாளை உண்டு, இல்லைன்னு ஆக்கிட்டேன்.

முறையாக கற்றுக் கொடுக்காமலேயே நான் சிலம்பு சுத்தின வேகத்தைப் பார்த்த மாஸ்டர், அதுக்கப்புறம் எனக்கு எல்லா நுணுக்கங்களையும் சொல்லித் தந்தாரு.  சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு,  தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள்,  வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார்,  பின்னுருட்டு, முன்னுருட்டு போல எழுபதுக்கும் மேற்பட்ட கம்பு சுத்துற முறை இருக்கு.

ஒத்தை சிலம்பு தடியை ரெண்டு கையாலும் பிடிச்சுக்கிட்டு சுழன்று அடிக்கிறது, ரெண்டு கையிலும் ரெண்டு கம்புகளை வெச்சுக்கிட்டு ஒரே நேரத்துலே சுத்துறதுன்னு சாகஸம் செய்யுறதுக்கு சிலம்பாட்டத்தைவிட பெரிய கலை வேறென்ன இருக்கு?

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணின்னு நிறைய ஆயுதப்பிரிவுகளும் உண்டு.

இதையெல்லாம் இந்தக் காலத்துப் பசங்க தெரிஞ்சிக்கிட்டா கராத்தே, குங்ஃபூ, ஜூடோவுக்கெல்லாம் தாத்தாவே நம்ம சிலம்பாட்டம்தான்னு ஒத்துப்பாங்க.ஒருமுறை போட்டி ஒண்ணுக்காக சென்னை வந்திருந்தோம். நடிகர் முத்துராமன்தான் சிறப்பு விருந்தினர். ஒரு மண்டபத்தில் தங்க இடம் கொடுத்திருந்தாங்க.

அங்கே இருந்த அரிசி குத்துற உலக்கையை எடுத்து நான் பயிற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ அங்கே வந்த வாட்டசாட்டமான மீசைக்காரர் ஒருத்தர் எங்க பயிற்சிகளை பார்த்துட்டு, “தம்பி, இதெல்லாம் உங்க ஊரு மாதிரி இல்லை. ரொம்ப வாலை ஆட்டினா ஒட்ட நறுக்கிடுவாங்க”ன்னு வெறுப்பேத்தினார்.

என்னை இப்படி உசுப்பேத்திட்டா மலையேறிடுவேன். “தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்க பார்த்துக்கலாம்”னு சவால் விட்டேன். கூட இருந்த சிநேகிதருங்க, “வந்த வேலையைப் பார்ப்போம். எதுக்கு இந்த தேவையில்லாத ஜம்பம்?”னு என்னை சமாதானப்படுத்த முயற்சி பண்ணாங்க. நான் விடலை.

சிலம்பம் சுத்தி முதுகிலே பொட்டு வெச்சா எட்டு பாயிண்டுன்னு கணக்கு. மீசைக்காரர் அவருக்குத் தெரிஞ்ச வித்தை மொத்தத்தையும் இறக்கினார். முதலிலே நான் வரிசை எடுக்காமே பதுங்கிட்டிருந்தேன். திடீர்னு பாய்ஞ்சு புயல் வேகத்துலே பதினஞ்சு வாட்டிக்கும் மேலே அவர் முதுகுலே பொட்டு வெச்சேன். பேஜார் ஆயிட்டார். பெரிய மனுஷனை மேலும் அசிங்கப்படுத்தக் கூடாதுன்னு விட்டுட்டேன்.

என்னோட கெட்ட நேரம். அவர்தான் போட்டி அமைப்பாளர். போட்டியிலே அவரோட கோபத்தைத் தீர்த்துக்கிட்டாரு. நான் எடுத்த பாயிண்ட்ஸையெல்லாம் சரியா கணக்குலேயே வெச்சுக்கலை. நாலு பாயிண்ட் எடுத்தா ரெண்டு பாயிண்ட்தான் போடுவாங்க. அப்படியும் நான்தான் லீடிங்கில் இருந்தேன். அப்போ, என்னோட போட்டியாளரு நான் விதிமுறையை மீறினதா நாடகம் ஆடி முதல் பரிசு வாங்கினார்.

இந்த அநியாயத்தையெல்லாம் நேரடியா பார்த்துக்கிட்டிருந்த முத்துராமன் சார், உடனே மேடையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஏற்பாட்டாளர்கள் அவரிடம் பதறிப்போய் சமாதானம் பேசினாங்க. அப்போ அவர் சொன்னார்.

“தங்கம்தான் சரியா சிலம்பு சுத்தினான். அவன்தான் ஜெயிச்சான். இது நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா, அவனைத் தோத்துட்டதா நீங்க அறிவிச்சதை நான் ஏத்துக்க முடியாது”ன்னு சொன்னாரு. வேற வழியில்லாமே எனக்கு முதல் பரிசைக் கொடுத்தாங்க.இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. அடுத்தவார ‘டைட்டில்ஸ் டாக்’கும் நான்தான்...

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா

(தொடரும்)