கே.ஆர்.விஜயாவை கவுரவிக்க வேண்டும்!



மன்சூரலிகான் கோரிக்கை

மன்சூரலிகான் என்றாலே எப்போதும் சர்ச்சைதான். சமீபத்தில் காவேரிக்காகப் போராடி கைதாகி வெளியில் வந்திருந்தார்.“அரசியல் பத்தி எதுவும் பேசாதீங்க; பேசுற மாதிரியா நாட்டு நடப்பு இருக்கு. இப்போ ‘கடமான் பாறை’ன்னு ஒரு படம் நடிச்சி இயக்கியிருக்கேன். காமெடி கலந்த காதல் கலவை. அதைப்பத்தி பேசுவோம்” என்று ஆரம்பித்தார்.

“டைட்டிலே புரியலையேண்ணே?”

“ஊரோட பேரு இது. தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தின்னு நாலு லேங்குவேஜில் எடுக்கிறேன். காலேஜ் பசங்களோட தான்தோன்றித்தனத்தோட இயல்புகளால் ஏற்படுகிற பிரச்சினைகள், அவங்களோட மனோபாவம் இதையெல்லாம் நகைச்சுவையா பிரதிபலிக்கிற படம். யங்ஸ்டர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“நட்சத்திரங்கள்?”

“என்னோட மகன் அலிகான் துக்ளக்கை அறிமுகப்படுத்துறேன். அனுராகவி, ஜெனிபெர்னாண்டஸ்னு ரெண்டு ஹீரோயின். எனக்கும் ருக்‌ஷான்னு ஒரு ஜோடி. சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், ‘லொள்ளுசபா’ மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ்னு நிறைய நட்சத்திரங்கள்.”

“உங்க பையனுக்காகவே கதை எழுதினீங்களா?”

“கதைக்குள்ளே அவரா வந்துட்டாரு. வீட்டுலே வெண்ணெயை வெச்சுகிட்டு, ரோட்டுலே எதுக்கு நெய்யுக்காக அலையணும். புதுமுகம் இருந்தாதான் இந்தக் கேரக்டர் எடுபடும்னு நெனைச்சேன். அதுக்கு  ஏத்த மாதிரி என் பையனே ஹீரோவா அமைஞ்சுட்டார். இத்தனை வருஷமா இண்டஸ்ட்ரியிலே இருக்குற என்னையே ஆச்சரியப்படுத்திட்டாரு. பத்து படம் பண்ண ஹீரோ கணக்கா செம்ம ஃபெர்பாமன்ஸ் கொடுத்திருக்காரு. ஏற்கனவே நான் தயாரிச்ச படங்களில் நிர்வாகம், கதை ஆலோசனைன்னு வேலை பார்த்தவருதான். டான்ஸ், சண்டை எல்லாத்தையும் முறைப்படி கத்துக்கிட்டிருக்காரு. காமெடி, ஆக்‌ஷன்னு எல்லா ஏரியாவிலும் கில்லியா என் பையன் அமைஞ்சது சந்தோஷம்.”

“கே.ஆர்.விஜயாதான் உங்க அம்மாவாக நடிக்கிறாராமே. அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?”

“இந்தப் படத்தில் கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது. அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார். ஏற்கனவே நான் தயாரிச்ச ‘வாழ்க ஜனநாயகம்’ படத்திலும் எனக்கு அம்மாவாக நடித்தார். அப்போ நான் வளர்ந்து வரும் நடிகன். அப்பவே நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார்.

இப்போ ‘கடமான் பாறை’ படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். சின்ன கம்பெனி பெரிய கம்பெனி என்று  பாரபட்சம் இல்லாமல் நடிக்கக்கூடியவர். கே.ஆர்.விஜயா மாதிரியான அற்புதமான கலைஞர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம். அவருடன் நடிக்கும் போது என்னை நானே புதுப்பித்துக் கொள்வேன். அவ்வளவு எனர்ஜிடிக்கா ஒர்க் பண்ணியிருக்காங்க. காலங்கள் கடந்து போனாலும் அவருடைய புன்னகை இம்மியளவும் குறையவில்லை.

ஆனால் கோடம்பாக்கத்தில் அவருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த வயதிலும் காட்சிகளை அழகாக உள்வாங்கி நடிக்கிறார். அவர் என் படத்தில் நடிப்பதை என் பாக்யமாக கருதுகிறேன்.

முன்னணி நடிகர்கள் படத்தில் கே.ஆர்.விஜயா அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஏனோ, அவருடைய கால்ஷீட்டை வாங்குவதற்கு கோடம்பாக்கம் தவறுகிறது. கே.ஆர்.விஜயா போன்ற மூத்த கலைஞர்களை கவுரவிக்க வேண்டிய கடமை தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது.
அவர் பணத்துக்காக நடிக்க வரவில்லை.

அவருடைய வீட்ல நட்சத்திர ஓட்டலில் இருக்கும் சகல வசதியுடன்தான் வாழ்ந்து வருகிறார். அவருடைய வீட்ல லிப்ட் உள்பட நவீன வசதிகள் உள்ளது. இந்தப் படத்தில் ஒருசில காட்சிகளை இரண்டாவது மாடியில் எடுத்தோம். சிரமம் பார்க்காமல் மாடிப்படி ஏறி நடித்தார். இளம் வயது நாயகிகளைவிட அதிக சிரத்தை எடுத்து நடித்தார். இப்போதுள்ள கலைஞர்கள் அவருடன் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அவருடைய சாதனைகளை கவுரவிக்கும் விதத்தில் மாநில, மத்திய அரசுகள் உயரிய விருதுகள் கொடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மாபெரும் கலைஞர்களுடன் நடித்தவர். அவர் திறமைக்கு வாழும் காலத்தில் மரியாதை செய்வதுதான் அவருக்கான அங்கீகாரமாக இருக்கும். அதற்கான ஆயத்த வேலைகளை நடிகர் சங்கம் போன்ற சங்கங்கள் செய்வதற்கு  முன் வரவேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், மனோரமா ஆச்சியை அப்படித்தான் கவுரவிக்காமல் தவறிவிட்டோம். அதுபோல் இனி நடக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.”

“படத்துல என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?”

“இந்தப் படம் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போடும் படம் என்றும், இதுவரை சொல்லப்படாத கதை என்றும் சொல்ல மாட்டேன். இந்தப் படத்தை பார்க்கக்கூடாது என்றும் சொல்லமாட்டேன். தியேட்டருக்கு வந்து பாருங்க என்றும் கட்டாயம் கூறமாட்டேன். மோசமான படமா என்றால் என் பதில் ‘ஆம்’ என்பதுதான்.  

இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்லமாட்டேன். என்னுடைய கதாநாயகன் பிறரை பின்பற்றக்கூடியவன் கிடையாது. பிறகு ஏன் படம் எடுக்கிறீர்கள் என்றால், சினிமா என் தொழில், என் பிழைப்பு. மக்கள் கெட்டுப் போகக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் எடுக்கிறேன்
அரசாங்கத்துக்கு மக்களை பாதுகாக்கும் கடமை இருக்கு. ஆனால் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்று சொல்லி வியாபாரம் நடத்துகிறார்கள். அதுபோல்தான் என்னுடைய படம்.”

“டெக்னீஷியன்கள்?”

“மகேஷ் கேமரா பண்ணியிருக்கிறார். சீனியர் டெக்னீஷியன். ரவிவர்மா இசை. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும்.   ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா ஆகியோருடன் சேர்ந்து நானும் பாடல் எழுதியுள்ளேன். ராக்கி ராஜேஷ் சண்டைக் காட்சிகள் பண்ணியிருக்கிறார்.”

- சுரேஷ்ராஜா