பக்கா



டோனி ரசிகருக்கு ரூட்டு போடும் ரஜினி ரசிகை!

எல்லா ஹீரோக்களுக்குமே இரட்டை வேடம் என்பது கனவு. விக்ரம் பிரபுவும் தன்னுடைய கனவை ‘பக்கா’வாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.பலூன் வியாபாரியான விக்ரமை எப்படியும் மணந்தே தீர்வது என்று வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பிந்து மாதவி. டோனி ரசிகரான இன்னொரு விக்ரம் பிரபுவை அநியாயத்துக்குக் கலாய்க்கிறார் ரஜினி ரசிகையான நிக்கி கல்ராணி. கீரியும் பாம்பும் மாதிரியாக மோதிக் கொள்ளும் அவர்களுக்கிடையே ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.

பிந்து மாதவியின் லட்சியம் நிறைவேறியதா, நிக்கி கல்ராணி தன் காதலனுடன் சேர்ந்து வாழ முடிந்ததா என்பதை பரபர திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘பக்கா’.இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விக்ரம் பிரபுவிடம் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. பிந்து மாதவியை தேடும்போதும், நிக்கி கல்ராணியை வம்புக்கு இழுக்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களில் வரும் பண்ணையார் மகளின் டெம்ப்ளேட் காட்சிகளில் அச்சு பிசகாமல் பிந்து மாதவி வந்து போகிறார். அழகை வெளிப்படுத்திய அளவுக்கு இந்தப் படத்தில் அவர் ஆளுமையைக் காட்டவில்லை.

படத்தின் மெயின் அட்ராக்‌ஷனாக நிக்கி கல்ராணியைச் சொல்லலாம். லேட்டாக வந்தாலும் மொத்த படமும் தன் கன்ட்ரோலுக்கு வருமளவுக்கு கவர்ச்சி நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். ரஜினியின் சில காட்சிகளை இமிட்டேட் பண்ணும் போது தியேட்டரில் விசில் சத்தத்தைக் கேட்க முடிகிறது.

சூரி, சதீஷ் இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ரவி மரியா, இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, வையாபுரி, சாய் தீனா மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் சிவகுமார் ஆகியோரும் படத்தில் ‘யெஸ் சார்’ போடுகிறார்கள்.சி.சத்யா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வித்தியாசத்தைக் காட்டுகிறது. ‘ஓல வீடு நல்லால்ல’ பாடல் ஒன்ஸ் மோர் ரகம்.

ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் படத்தின் மிகப் பெரிய பலம். திருவிழா காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்கு காட்சி கூட்டம் கூட்டமாக இருந்தாலும் அழகாக படம் பிடித்திருக்கிறார். மிராக்கிள் மைக்கேல் சண்டைக் காட்சியில் தெறிக்க விடுகிறார்.
எல்லா காட்சிகளும் சினிமா மரபுப்படி இருந்தாலும் பக்கா திரைக்கதை மூலம் கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா.