சாஸ்தா கோயில் சம்படி ஆட்டம்!



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்களுக்கு சாஸ்தா கோயில் ரொம்பவும் பிரபலம். இப்பகுதிகளில்தான் இந்தக் கோயில்களை அதிகமாகக் காணமுடியும். இந்த சாஸ்தா கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பரியேறும் பெருமாள் என்பது பெயர். குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊர்வலம் வருவதால் இந்தப் பெயரால் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ், ‘பரியேறும் பெருமாள்’ என்ற தலைப்பில் படம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ முதல் வெளிவர இருக்கும் ‘பேரன்பு’ வரைக்கும் அவரிடம்  இணை இயக்குநராக பணியாற்றிய மாரிசெல்வராஜ், ‘பரியேறும் பெருமாள்’ மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், ‘மறக்கவே நினைக்கிறேன்’ என்கிற வார இதழ்த் தொடர் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளர்தான் மாரி செல்வராஜ்.

“முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும், அது உருவாக்கக்கூடிய பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்” என்கிறார் இயக்குநர் மாரி.செல்வராஜ்.

பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க, சக மாணவியாக ஜோதிகா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் தலா இரண்டு  பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இருவரும் சேர்ந்தும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்கள்.

ஊர் மக்கள் எடுத்துக்கொடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நெல்லை வட்டார இசைக்கருவிகளுடன் மாடர்ன் இன்ஸ்ட்ருமென்ட்களையும் பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் மூன்று பேர் சினிமாப்பாடகர்களாக அறிமுகமாகிறார்கள்.

திருநெல்வேலி சட்டக்கல்லூரி மற்றும் இயக்குநரின் சொந்த ஊரான புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 45 நாட்களில்  படம் முடிந்திருக்கிறது.  படப்பிடிப்பு நடந்த அதே சட்டக்கல்லூரியில் படித்தவர் என்பதால் சில உண்மைச் சம்பவங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.ஏழு ஆண்கள் பெண் வேடமிட்டு நடனமாடும் சம்படி ஆட்டம் சாஸ்தா கோயில்களில் பிரபலம்.

பாடகர் அந்தோணிதாசன் சில வருடங்களுக்கு முன்  இந்த ஆட்டத்தை நடத்தியவர். இப்போது இயக்குநரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்படத்தில் ஆடியிருக்கிறார். ஊர்த்திருவிழா காட்சியில் இந்த ஆட்டமும் பாடலும் இடம் பெறுகிறது. கருப்பி என அழைக்கப்படும் சிப்பிப்பாறை நாய் முக்கிய கதாபாத்திரமாக வருகிறதாம். இயக்குநர் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்பதால் ஊர் மக்கள் பாசத்தோடு பழகி உடன் நடித்தார்களாம்.

- நெல்பா