முத்தம் கொடுக்க யோசிக்கிறார் மாளவிகா!



சேச்சி தேசத்து வரவுகளில் அசலான மலையாள முகம் கொண்டவர் மாளவிகா மேனன். ‘விழா’வில் அறிமுகமானவர், ‘அருவா சண்ட’ படம் மூலமாக விஸ்வரூபம் எடுக்கிறார். தமிழ், மலையாளம் என்று கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பவரை வாட்ஸப் காலில் பிடித்தோம்.“ஃபேஸ்புக்தான் உங்களை சினிமாவுக்கு அழைத்து வந்ததுன்னு சொல்றாங்களே?”

“ஆமாம். பிறந்தது வளர்ந்தது எல்லாமே கேரளாவில் உள்ள திரிச்சூர் அருகில் இருக்கும் ஒரு கிராமம். அப்பா, அம்மா, நான், தம்பி என்று அழகான க்யூட் குடும்பம். நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எட்டாவது படிக்கும்போது சினிமா ஆசை மெதுவாகத் துளிர்த்தது.ஃபேஸ்புக் மூலம் மலையாள இயக்குநர் சித்தார்த் பரதனின் நட்பு கிடைத்தது. ‘நடிப்புல ஆர்வம் இருக்கா’ என்று கேட்டார்.

விளையாட்டாக என் போட்டோவை அனுப்பி வைத்தேன். ஒரு நாள் ‘புதுப் படத்துக்கான ஆடிஷன் நடக்குது. கலந்துக்க முடியுமா’ என்று கேட்டார். அந்த ஆடிஷனில் என்னைப் பார்த்ததும் இயக்குநர் ‘ஷாக்’கானார். காரணம், நான் நேர்ல ரொம்ப சின்ன பெண்ணா இருந்ததுதான்.

எனக்காக திருமணமான பெண் கேரக்டர் வைத்திருந்தார். நேரில் என்னைப் பார்த்ததும் வேறு ஒரு கேரக்டர் கொடுத்தார். இப்படித்தான் என்னுடைய சினிமா பிரவேசம் நடைபெற்றது. மலையாளத்தில் சில படங்கள் நடிக்க ஆரம்பித்ததும் தமிழில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. ‘விழா’ என்னுடைய முதல் படம். அந்தப் படத்துக்குப் பிறகு ‘இவன் வேற மாதிரி’, ‘பிரம்மன்’, உட்பட ஐந்து படங்கள் முடித்துவிட்டேன்.”

“இப்போ நடிக்கிற ‘அருவா சண்ட’ படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?”

 “இதில் கல்லூரி மாணவியா வர்றேன். என்னுடைய கேரக்டர் பெயர் ரம்யா. கல்லூரி மாணவி கேரக்டர் என்பது வழக்கமான கேரக்டர் மாதிரி தெரிந்தாலும் நடிப்புல ஸ்கோர் பண்ணக்கூடிய கேரக்டர். ஹீரோவுக்கும் எனக்குமான ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கும். இந்தக் கதையை நான் செலக்ட் பண்ண இரண்டு காரணங்கள் இருந்தது.

விளையாட்டை மையமாக வைத்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்து கதை. இயக்குநர் ஆதிராஜன் கதை சொன்னதுமே எனக்குப் பிடித்திருந்தது. படம் முழுவதும் ஹீரோயினுக்கான முக்கியத்துவம் இருப்பதை ஃபீல் பண்ண முடிந்தது. எனக்கு மட்டுமில்ல, படத்துல வர்ற எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தது.”

“உங்கள் டீம்ல என்ன சொல்றாங்க?”

“சினிமா கேரியரைப் பொறுத்தவரை ஹீரோ ராஜாவுக்கு இதுதான் முதல் படம். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். நடிகர், தயாரிப்பாளர் என்று கூடுதல் சுமை இருந்தாலும் இரண்டையும் பேலன்ஸ் பண்ணி இந்த ப்ராஜக்ட்டை கம்ப்ளீட் பண்ணினார்.
ஸ்கிரீன்ல எந்த இடத்திலும் முதல் பட ஹீரோ மாதிரியே தெரியமாட்டார். பாடல் காட்சியில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க அவருடைய மெனக்கெடலைப் பார்க்கமுடியும். சினிமாவுக்கான அனைத்துத் திறமைகளையும் வளர்த்துக் கொண்டுதான் கேமரா முன் நின்றார்.

என் ஹீரோ நல்லா நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கு நான் பெரிய நடிகை இல்லை. ஆனால் என்னுடைய சின்ன அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் நடிகருக்கான முழுத் தகுதி ராஜாவிடம் இருக்கு.

இயக்குநர் ஆதிராஜன் சார் பற்றி சொல்லவே தேவையில்லை. ‘சிலந்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவர். முதன் முதலாக டிஜிட்டல் படத்தை எடுத்த முன்னோடிகளில் ஒருவர். செட்லயும் சரி, செட்டுக்கு வெளியேவும் சரி ஆதிராஜன் சார் அமைதியின் வடிவம்னு சொல்லலாம். அதிகம் பேசமாட்டார்.

கதைக்கு என்ன மாதிரியான நடிப்பு வேண்டும் என்பதை நடிகர்களிடம் பக்காவாக வாங்கிவிடுவார். அதே சமயம் ஒரு ஆர்ட்டிஸ்ட் தங்கள் திறமையை வெளியே கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரம் கொடுப்பார். நடிகர், நடிகையிடம் உள்ள முழுத் திறமையையும் வெளியே கொண்டு வருவதற்கு முயற்சி எடுப்பார். சில சமயம் நாம் இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்று நினைப்பேன். அந்த மாதிரி சமயங்களில் நம்முடைய சந்தேகங்களை சரியாகத் தீர்த்து வைத்து நல்ல எக்ஸ்பிரஷன்ஸ் வெளிவருவதற்கு உதவியாக இருப்பார்.”

“ஒரே சமயத்தில் நடிப்பும், படிப்பும். கஷ்டமா இல்லையா?”

“சின்ன வயதில் நடிகையாகணும்னு ஆசைப்பட்டதில்லை. ஒரு கட்டத்தில் வீட்ல என்னோட ஆசையைத் தெரிஞ்சுகிட்டவுடனே யாரும் தடைபோடவில்லை. அதே சமயம் படிக்கவும் விரும்பினேன். அதான் கல்லூரிப் படிப்பையும் தொடர்றேன். இப்போ பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். வீட்ல இருந்தால் என்னை புத்தகத்தோடுதான் பார்க்க முடியும். சில நண்பர்கள் நோட்ஸ் கொடுத்து உதவுகிறார்கள்.”

“முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?”

“நான் தமிழுக்கு வந்ததுமே சொன்னாங்க, ‘வண்ணத்திரை’ ரிப்போர்ட்டர்களிடம் எச்சரிக்கையா பேசுன்னு சொல்லி. அது சரியாகத்தான் இருக்கு. பேட்டி ஆரம்பிச்சி இவ்வளவு நேரம் ஆகுதே, இந்தக் கேள்வி ஏன் இன்னும் வரலைன்னு நினைத்தேன். கரெக்ட்டா கேட்கிறீங்க. லிப் லாக் அளவுக்கு போகமாட்டேன். கதைக்கு தேவையில்லாத பட்சத்தில் முத்தக்காட்சி வந்தால் அது கதைக்கே பின்னடைவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ரொமான்ஸ் ஸ்டோரி அல்லது கதைக்கு முக்கியம் இருந்தால் முத்தக்காட்சியில் நடிப்பதைப் பற்றி யோசிப்பேன்.”

“நடிப்பை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?”

“யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அதுவா வந்தது. மூவிஸ் பண்ண, பண்ண பிக்கப் பண்ண ஆரம்பித்துவிட்டேன்.”
“கனவு வேடம் ஏதாவது...?”

“முன்னாடி கேட்டிருந்தா முழிச்சிருப்பேன். ‘பாகுபலி’க்கு அப்புறம் எனக்கு மட்டுமில்லை, எல்லா நடிகைகளுக்குமே அனுஷ்கா அந்தப் படத்துலே பண்ண மாதிரி கேரக்டர் பண்ணணும்னு ஆசை.”“சினிமாவுல யாரை போட்டியாக பார்க்கிறீர்கள்?”

“இது போட்டி நிறைந்த உலகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனக்கு யாரும் போட்டி இல்லை. இதுவரை அப்படி யாரையும் பார்க்கலை.”
“நீங்க வீட்ல எப்படி?”“நிஜத்தில் நான் ரொம்பவே அமைதியான டைப். எனக்கு நண்பர்கள் வட்டாரம் மிகவும் குறைவு. அநாவசியமா யாருடனும் அரட்டை அடிக்கமாட்டேன். நடிக்க வந்தபிறகு கொஞ்சம் தைரியம் வந்துள்ளதாக நினைக்கிறேன். ஏன்னா, இப்போது என் தைரியத்தைப் பார்த்து என் அம்மாவே ஆச்சர்யப்படுகிறார்.”

“நடிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம்?”

“நடனம் பிடிக்கும். இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்டேஜ் ஷோ பண்றேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் புதுப் புது டிஷ் செய்து வீட்ல இருக்கிறவர்களை அசத்துவேன்.”

- சுரேஷ்ராஜா