நண்பேன்டா சித்ரா லட்சுமணன்



டைட்டில்ஸ் டாக் 58

சென்ற வாரத் தொடர்ச்சி


பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ பெரிய ஹிட். அடுத்தடுத்து அவருடன் பணிபுரிந்த பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் படம் இயக்குவதற்கு சென்றுவிட்டதால் பாரதிராஜாவுக்கு நம்பிக்கைக்குரிய உதவி இயக்குநர் தேவைப்பட்டார். என்னை உதவி இயக்குநராக சேருமாறு அழைத்தார்.

அப்போது நான் ரொம்ப பிஸி. பி.ஆர்.ஓவாக கணிசமான தொகை சம்பளமாக  கிடைத்தது. உதவி இயக்குநராகப் போய்விட்டால் சம்பளம் பெரியளவில் இருக்காது என்று தெரியும். பொருளாதார ரீதியில் எனக்கு பெரிய இழப்பு ஏற்படும். பாரதிராஜாவுக்கு முன் என் பொருளாதாரக் கணக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

ஏன்னா, அப்போது பாரதிராஜா புகழின் உச்சியில் இருந்தார். அவரிடம் ஒரு படத்திலாவது உதவி இயக்குநராக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்காதா என்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவருடைய அலுவலகத்தை தினமும் வட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கோ அதிர்ஷ்டம் தேடி வந்து கதவைத் தட்டியது. ‘அலைகள் ஓய்வதில்லை’ உட்பட ஏராளமான படங்களில் அவரிடம் உதவி இயக்குநராக வேலை செய்தேன். ஓர் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் வேலை செய்தாலும், ‘16 வயதினிலே’ படம் பார்த்ததிலிருந்தே பாரதிராஜாவை இயக்கவைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று எனக்கு உள்ளூர ஆசை.

‘கிழக்கே போகும் ரயில்’ படப்பிடிப்பின்போது ஐந்தாயிரம் அட்வான்ஸும் கொடுத்தேன். பாரதிராஜாவுக்கு அது இரண்டாவது படம். முதல் படத்தில் நடித்த கமல் பெரிய ஹீரோ என்பதால் தைரியமாக இருந்தார்.

ஆனால், இரண்டாவது படத்தில் சுதாகர், ராதிகா என்று எல்லாமே புதுமுகங்கள். அந்தக் காரணத்தால் தொண்ணூற்று ஐந்து சதவீதம் படம் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் ஐந்து சதவீதம் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். எனவே, என்னிடம் அட்வான்ஸ் வாங்க தயங்கினார்.

அப்போது, ‘‘படம் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் நீங்கள்தான் இயக்குநர்’’ என்று கூறி வற்புறுத்தி அட்வான்ஸைகையிலே திணித்தேன்.‘கிழக்கே போகும் ரயில்’ பெரிய ஹிட். அடுத்தடுத்து அவரை வைத்து படம் எடுக்க பட அதிபர்கள் முற்றுகையிட்டார்கள்.

என்னுடைய படத்தை பத்து, பன்னிரெண்டு படங்களுக்குப் பிறகுதான் பாரதிராஜாவால் இயக்க முடிந்தது. அப்படி நான் முதன்முதலாகத் தயாரித்த படம்தான் ‘மண் வாசனை’. ஓர் உதவி இயக்குநர், தான் பணிபுரியும் இயக்குநருக்கு தயாரிப்பாளரானார் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அந்தப் படத்துக்கு பைனானஸ் வாங்கிக் கொடுத்தவர் பஞ்சு அருணாசலம். அவருடைய உதவி இல்லாமல் அந்தப் படம் வெளிவந்திருக்காது. அதன்பிறகு சிவாஜி நடித்த ‘வாழ்க்கை’, சிவாஜி - சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ உட்பட பதினைந்து படங்கள் தயாரித்தேன். கமல் நடித்த ‘சூரசம்ஹாரம்’, ‘பெரிய தம்பி’ போன்ற படங்களை இயக்கினேன்.

பத்திரிகை, சினிமா, தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகம் காண்பித்த நான் இப்போது பிஸி நடிகனாக மாறியதற்குக் காரணமும் நண்பர்கள்தான். நடிகனாக நான் நடித்த முதல் படம் ‘ஜப்பானில் கல்யாணராமன்’. அந்தக் காலக்கட்டங்களில் நிறைய படங்கள் நடித்தாலும் பிரபலமாகவில்லை. எல்லாருக்கும் கவுண்டமணியைத் தெரியும்.

ஆனால் அவர்கூட நடித்த என்னைத் தெரியாது. அதுபோன்ற நிலையில்தான் அப்போது இருந்தேன்.வெகுகாலம் கழித்து ஒரு நடிகனாக எனக்கு திருப்பு முனை ஏற்படுத்திக் கொடுத்த படம் சிவசக்தி பிக்சர்ஸ் சீனிவாசன் சிவா தயாரித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. எச்.முரளி, டி.சிவா என நண்பர்கள் தயாரித்த படங்களில் நடித்தேன்.

இளைய தலைமுறைக்கு என் முகம் தெரிகிறது என்றால் அதற்குக் காரணம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம்தான். அந்தப் படத்தில் சந்தானம் என்னை ‘மங்குஸ் மண்டையா’ என்ற அடைமொழியோடு கூப்பிடுவார். அந்த டயலாக்தான் என்னை இப்போதுள்ள யங் ஜெனரேஷனிடம் கொண்டு போய்ச் சேர்த்தது.

நான் என்னவாகவெல்லாம் ஆனேனோ அத்தனையும் நண்பர்களால்தான்.என்னைப் பொறுத்தவரை நட்பு என்பது எல்லோரும் பேணிக் காக்கவேண்டிய விஷயம். இன்னொரு முக்கியமான விஷயம், நட்பு என்பது நண்பர்கள் என்ன பேசினாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளர்த்தம் இல்லாமல் ராவாகப் பேசுவதுதான் நட்பு.

நல்ல நட்பு எனும்போது யோசிக்காமல் பேச வேண்டும். இப்படி பேசினால் தப்பாக எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்தால் அது உண்மையான நட்பாக இருக்க முடியாது. பட்டை தீட்டப்படாத வைரம்தான் ஒரிஜினல் வைரம்.

அதுபோல்தான் நட்பும் உண்மையாக இருக்க வேண்டும். வார்த்தைகளை அளந்து பேசும்போது அழகிற்காக பல பரிமாணங்களாக வெட்டப்படும் வைரம் போல்தான் அந்த நட்பு மேலோட்டமாக ஜொலிக்கும். நண்பர்களே! நட்பை பேணிக் காப்போம்!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)