காதல் பலியாடு பழிவாங்கும் கதை!



ஒரு காலத்தில் ஓர் இயக்குநர் நல்ல கதையை யோசித்து, அதற்கு திரைக்கதை எழுதி பவுண்டட் ஸ்க்ரிப்டாக உருவாக்கி ஒவ்வொரு தயாரிப்பாளர் அலுவலகத்துக்கும் படியேறி, தயாரிப்பாளரை திருப்திப்படுத்தி, ஹீரோவுக்கு கதை சொல்லி ஒரு படத்தை எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

காலம் ரொம்பவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் வாட்ஸப்பில் ஹீரோவுக்கு கதையின் ஒன்லைனரை அனுப்புகிறார்கள். அல்லது ஃபேஸ்புக்கில் மெசேஜ் செய்கிறார்கள். ஹீரோவும் மற்றபடி எதையும் யோசிக்காமல் ஒரு வரியில் ‘ஓக்கே’ என்று ரிப்ளை செய்துவிடுகிறார். அதற்குப் பிறகுதான் தயாரிப்பாளரையே தேடுகிறார்கள்.

அபிசரவணன் நடிக்கும் ‘வெற்றிமாறன்’ படத்தின் கதையை போனிலேயே சொல்லி ஓக்கே செய்தாராம் இயக்குநர் மனோ.
லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சுல்பிகர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஹீரோயின் புதுமுகம் வினோலியா. முக்கிய வேடத்தில் தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு குணசேகரன். இசை டேவிட் கிறிஸ்டோபர்.

‘‘இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால்தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கக் கிளம்பினால் எப்படியிருக்கும் என்பதுதான் கதை.

இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறேன். பழிவாங்கும் யுக்திகள் புதுசா இருக்கும். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த பழிவாங்கும் படலத்தில் தந்தை, மகன் பாசப்போராட்டத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லியுள்ளேன்’’ என்கிறார் இயக்குநர் மனோ.

- சுரேஷ்