சங்குசக்கரம்



சங்குசக்கர பேய் ஒண்ணு ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது!

குழந்தைகளைக் கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார் திலீப் சுப்பராயன்.  ‘தனியாக ஒரு பங்களா இருக்கிறது, அங்கே சென்றால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று சொல்லி அந்தக் குழந்தைகளை பேய் பங்களாவுக்கு வர வைக்கிறார். இந்தப் பிரச்னையில் நிஜப் பேயே கலந்துகொள்வதால் ஏற்படும் குழப்பங்கள்தான் ‘சங்கு சக்கரம்’.

இதுவரை வில்லனாக நடித்து வந்த திலீப் சுப்பராயன் காமெடியில் கலக்கியிருக்கிறார். பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டு அவர் காட்டும் தவிப்பை ரசிக்கலாம். ‘புன்னகை  பூ’ கீதா, அழகான பேயாக மிரட்டுகிறார். ‘பசங்க’ படத்தைப்  போலவே, இதிலும்  கேள்வியாகக் கேட்டு பேயையே பயந்து ஓட வைக்கிறார் நிஷேஷ்.

சபீர் தபாரே அலாமின் மிரட்டும் பின்னணி இசை படத்திற்கு பலத்தைக் கூட்டியிருக்கிறது. ஜி.ரவி கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நிறைவாக உள்ளன. எந்தப் பேயும் பணத்தை கொள்ளை அடிப்பதில்லை, கொலையும் செய்வதில்லை.

மனிதர்கள் தான் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு பேயின்மீது பழி போடுகிறார்கள் எனும் கருத்தை குடும்பத்துடன் பார்க்கும் படமாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் மாரிசன்.