சலிக்க சலிக்க காமம்..விடிய விடிய ஹோமம்!



சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. அயல்நாட்டு படங்களில் பச்சை பச்சையாக அமையும் காட்சிகள் சகஜம். அந்த திரைப்படங்களை பார்த்துவிட்டு சிறுபத்திரிகைகள் என்று சொல்லப்படுகிற இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்படும் விமர்சனங்களை வாசித்தால், நாம் பார்த்த படங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்களா என்கிற கருத்து மயக்கம் ஏற்படுகிறது.

மிகவும் சாதாரண படங்களைக்கூட உலகத்தரமான படமாக எழுத்துகளை ஜாங்கிரியாகப் பிழிந்து விமர்சனத்தால் மாற்றும் வித்தையை இந்த சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எங்குதான் கற்றார்களோ?

நம்மூர் பிட்டு படம் ஒன்றை இம்மாதிரி சர்வதேசத்தரத்தில் விமர்சித்துப் பார்த்தால் என்னவென்ற விபரீத யோசனையின் விளைவே இந்தக் கட்டுரை. படத்தின் பெயர் : ‘மது, மங்கை, மயக்கம்’. எப்போது வெளியானது, யார் நடித்தது? என்பதெல்லாம் நினைவில்லை. பரங்கிமலை ஜோதியில் பார்த்தோம் என்பது மட்டுமே நினைவில் இருக்கிறது. இதை ஓர் உலகப்படமாக உருவகித்துக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறோம்.
ஓக்கே. விமர்சனத்துக்கு செல்வோம்...

* * *
‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களைக் காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்குக் கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்திய பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியைப் பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும், வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணமான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப்படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில்திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *
காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல, விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.இந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி யான ஒளியமைப்பும், படத்தொகுப்பா ளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.ஒரு கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை, மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாகச் சேர்த்து பெருங் கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.

* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்தக் காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையைப் பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்தத் திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் சுட்டுவதைப் போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல; பாலியலை மிகைபுனைவாகக் கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைத்தான்.ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடச் சொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார் கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

- யுவகிருஷ்ணா