மதுர இயக்குநர் மாதேஷ்



டைட்டில்ஸ் டாக் 49

எனக்கு சொந்த ஊர் சேலம். ஆனால் எனக்கு மட்டுமில்ல, தமிழ்நாட்ல பிறந்த எல்லாருக்கும் மதுரை மீது தனிப்பாசம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர். பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றனர்.

கல்வியின் சிறப்பை பாண்டியர்கள் போல் எவரும் நடைமுறைப்படுத்தியதில்லை.  ‘செந்தமிழ்நாடு’ என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள், கம்பர், சேக்கிழார் போன்ற புலவர் பெருமக்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம், திருக்குறள் அரங்கேற்றப்பட்டது மதுரை மண்ணில்தான் என்று வரலாறு சொல்கிறது.

பாண்டியர்களின் காலத்தில் நீதி தவறாது செங்கோல் முறை கெடாது ஆட்சி நடந்தது. நீதியை நிலைநாட்டுவதற்காக பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான். பொற்கைப் பாண்டியன், நீதிக்கு தலைவணங்கி தன் கையை வெட்டிக் கொண்டான். இப்படி படிப்புக்கும், பண்புக்கும், நீதிக்கும் புகழ்பெற்ற தளமாக விளங்குவது மதுரை.

சினிமாவில் நாம் பார்க்கும் மதுரைக்கும், நிஜத்தில் பார்க்கும் மதுரைக்கும் ரொம்ப தூரம்.விஜய் சாரை வைத்து நான் இயக்கிய படம் ‘மதுர’. அந்தப் படத்துக்காக நான் ஒன்றிரண்டு டைட்டில்களை விஜய் சாரிடம் சொன்னேன். அவரிடம் ‘மதுர’ என்று சொன்னதும், இதையே தலைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றார். பொதுவா விஜய் சார் ஆல் கிளாஸ் ஆடியன்ஸுக்கான ஹீரோ.

அதுபோல மதுரையை பல்வேறு இன மக்கள், பல மொழிகளைக் கொண்ட மக்கள் என எல்லாம் சேர்ந்த கலவையாகப் பார்க்கலாம். தெலுங்கானாவுக்கு எப்படி சார்மினார் ஒரு அடையாளமோ அதுபோல் தமிழ்நாட்டுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் மதுரையைத்தான் சொல்லணும்.

இறைவழிபாடு, கல்வி, வீரம், பாசம் என போலித்தனம் இல்லாத மண்வாசத்துக்கு அடையாளமாக மதுரையை சொல்லலாம். பொதுவா திரைப்படங்களில் மதுரைக்காரர்களைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போது பாசக்கார பசங்க என்று டயலாக் வரும். அது நூற்றுக்கு நூறு நிஜம்.

ஏன்னா, அந்த மண்ணில் நான் பிறக்காவிட்டாலும் அந்த மண்ணில் பிறந்தவர்களிடம் நான் பழகியிருக்கிறேன். அவர்களுடைய அன்பில் கலப்பு இருக்காது. வீரம், இலக்கியம் என எந்தத் துறை எடுத்தாலும் மதுரைக்கு தனி அடையாளம் உண்டு. fullfil the life என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த மாதிரி நிறைவான வாழ்க்கையை வாழ்பவர்கள் மதுரைக்காரர்கள்.

சினிமாவைப் பொறுத்தவரை மதுரையை ஒதுக்கிவிட்டு படம் பண்ணமுடியாது. அழகான கிராமத்து வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும் என்றால் மதுரைக்குத்தான் போக வேண்டும். சில படங்களில் கதை ஆரம்பிக்கும்போதே ஹீரோ மதுரையில் இருந்து கிளம்பி வருவது மாதிரி காட்சிகள் இருக்கும். அந்தளவுக்கு மதுரை சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்து வைத்துள்ளது.

‘ஜென்டில்மேன்’ படத்தில் நான் உதவி இயக்குநர். அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக மதுரைக்குப் போனோம். ‘காதலன்’ படத்திலும் சில காட்சிகளை மதுரையில் படம் பிடித்தோம். ‘முதல்வன்’ படத்திலும் ஒரு பாடல் காட்சியை மதுரையில் எடுத்தோம். நேட்டிவிட்டியைச் சொல்ல வேண்டும் என்றால் மதுரைதான் ஆகச்சிறந்த களமாக இருக்கும்.

ஓர் இயக்குநராக நான் பல ஊர்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் மதுரைக்குப் போகும் போது மட்டும் என் நாவில் உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்துவிடும். அதற்குக் காரணம் கோனார் மெஸ் அசைவ வகைகள், அம்மா மெஸ்ஸில் கிடைக்கும் கோலா உருண்டை. சொல்லப் போனால் சில சமயம் எங்கள் ரூட்டில் மதுரை இடம்பெறவில்லை என்றாலும் சாப்பாட்டுக்காகவே மதுரைக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி டிராவல் ப்ளான் போடுவோம்.

மதுரைக்காரர்கள் பாசக்காரப் பசங்க. சுக துக்கங்களில் பாசத்தைக் கொட்டித் தீர்ப்பார்கள். கூப்பிடும்போதே மாப்ளே, பங்காளி என்று உறவுமுறைகளைச் சொல்லி அழைப்பார்கள். காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சடங்குகளில் உறவுக்காரர்களின் உண்மையான பாசத்தின் நீள அகலத்தைத் தெரிந்து கொள்ள முடியும். ஏழையாக இருந்தாலும் செய்முறை என்று வரும்போது உறவுக்காரர்களை விட்டுக்கொடுக்காத அவர்களின் பாசம் எனக்கு மட்டுமில்ல, அதைக் காண்பவர்களுக்கும் தனி மரியாதையைக் கொடுக்கும்.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பங்களுக்கு கொடுப்பதில்லை. ஆனால் மதுரை மாதிரியான இடங்களில் ஃபேமிலிக்குத் தான் முன்னுரிமை. அதன்பிறகு தான் பணம், பதவி.

மனம் சோர்வாக இருக்கும் போதும் சரி, சந்தோஷமாக இருக்கும்போது சரி, மதுரைக்கு ஒரு டிரிப் அடித்தால் கவலைகள் பறந்து ஓடிவிடும் என்பது என் அனுபவம்.  இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லலாம்.பூவுக்கு எப்படி விளம்பரம் தேவையில்லையோ அது போலத்தான் மதுரையின்  புகழும்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)