விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்சிலை உயிர் பெற்றால்?

பழங்கால சிலை ஒன்றுக்கு கவிதை பாடினால் உயிர் வருகிறது. அழகிய பெண்ணாக மாறுகிறது. யார் அந்தப் பெண், அவள் ஏன் சிலை ஆனாள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது திரைக்கதை.குறுகிய காலத்துக்குள் செட்டிலாக வேண்டும் என்ற  ஆசை உள்ள  கதாநாயகனாக நாக அன்வேஷ் நடித்திருக்கிறார். அவரது துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கின்றன. தேவலோகத்து அழகியாகவும், பூலோக நற்குணம் கொண்ட பெண்ணாகவும் ஹேபா பட்டேல் நடித்திருக்கிறார்.

அழகையும் அளவான நடிப்பையும் காட்டியிருக்கிறார். நண்பராக வரும் சப்தகிரியின் நடை, உடை, பாவனைகள்  கொஞ்சமாக  சிரிக்க வைக்கின்றன.  நாயகியின் அப்பாவாக சுமன், சிலை கடத்தும் ஷாயாஜி ஷிண்டே ஆகியோரும் தங்களது வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

வி.பிரபாகரின் வசனம் இந்தப் படத்துக்கு பெரிய பலம். பீம்ஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார். குணாவின் ஒளிப்பதிவு நிறைவாக இருக்கிறது. தேவலோகம் மற்றும் கருடச்சண்டைக் காட்சிகள் சிறப்பு. கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி ‘பாகுபலி’ படத்தில் ராஜமெளலியின் உதவியாளராக இருந்தவர். மினிமம் பட்ஜெட்டிலேயே பிரமாண்டம் காட்டி குருநாதருக்கு மரியாதை செய்திருக்கிறார்.