பெரியபாளையத்து காதலர்கள்!



“சென்னைக்கு பக்கத்துல இருக்கிற பெரியபாளையம்தான் எனக்கு சொந்த ஊர். உலகம் உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில் இப்போது காதலுக்கான அர்த்தமே மாறிவிட்டது. ஆனால் எங்க ஊர்ப்பக்கம் மாதிரி உள்ள கிராமங்களில் உண்மையான காதலர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

என்னை சந்திக்கும் நண்பர்கள் யாராவது என்னுடைய ஊர் எது என்று கேட்கும் போது ‘சென்னை பக்கத்துல’ என்றுதான் சொல்வேன். அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் கதைக்கும் ஏற்றமாதிரியான தலைப்பாகவும் இருந்தது’’ என்று ஆரம்பித்தார் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் இயக்குநர் வேலன்.

“கிராமத்துக் கதையா?”

“கிராமத்துப் பின்னணியில் உருவாகும் அன்பு, பாசம், நேசம், காதல், மோதல், கோபம், தவிப்பு, துயரம் என வாழ்க்கையின் எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கமர்ஷியல் கலந்த கதை.  கிராமத்தில் நான் பார்த்த நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள், காதலர்கள் இவர்களைப் பற்றி இதில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.

இந்தக் கதை என் ரத்தத்தோடு ரத்தமாக கலந்த கதை. சின்ன வயசுலேருந்து என் செவி வழியாக நான் கேட்டவை, பார்த்தவை என எல்லாத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறேன். அடிப்படையில் கிராமவாசி என்பதால் எளிய மக்களின் லைஃப் ஸ்டைலை அப்படியே சினிமாவுக்கு கொண்டு வந்துள்ளேன்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் வாட்ஸப், ஃபேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்களில் காதல் மிகவும் கேவலமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் இன்னும் கிராமப்புறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான் இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஆமோதிக்கும் வகையில் சொல்லியுள்ளேன்.

அதுமட்டுமில்ல, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறிவரும் சூழ்நிலையில் விவசாயத்தின் அவசியத்தையும் சொல்லியுள்ளேன். இளைஞர்கள், ஃபேமிலி என்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். படத்தோட ஹைலைட்டான விஷயம் க்ளைமாக்ஸ். யாருமே எதிர்பார்க்காத க்ளைமாஸாக இருக்கும். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்த இடங்களில் இது போன்ற படங்கள் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்றார்கள். அதே ஃபீலிங் ரசிகர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.”

“புதுமுக ஹீரோவுடன் வேலை பார்த்த அனுபவம்?”

“நாயகன் சீனுவுக்கு இதுதான் முதல் படம். என்னுடைய அனுபவத்தில் பல பெரிய ஹீரோக்கள் படங்களில் வேலை பார்த்துள்ளேன். பெரிய நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிடலாம். இந்தப் படத்தையும் படப்பிடிப்பு தொடங்கி ஒரே மூச்சாக முடித்தோம். ஹீரோவின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை நிறைவு செய்திருக்க முடியாது. கிராமத்துல இருக்கும் யதார்த்தமான இளைஞனாக வர்றார். ஹீரோயிசத்துக்காக தனியாக பில்டப் காட்சிகள் எதுவும் இருக்காது. பெரிய நடிகர்களே தயங்கும் காட்சிகளில்கூட துணிச்சலாக நடித்திருக்கிறார்.”

“ஹீரோயின்?”

“ஹீரோயின் கிடைப்பதுதான் இப்போ கஷ்டம். நிறைய பேரை பரிசீலித்து கடைசியாக கமலியை ஓக்கே பண்ணினோம். நாலைந்து படங்கள் பண்ணியிருப்பதாக சொன்னார். ஆனால் கணக்குப்படி அவருக்கு முதலில் ரிலீஸாகவுள்ள படம் இதுதான். கிராமத்துப் பெண்ணுக்குரிய குறும்பு, அழகு, வெட்கம், நளினம் என்று முழுமையான கேரக்டர்ல வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பாடகர் மாணிக்க விநாயகம்தான்  படத்தோட தூண். விவசாயியாக வாழ்ந்திருக்கிறார். இவர்களோடு அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வாசு விக்ரம், நெல்லை சிவா, கிங்காங்னு நிறைய பேர் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த தி பெஸ்ட் நடிப்பை கொடுத்தார்கள்.”

“பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கே?”

“ஆடியோ ஃபங்ஷனுக்கு வந்த வி.ஐ.பிகளும் இதையேதான் சொன்னார்கள். எங்களை மாதிரி சின்ன படங்களையும் ஞாபகம் வைத்து பாராட்டுவதற்கு நன்றி. இந்த யூனிட்ல இருக்கிற டெக்னீஷியன்கள் அனைவரும் என்னுடைய பத்து வருட கால நண்பர்கள்.

இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷன். இவர் ஏற்கனவே ‘திருட்டு விசிடி’, ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ போன்ற படங்கள் பண்ணியவர். அனைத்துப் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன். கானா பாலா பாடியுள்ள ‘பாத்தாலே டால் அடிக்கும்’ பாடல் இந்த ஆண்டின் முதல் கானா பாடலாக ஹிட்டடிக்கும்.

ஒளிப்பதிவாளர் மகிபாலன் அரை செஞ்சுரி அடித்தவர். நம்ம படத்துலே பொட்டல் காடுகளை அழகாகக் காட்டியிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் தீனா வேலைன்னு வந்துட்டா சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கமாட்டார். ஒரு பாடல் காட்சியை வேலூர் அருகே இருக்கும் ஒரு மலை மீது எடுத்தோம். ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்தால்தான் உச்சியை அடைய முடியும்.

அவர் மேலே வந்து சேர்ந்த போது டி-ஷர்ட்டை தண்ணீரில் அலசிய மாதிரி பிழிந்தெடுத்தார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரமாதமா சப்போர்ட் பண்ணினார். அவர் மட்டுமில்ல, இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் பணத்தைத் தாண்டி தங்கள் படம் போல் வேலை பார்த்தார்கள்.

தயாரிப்பாளர் தெய்வானை. கதை சொல்லும் போது ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு இயக்குநராகவும்  ஆரம்பித்த எங்கள் ரிலேஷன்ஷிப் படம் முடியும்போது  அக்கா, தம்பி என்று சொல்லுமளவுக்கு மாறியது. அவருடைய பேனருக்கு இதுதான் முதல் படம் என்றாலும் தாராளமாக செலவு பண்ணியிருக்கிறார்.”

“உங்க பின்னணி?”

“சினிமா பின்னணி, பொருளாதார வசதி எதுவும் இல்லை. படிப்பு முடிந்ததும் சென்னையில் உள்ள ஒரு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை, இயக்கம் என்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே டிகிரி வாங்கினேன். ஏராளமான படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன். என்னுடைய முதல் படத்தை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் குடும்பத்தோடு பார்க்கும்படி பண்ணியிருக்கிறேன். இனி என் வாழ்க்கை ரசிகர்கள் கையில்தான் உள்ளது.”

- சுரேஷ்ராஜா