விதி மதி ultaaகனவு நிஜமானால்?

நாயகன் ரமீஸ் ராஜாவின் கனவில் நடக்கும் விபரீத சம்பவங்கள் அத்தனையும் நிஜத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது. கனவில் கண்ட விபரீதங்கள் நிஜத்தில் நடப்பதைத் தடுத்தாரா இல்லையா என்பதே கதை.

நாயகனாக நடித்திருக்கும் ரமீஸ் ராஜா துறுதுறுப்பான  நடிப்பால், ரசிகர்களைக் கவர்கிறார். நடனம், காதல், போலீசிடம் அடிவாங்குதல் என நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி யிருக்கிறார் டேனியல் பாலாஜி. கருணாகரன் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். சென்ராயன், ஞானப்பிரகாசம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘தாறுமாறா...’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது. நாளை நடக்க இருக்கும் தீமைகளைக் கனவில் கண்டு அதை தடுக்கத் துடிக்கும் இளைஞனின் கதையை காமெடி கலந்து  கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் பாலாஜி.