‘மதுர வீரன்’ யார் தெரியுமா?தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் ‘பூ’, ‘சகுனி’, ‘சேட்டை’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘சண்டி வீரன்’ உள்பட ஏராளமான படங்களை அழகாக காண்பித்தவர் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. இப்போது ‘மதுர வீரன்’ படத்தின் மூலம் இயக்குநராக புரொமோஷன் வாங்கியிருக்கிறார். ரிலீஸ் பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.

“டைட்டிலே சும்மா தெறிக்குதே?”

“நாலைந்து ஊரைச் சேர்ந்தவங்க ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். அதில் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், அதை எப்படி அவர்கள் எதிர்கொள்கிறார்கள், ஹீரோவுக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? பிரச்சனைகளில் இருந்து ஹீரோ எப்படி வெளியே வருகிறார் என்பதையெல்லாம் யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.

அதுக்காக இது ஜல்லிக்கட்டு விளையாடுபவர்களின் வாழ்வியல்  சார்ந்த படமா என்றால் அதுவும் கிடையாது. ஜல்லிக்கட்டு விளையாட்டை களமாக வைத்து ஜனரஞ்சகமான ஒரு படத்தை கொடுத்துள்ளோம்.”

“உங்க ஹீரோ என்ன சொல்றாரு?”

“இந்தக் கதைக்கு மதுரை பின்புலம், மதுரை வட்டார மொழி தெரிந்த ஹீரோ, இருபது, இருபத்தைந்து வயதுள்ள ஒரு இளைஞன் லுக்ல ஹீரோ இருக்கணும் என்று நினைத்தேன். அடுத்து உயரமா, வாட்டசாட்டமா இருக்கணும் என்று நினைத்தேன். அப்படி ஒரு ஹீரோவா கேப்டன் மகன் சண்முகபாண்டியன் இருந்தார்.

ஸ்க்ரீன்லே நல்லா இருக்கிறார். மாஸான ஹீரோவா தெரிவார். ஊர்ப்பக்கம் இதுமாதிரி நிறைய ஆளுங்களைப் பார்க்கலாம். பக்கா திராவிட தோற்றம். கதைக்கு ஏற்ற மாதிரி அவரை யூஸ் பண்ணிக் கொண்டேன். டயலாக் விஷயத்திலும் அவர் எப்படி டெலிவரி பண்ணுவாரோ அப்படியே பண்ண சொன்னேன்.

ஆடியோ ஃபங்ஷன்ல பிரேமலதா மேடம் ஒரு விஷயத்தை சொன்னாங்க. தயவு செய்து கேப்டனுடன் இவரை கம்பேர் பண்ணாதீங்க. கேப்டன் நூறு படங்கள் பண்ணியவர். இவர் இப்பதான் வர்றார் என்றார். அதுதான் உண்மை. கேப்டனையும் இவரையும் வைத்து பார்க்கும் போது ஆக்ரோஷமான காட்சிகளில் கேப்டனின் கன்னம் சிவக்கும், கோபம் கொப்பளிக்கும்.

புருவம் உயரும். அது அப்படியே சண்முகபாண்டியனிடமும் இருக்கிறது.சண்முகபாண்டியனை கமிட் பண்ணும்போது பிரேமலதா மேடம் என்னிடம், கேப்டன் நேர நிர்வாக விஷயத்தில் கரெக்ட்டா இருப்பார். அதை விட என் பையன் பங்க்சுவாலிட்டியை மெயின்டெயின் பண்ணுவார் என்றார். சில இடங்களில் ரூம் வசதி சரியாக இருக்காது. சண்முக பாண்டியன் நினைத்திருந்தால் கேரவன் கேட்டிருக்கலாம்.

நாங்களும் மறுக்காமல் செய்திருப்போம். ஆனால் அவர் அதை பெரிதுபடுத்தவில்லை. எல்லா இடத்திலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். பெரிய வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் எளிமையாக நடந்து கொண்டார். இந்தக் கதையை ஒரு பெரிய ஹீரோவிடம் கொண்டு போயிருந்தால் சில இடங்களில் டயலாக் பேசவே யோசித்திருப்பார்கள். சண்முக பாண்டியனை வைத்து பண்ணியது சந்தோஷமே.”

“ஹீரோயின்?”

“நாயகி மீனாட்சிக்கு இதுதான் முதல் படம். சண்முக பாண்டியன் உயரத்துக்கு ஹீரோயின் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு கட்டத்தில் புதுமுகமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். புதுமுகமாக இருந்ததால் நான் நினைத்ததை எடுக்கக்கூடிய சுதந்திரம் இருந்தது. கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். பாடலுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் யதார்த்தமான கேரக்டராக இருக்கும்.”

“சமுத்திரக்கனி?”

“படத்துலே ‘மதுர வீரன்’ அவர்தான். கதையின் முதுகெலும்பு கேரக்டர். ஹீரோ உட்பட பெரும்பாலான கேரக்டர்ஸ் அவரை மையமாக வைத்துதான் பின்னப்பட்டிருக்கும். கனி சார் ‘நாடோடிகள்’ படத்தை தெலுங்கில் பண்ணியபோது நான்தான் கேமரா பண்ணினேன். அப்போதே எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டு. 

கதை சொன்னதும் ‘முத்து நல்லா இருக்கே’ என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தை, ‘என் அண்ணன் கேப்டன். அவர் குடும்பத்திலிருந்து ஒருத்தர் வரணும். நான் பண்றேன்’ என்றார். வேல ராமமூர்த்தி, தேனப்பன், மாரிமுத்து, மைம் கோபின்னு படத்துல நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“ஏழு பாடல்கள். செமயா வந்திருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு மண்வாசம் மிக்க பாடல்களை எங்க படத்துல கேட்கலாம். சந்தோஷ் தயாநிதி இசையில் பிரமாதப்படுத்தி இருக்காரு. படத்துல இரண்டு இடத்தில்தான் சண்டைக் காட்சிகள் வருது.  கேப்டன் படங்களில் சண்டை பிரதானமாக இருக்கும். ‘இறுதிச் சுற்று’ சாம் ஸ்டண்ட் பண்ணியிருக்கிறார்.

கேப்டனிடம் கதை சொல்லப் போனபோது அவர் என்ன கதைன்னு கூட கேட்கலை, ‘யார் பைட் மாஸ்டர்?’ என்றுதான் கேட்டார். இவர் பேரை சொன்னதும்,  ‘தம்பிக்கு இப்போதே ரிகர்சல் கொடுக்க ஆரம்பிச்சுடுங்க’ என்றார். கேப்டன் ரசிகர்களைத் தாண்டி எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தும்விதமாக ஆக்‌ஷனில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்  சண்முக பாண்டியன்.

எடிட்டிங் ப்ரவீன் கே.எல். பண்ணியிருக்கிறார். ஓர் எடிட்டராக அவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். எல்லா இயக்குநரும் ஸ்கிப்ரிட்ல இருக்கிறது திரையிலும் இருக்கணும் என்று நினைப்பார்கள். இதில் அதுவாகவே அப்படியே அமைந்தது. தயாரிப்பாளர் சுப்பு சார் பற்றியும் சொல்ல வேண்டும். நானும் அவரும் இணைந்து பல படங்களில் வேலை பார்த்துள்ளோம். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ போன்ற படங்களில் சுப்பு சார் தயாரிப்பு நிர்வாகி. நான் கேமராமேன். இந்தக் கதையை சஜஷனுக்காக அவரிடம் கொடுத்தேன். படிச்சபிறகு அவரே தயாரிக்க முன்வந்தார். முதல் நாள் முதல் இப்போதுவரை மிகப் பெரிய ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்.”

“ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளரே இயக்குநராகவும் வேலை செய்வது எப்படி இருக்கிறது?”

“இந்த விஷயத்தை வித்தியாசம் என்பதைத் தாண்டி ஒரு வரப்பிரசாதமாக பார்க்கிறேன். பாலுமகேந்திரா, ஜீவா போன்ற என் முன்னோடிகள் இந்த விஷயத்தை எப்படி என்ஜாய் பண்ணியிருப்பார்கள் என்று நான் வேலை பண்ணும்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்குமோ  என்று நினைத்தேன். நண்பர்களும் வேறு ஒரு கேமராமேனை போடலாம் என்றார்கள். இரண்டுல ஒண்ணு பார்ப்போம் என்று துணிந்து இறங்கினேன். நான் நினைச்ச மாதிரி இல்ல. டபுள் டூட்டி எளிதாக இருந்தது. எதுவும் கஷ்டமாகத் தெரியலை.”
“அடுத்து?”

“டைரக்‌ஷன்தான். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்கள் முடிவாகும். வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால் இந்தப் படத்தோட வெற்றி தோல்விதான் அதை தீர்மானிக்கும். வெற்றி கிடைத்தால் நாலு பேர் கூப்பிடுவாங்க. இல்லைன்னா கேமரா பண்ணுவதற்குக் கூட கூப்பிடமாட்டாங்க.”

- சுரேஷ்ராஜா