தாராவி பவித்ரன்



டைட்டில்ஸ் டாக் 39

சென்ற இதழ் தொடர்ச்சி...


தாராவியில் வாழும் தமிழர்கள் இன்றள வும் திருநெல்வேலி நேட்டிவிட்டி மாறாமல் சமையல் கலையில் சிறந்து விளங்குவது என்பது அந்த மக்களின் மண் பாசத்தை காண்பிக்கக்கூடியதாக இருக்கிறது. சென்னையிலும் ஒருசில திருநெல்வேலி ஓட்டல்கள் இயங்கி வருகின்றன.

‘வசந்தகால பறவை’, ‘சூரியன்’, ‘இந்து’ போன்ற படங்களை இயக்கியபோது பாடல் கம்போஸிங் சமயத்தில் நானும் தேனிசைத் தென்றல் தேவா சாரும் திருநெல்வேலி மணம் கமழும் ஓட்டல்களில் சாப்பிட்ட அனுபவம் உண்டு.

தாராவியில் தார்ச்சாலைகளில் இறங்கி வேலை செய்த மூத்தக்குடிகள், தங்கள் பிள்ளைகளை டாக்டர், என்ஜினியர், வக்கீல் என்று பல்துறை வித்தகர்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.  என்னுடைய நண்பர் தன்னுடைய இரண்டு மகள்களையும் மெடிக்கலுக்கு படிக்க வைத்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நண்பர் ஒருவரின் மகள் இந்திய அளவில் சார்ட்டட் அக்கவுன்டன்சி தேர்வில் முதலிடத்தை பிடித்தார்.

அப்படி அந்தஸ்திலும் ஆஸ்தியிலும் உயர்ந்துள்ள இளம் தலைமுறையினர் நவி மும்பையில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி வசிப்பது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை.

தாராவியில் எனக்கு வியக்கத்தக்க விஷயங்கள் பல இருந்தாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை அவர்கள் பின்பற்றுவதை இங்கு சொல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து பல மைல்கள் தூரம் பிரிந்து இருந்தாலும் தமிழ்நாட்டு கலாச்சாரத்தை நம்மைவிட மிகச் சிறப்பாகப் போற்றி வருகிறார்கள். நான் அங்கு போயிருந்த சமயம் பொங்கல் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அப்படி ஒரு கொண்டாட்டத்தை தமிழ்நாட்டில் கூட பார்த்ததில்லை.

தெருவெங்கும் பொங்கல் பானையை வைத்து புத்தாடை அணிந்து சாமி கும்பிடும் அந்தக் காட்சிகள் பரவசத்தைக் கொடுக்கும்.  விழாக்காலங்களில் 90 அடி ரோடு ஜெகஜோதியாக இருக்கும். நூற்றுக்கணக்கில் கரும்பு லாரிகள் வரிசைகட்டி நிற்கும்.

பொங்கல் மட்டுமல்ல, தமிழர்களின் எல்லா விழாக்களையும் கலாச்சாரச் சீரழிவு இல்லாமல் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.  அவர்களின் பெருமையை, உழைப்பை ஏனோ நம் தமிழ் சினிமா முறையாகப் பதிவு செய்யவில்லை. அதன் காரணமாகவே என்னுடைய படத்துக்கு ‘தாராவி’ என்று டைட்டில் வைத்து அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறேன்.

வெளியில் இருந்து பார்க்கும்போது தாராவி என்றால் அடிதடிக்கு புகழ் பெற்ற ஏரியா என்ற தோற்றம் இருக்கும். அதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால் அந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைமில் இருந்தது. இப்போது அப்படி இல்லை. எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள்.

 காட்டுக்குள் எப்படி முயல், மான் போன்ற விலங்கினங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி எடுப்பதும், தங்களுக்கு இரையாக வேண்டும் என்று புலி, சிங்கம் போன்ற விலங்கினங்களும் இருக்கிறதோ அதுமாதிரிதான் நாம் வாழும் சமுதாயத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

தாராவி என்றதும் ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஞாபகத்துக்கு வருவார்கள். உண்மையில் இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் காட் ஃபாதர்கள். தமிழர்கள் என்றில்லை, உதவி என்று யார் அபயமிட்டாலும் அன்னமிட்ட கைகளாக அவர்களை சேஃப்டி பண்ணியிருக்கிறார்கள்.

கமல் சார் நடித்த ‘நாயகன்’ படத்தின் சில காட்சிகள் தாராவியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘காலா’ படத்தின் சில காட்சிகளும் தாராவியில் படமாக்கப்பட்டுள்ளது.தாராவியில் ஐம்பது சதுரடி போன்ற சின்ன காலி இடத்தை பார்க்கவே முடியாது. அதை வியாபார ஸ்தலமாக மாற்றிவிடுகிறார்கள்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்  என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி விட்டுச் சென் றார். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு கைத்தொழில் தெரியும்.

இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு ஜப்பான். ஆனால் அதன் கடின உழைப்புக்குப்  பிறகு இன்றுவரை உலக அரங்கில் பணக்கார நாடுகள் பட்டியலில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். இதற்குக் காரணம் அவர்களின் தொழில் வளர்ச்சி.

எந்த வளமும் இல்லாத அந்த நாட்டில் எப்படி இந்த வளர்ச்சி? ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். நம் நாட்டில் இறக்குமதி ஆகும் ஜப்பானிய பொருட்களில் சில அவர்கள் வீட்டில் தயாரித்த ஒன்றாகக்கூட இருக்கலாம்.

அதைப்போல் இன்று நீங்கள் உடுத்திக்கொண்டிருக்கும் ஜீன்ஸ் உடைகளோ அல்லது பிற ஆடைகளோ தாராவியில் தமிழர்களின் வீடுகளில் தயாரான ஆடையாக இருக்கலாம். அந்தளவுக்கு தாராவியில் தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.

பெரிய கான்கிரீட் கட்டடங்கள் போன்ற வசதிகள் இல்லாமல் குடிசைத் தொழிலாக வீட்டுக்கு வீடு இந்த வியாபாரம் பண்ணி வருகிறார்கள். இன்றைய தேதியில் தாராவி தமிழர்கள் உழைத்து கெளரவமாக வாழ்கிறார்கள். தாராவியில் உள்ள தமிழர்களை உடன் பிறவா சகோதர, சகோதரிகள் போல் மராத்தியர்கள் நேசிக்கிறார்கள். நம் தமிழர்கள் இப்போது அங்கு மண்ணின் மைந்தர்கள் மாதிரி இருக்கிறார்கள்.

தாராவிக்கு போய் யாராவது சிவப்பு எனக்கும் பிடிக்கும் என்று சொன்னால் கண்டம் துண்டமாக வெட்டிப் போடுவார்கள். அதற்கு மும்பையில் தனி ஏரியா இருக்கிறது. அதற்கு லைசென்ஸ், போலீஸ் பாதுகாப்பு என்று சட்ட பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கிறது.தாராவி ஒரு நகரமா, கிராமமா என்று கேட்பதை விட தாராவி தமிழர்கள் நிர்மாணித்த ஒரு நிலப்பகுதி.

மணல் திட்டுக்களாக இருந்த நிலத்தை நம் மக்கள்தான் மாற்றினார்கள். மீன்பிடி பகுதியாக மட்டும் இருந்து வந்த பகுதியை தமிழர்கள் தங்கள் உழைப்பால் குடியிருப்புப் பகுதியாக மாற்றினார்கள்.தாராவியில் இருக்கும் தமிழர்களுக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக தாராவிக்கு வருவார்கள். ஓரளவுக்கு பொருள் ஈட்டியதும் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். பிறகு அடுத்த தலைமுறை வரும். இது அங்கு ரெகுலராக நடக்கும் விஷயம்.ஆனால் தாராவி தமிழர்கள் அப்படி அல்ல, தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்பவர்கள்.

நான்கைந்து தலைமுறையாக அங்கேயே வாழ்வதால் சிலருக்கு தங்கள் பூர்வீகம், உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ற விபரங்கள் கூட தெரியாது. சிலர் தாங்கள் ஈட்டிய பொருளை வைத்து தமிழ்நாட்டில் உள்ள உறவுகளைக் காப்பாற்றி வருகிறார்கள். என்னுடைய பார்வையில் டெல்லி தமிழர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல தாராவி தமிழர்கள்.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய தேசிய கட்சியாக இருந்தாலும் தாராவி தமிழர்களின் ஆதரவு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.  தாராவி பகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியும், ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்வு செய்யும் சக்தியும் உண்டு.  இன்றைய தேதியில் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

அப்படி புலம் பெயர்ந்த தமிழர்கள் செஷல்ஸ் தீவு, பர்மா போன்ற நாடுகளை நிர்மாணித்தார்கள்  என்பது தான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை. அந்த வகையில் உழைப்பு இருந்தால் எந்த இடத்திலும் போய் வெற்றிக் கொடி நாட்டலாம் என்பதற்கு தாராவி மக்கள் சிறந்த உதாரண புருஷர்கள். வாழ்க தமிழினம்! வளர்க தமிழர்கள்!

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)