படமாகுது எம்.ஜி.ஆர் கதை!
‘காமராஜ்’, ‘முதல்வர் மகாத்மா’ போன்ற படங்களைத் தயாரித்த அ.பாலகிருஷ்ணன் தற்போது எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்.‘‘சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை மூன்று பருவங்களாகப் பிரித்து திரைக்கதை எழுதியிருக்கிறேன்.
என்னுடைய முந்தைய படைப்புகளான ‘காமராஜ்’, ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர். அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் அதிக கவனம் செலுத்தினேன்.
எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான பருவத்தில் சதீஷ் குமார் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அண்ணாவாக ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்த எஸ்.எஸ். ஸ்டான்லி நடிக்கிறார். ‘காமராஜ்’ படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இந்தப் படத்திற்கும் எழுதியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை இதில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தவுள்ளேன். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மட்டுமில்லாமல். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படம் பிரம்மாண்டமாக இருக்கும்’’ என்கிறார் அ.பாலகிருஷ்ணன்.
- எஸ்
|