காற்றை காசு கொடுத்து வாங்கவேண்டியிருக்கும்!



எச்சரிக்கிறார் ‘மரகதக்காடு’ இயக்குநர்!

அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கும் படம் ‘மரகதக்காடு’. அஜய், ராஞ்சனா இதன் நாயகர் நாயகிகள். ஜெயஸ்ரீ, ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களுடன் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.

“உலகப் படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை நான் இயக்கும் ‘மரகதக்காடு’ கொடுக்கும்” என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறார் மங்களேஷ்வரன்.

“அப்படியென்ன கதை?”

‘‘அழிந்துவரும் காடுகளின் அவசியத்தை சமூகப் பொறுப்புடன் எடுத்துள்ளேன். காடு, அது தரும் பொருட்கள்தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் விரிவாகப் பேசுகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.”

“இந்தக் கதையை படம்பிடிக்க லொகேஷனைத் தேடியதே பெரிய கதையாக இருக்குமே?”

“ஆமாம். இதுவரை கேமரா நுழையாத வனங்களைத் தேடி அலைந்து கண்டுபிடித்தோம். படம் முழுக்க தமிழக மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்துக்காக நாங்கள் செயற்கை ஒளியைப் பயன்படுத்தவில்லை என்பது முக்கியமானது.

பொதுவாக காடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது, படப்பிடிப்பு நடந்த இடம் முழுக்க படக்குழுவினர் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில், உணவுக் கழிவுகள் என்று இறைந்திருக்கும். நாங்கள், சூழலை கெடுக்கக்கூடாது என்கிற அக்கறையில் எந்த குப்பையையும் வனத்தில் போடவில்லை. எந்தவித பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்த படப்பிடிப்பில் தடையே விதித்திருந்தோம்.”

“ஏன் இவ்வளவு கண்டிப்பு?”

“இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்தை அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கும் படம் இது. ஊருக்கு உபதேசம் செய்யக்கூடாது, அதை நாமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகளை நாங்களே விதித்துக் கொண்டோம்.”

“படத்தில் ஸ்ட்ராங்கான மெசேஜ் நிறைய இருக்கும் போலிருக்கே?”

“ஆமாம். தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரக்கூடும். சுவாசிக்கிற காற்று மாசுபடுதுன்னு கவலைப்படுகிற நாம், காற்றே பற்றாக்குறையாகப்போகுது என்கிற கவலை கொஞ்சம்கூட இல்லாம இருக்கோம்.

Save waterங்கிறது save air என மாறிவிடக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம்தான் ‘மரகதக்காடு’. காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும், நேசிக்கவும்  வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.”

“பிரச்சார நெடி அதிகமாக வெளிப்படும் போலிருக்கே?”

“அப்படிச் சொல்ல முடியாது. கருத்துகளுக்கு மத்தியில் வலுவான கதையையும் வைத்திருக்கிறோம். இல்லையெனில் நாம் சொல்ல வரும் செய்தியை மக்கள் புரிந்துகொள்ள முடியாது. நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன், அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது .

வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் - பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தான் காதலின் முடிவாக இருக்க வேண்டுமா என்ன? அந்தக் காதல், அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது. காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கை காதலுக்கு தடையாக இருக்கிறது.

அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன, முடிவு என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளேன். காதலுடன் காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும்.”

“வேறென்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“படத்தின் பெரும்பகுதி காட்டில் நடப்பதால் முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம். வனவிலங்குகள், இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். ரசிகர்கள் எங்கள் உழைப்புக்கு மரியாதை தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதில் நடித்தவர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏன்னா, காடு மேடு பார்க்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.  ஒளிப்பதிவாளர் நட்சத்திர பிரகாஷ், இசையமைப்பாளர் ஜெய்ப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்கு பலம் சேர்க்கும் விதத்தில் இருக்கும். இந்தப் படம் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும். இந்தப் படம் ரசிகர்களை மகிழ்விக்கும்.’’

- சுரேஷ்ராஜா