காதுகளால் படம் பார்த்த தலைமுறை!



பிலிமாயணம் 12

செல்போனில் படம் பார்க்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒலிச்சித்திரம் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது. ஒலிச்சித்திரம் என்றால் ஒரு சினிமாவின் கதை வசனத்ைத அப்படியே ஆடியோவாக மட்டும் கேட்பது.

சினிமாவை தியேட்டரைத் தாண்டி மக்களுக்கு கொண்டு வந்தது பாடல்களும், ஒலிச்சித்திரமும்தான். ஒரு காலத்தில் பாடல்களுக்கு நிகராக ஒலிச்சித்திரமும் வீதிதோறும் ஒலித்துக் ெகாண்டிருந்தது. வெளிவருகிற எல்லா படங்களுக்கும் ஒலிச்சித்திரம் வந்துவிடாது.

பெரிய அளவில் வெற்றி பெற்ற - குறிப்பாக வசனங்கள் சிலாகிக்கப்பட்ட - படங்களுக்கு மட்டுமே ஒலிச்சித்திர ரிக்கார்டுகள் வெளிவரும். ஆரம்பத்தில் ஒரு இசைத்தட்டின் ஒரு பக்கத்தில் ஒரு பாடல் மட்டுமே இருக்கும், இரண்டு பக்கமும் சேர்த்து இரண்டு பாடல்கள் இருக்கும். ஒரு படத்திற்கு நான்கைந்து இசைத்தட்டுகள் வரும்.

பிற்காலத்தில் எல்பி ரிக்கார்டுகள் என்ற பெரிய சைஸ் ரிக்கார்டுகளில் ஒரு பக்கத்தில் நான்கு பாடல்கள் வரை இடம்ெபற்றது. எல்பி ரிக்கார்டுகளில் பாடல்கள் வருதற்கு முன்பு ஒலிச்சித்திரம்தான் வெளிவந்தது.

மூன்று மணி நேரப் படத்தை ஒரு மணி நேர ஒலிச்சித்திரமாக மாற்றிக் கொடுப்பது என்பதே தனி பணிதான். அந்தப் பணியை படத்தின் எடிட்டரும், ஒலிப்பதிவாளரும் இணைந்து செய்திருக்கிறார்கள்.

சிவாஜியின் படங்கள்தான் அதிக அளவில் ஒலிச்சித்திரமாக ெவளிவந்திருக்கிறது. காரணம், அவரின் படங்களில்தான் வசனங்களுக்கு பெரிய முக்கியத்தும் இருக்கும். அதுவுமின்றி சிவாஜியின் சிம்மக்குரலைக் கேட்பதென்றால் தமிழர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

எம்.ஜி.ஆர் படங்களில் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெறும். எனவே எம்.ஜி.ஆர் படங்களை ஒலிச்சித்திரமாகக் கேட்பது கடினம். அவற்றை திரையில் பார்த்துதான் ரசிக்க முடியும்.ஒலிச்சித்திரத்தில் சாதனை படைத்த படம் என்றால் அது ‘திருவிளையாடல்’தான்.

அடுத்த இடம் ‘சரஸ்வதி சபதம்’ படத்துக்கு. கோயில் திருவிழாக்களில் இந்த இரண்டு படங்களின் ஒலிச்சித்திரத்ைத ஒளிபரப்புவதை ஒரு பக்தி இயக்கமாகவே நடத்தினார்கள். ‘மனோகரா’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘கவுரவம்’, ‘திரிசூலம்’ போன்ற படங்களின் ஒலிச்சித்திரமும் ரிக்கார்டுகள் தேயத்தேய ஒலிபரப்பானது.

எம்.ஜி.ஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’, ‘உரிமைக்குரல்’ படங்கள் ஒலிச்சித்திரங்களாக வெளிவந்தன.அந்தக்கால மக்களுக்கு ஒலிச்சித்திரம் கேட்பது என்பது ஒரு திரைப்படம் பார்ப்பதற்குரிய சுகானுபவத்தைக் ெகாடுத்தது.

ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகும் கூம்புக்குழாய் கட்டப்பட்டிருக்கும் தூணின் கீழ் நின்று குறைந்தபட்சம் பத்து இருபது பேராவது அதனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். காட்சிகள் காதுக்குவர கண்களுக்குள் அந்தக் காட்சிகள் விரிகிற அனுபவமே தனிதான். என் வயதையொத்த சிறுவர்களுக்கு ஒரு மணி நேர ஒலிச்சித்திரம் மனப்பாடமாகத் தெரியும்.

“ஏல ஒரு மணி நேர ஒலிச்சித்திரத்தை மனப்பாடம் பண்ற... பாடத்தை மனப்பாடம் பண்ண முடியாதா?” என்று வாத்தியார் பிரம்பால் அடித்ததை நினைத்தால் இப்போதும் அடிபட்ட இடத்தில் வலிக்கிறது. ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரத்தை இப்போதும் என்னால் ஒரு தவறு இல்லாமல் அப்படியே சொல்ல முடியும். அந்த அளவிற்கு அது மனதிற்குள் ஆழமாகத் தங்கிப்போனது.

இலங்கை வானொலியில் வாரத்துக்கு ஒரு படம் ஒலிச்சித்திரமாக ஒளிபரப்பானது. ரிக்கார்ட் வராத படங்களைக்கூட அவர்களே ஒலிச்சித்திரமாகத் தயாரித்து ஒலிபரப்பினார்கள். அதில் முக்கியமான படம் பாரதி ராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’. தமிழ்நாட்டு வானொலிகளில் முழு ஒலிச்சித்திரம் ஒலிபரப்பியதாக நினைவில்லை.

ஆனால் முக்கியமான காட்சிகளை ஒலிபரப்பியிருக்கிறார்கள். திருமண வீடுகளி–்ல் நிகழ்ச்சிகள் முடிந்ததும் மதிய விருந்திற்குப் பிறகு விருந்தினர்கள் ஓய்வாக இருக்கும்போது ஒலிச்சித்திரத்தை ஒலிபரப்புவார்கள். அது பெரும்பாலும் ‘பட்டிக்காடா பட்டணமா’ படமாக இருக்கும். மைக்செட்காரரும் ஒலிச்சித்திரத்தை ஒலி பரப்ப விட்டு விட்டு சாப்பிடச் செல்வார்.

பிற்காலத்தில் சினிமா மக்களுக்கு மிக நெருக்கமானது. கேசட், டிவி மூலம் சினிமா வீட்டுக்குள் வந்தது. இப்போது செல்போன் வழியாக கைகளுக்குள் வந்துவிட்டது. எந்தப் படத்தை வேண்டுமானாலும் யூட்யூபிலோ அல்லது வேறு இணையதளங்களிலோ பார்த்துக் கொள்கிறார்கள். ஒலிச்சித்திரத்தின் ஆயுள் ஒருவழியாக முடிந்தே போனது.

சமீபத்தில் சில பண்பலை வானொலிகளில் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பினார்கள். ஆனால், அதற்கு மக்கள் ஆதரவு அந்தளவுக்கு கிடைக்காததால் கைவிட்டு விட்டார்கள். காதுகளால் சினிமா பார்த்த ஒரு தலைமுறை முடிந்து விட்டது என்றே சொல்லலாம்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்