தமிழின் முதல் வண்ணப்படம்!மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது  திருடர்களும்’ படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம் என்று பலரும் கருதிக்  கொண்டிருப்பது தவறு.

1931-ஆம் ஆண்டில் சினிமா தமிழ் பேசத் தொடங்கிவிட்டது. 1938ஆம் ஆண்டு வரை முழுக்க கருப்பு வெள்ளையில்தான் படங்கள் வெளியாகின. அந்த ஆண்டில்தான் முதன்முதலாக ஒரு வண்ணப்படம் திரைக்கு வந்தது.

‘தர்மபுரி ரகசியம்’ அல்லது ‘ராஜதுரோகி’ படத்துக்கே இந்தப் பெருமை சேரவேண்டும். ‘ட்ரூகலர்’ என்று சொல்லப்படக்கூடிய (sepia வண்ணம் என்று இதைச் சொல்வார்கள்) வண்ணத்தில் இந்தப் படம் வெளியானது. படத்தில் விளம்பரத்திலேயே ‘இயற்கை வர்ணக் காட்சிகள் அடங்கிய முதல் தமிழ்ப்படம்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

அதாவது அதுவரை வெள்ளை திரையில் கருப்பு வண்ண ஒளிபாய்ச்சப்பட்டே திரையில் படம் தெரியும். இந்தப் படம் கருப்புக்கு பதிலாக பிரவுன் நிறத்தில் திரையிடப்பட்டது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ திரைப்படம், ட்ரூகலரின் அடுத்த முன்னேற்றமான கேவாகலரில் படமாக்கப்பட்டது. பின்னரே டெக்னிகலர், ஈஸ்ட்மென் கலர் என்று கொஞ்சம் கொஞ்சமாக வண்ணத்திரை பரிணாமம் பெற்று, இன்று தத்ரூபமான வண்ணத்தை நாம் திரையரங்கத்தில் ரசிக்க முடிகிறது.

1930களில் புராண, சரித்திரக் கதைகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தமிழின் முதல் வண்ணப்படமான ‘தர்மபுரி ரகசியம்’, சமூகக்கதையாக எடுக்கப்பட்டது என்பது வியப்புக்குரியது.

இந்தப் படத்தில் மோட்டார் பைக், ரிவால்வர் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றதை அக்காலத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தரராஜன் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகத் திகழ்ந்த சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.

நேரு, காந்தி ஆகியோரிடம் நேரடியாகப் பழகிய அய்யர், மிகச்சிறந்த வழக்கறிஞரும் பேச்சாளரும் ஆவார். திருவாங்கூர் ராஜ்ஜியத்தை கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் நவீனப்படுத்தியதில் அய்யரின் பங்கு முக்கியமானதாகும்.

அதே நேரம் வளர்ச்சி என்றாலே ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்புவதும் சகஜம்தானே? அம்மாதிரி அய்யர் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள், இந்தப் படத்தில் இடம்பெற்றன.தங்களுடைய திவானைக் குறித்து நேர்மறையாக எடுத்திருந்தால் திருவாங்கூர் சமஸ்தானம் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்திருக்கும்.

ஆனால், எதிர்மறையான கருத்துகள் இடம்பெற்றிருக்கிறது என்பதால் படம் திரையிட தடை விதித்தது. எனினும், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்குட்பட்ட பகுதிகளில் படம் வெளியாகி வெற்றிகரமாக பதினைந்து வாரங்கள் ஓடியதாக தகவல்கள் உண்டு.

அண்ணாஜிராவ் என்பவர் படத்தில் திவானாக நடித்திருக்கிறார். கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அப்போதிருந்த டெண்டு கொட்டகைகளில் படம் வெளியாகியிருக்கிறது. திவான் சி.பி.ராமசாமி அய்யரே ரகசியமாக வள்ளியூருக்கு வந்து படத்தைப் பார்த்துவிட்டுச் சென்றாராம்.

திருவாங்கூர் ராஜ்ஜியத்து மக்கள் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும் படையெடுத்து வந்து படம் பார்த்தார்களாம்.‘தர்மபுரி ரகசியம்’ (அல்லது) ‘ராஜதுரோகி’ வெற்றியைத் தொடர்ந்து நிறைய படங்கள் இதுபோல ஒரு வண்ணத்தில் (sepia) திரையிடப்பட்டு ரசிகர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன.

இந்த ட்ரூகலர் மோகம் 1950களின் துவக்கத்தில் கேவாகலர் வந்ததால் முடிவுக்கு வந்தது. ட்ரூகலர், ஒருவண்ணம் என்றால் கேவாகலரில் மேலும் இரண்டு மூன்று வண்ணங்களும் இடம்பெறும். அதாவது முழுக்க வண்ணப்படம் பார்ப்பது மாதிரி இருக்காது, ஆனாலும் கருப்பு வெள்ளைக்கு பதிலாக சில வண்ணங்கள் தெரிகிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

என்.டி.ராமாராவ், சாவித்திரி நடிக்க எல்.வி.பிரசாத் தமிழில் முதன்முதலாக இயக்கிய ‘கல்யாணம் பண்ணிப்பார்’ (1952) படத்தின் சில காட்சிகள் கேவா கலரில் வெளியாகின. தென்னிந்தியாவில் முதன்முதலாக கேவா கலர் பயன்படுத்தப்பட்ட படம் என்கிற பெருமையை இது பெறுகிறது. அடுத்து ஜெமினிகணேசன், அஞ்சலி தேவி நடித்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ (1955) படத்தின் சில காட்சிகளும் கேவாகலரில் அமைந்தன.

படங்களில் பாடல் காட்சிகளையாவது கேவா கலரில் அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்த நிலையில் முழுக்க கேவா கலர் பயன்படுத்தி 1956ல் எம்.ஜி.ஆர், பானுமதி நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

- கவிஞர் பொன்.செல்லமுத்து