தாலாட்டப்போகுது இந்த அருவி!



சமூக வலைத்தளங்களில் திடீரென்று பரபரப்பாகி இருக்கிறது ‘அருவி’. ரிலீஸுக்கு முன்பாகவே எப்படி பரபரப்பை கிளப்ப முடிந்தது என்கிற கேள்வியோடு இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனை தொடர்பு கொண்டோம்.“ஹீரோவே இல்லாத இந்தப் படத்தோட சப்ஜெக்ட், சமூக அக்கறை நிறைந்தது.

முக்கியமான ஒரு மெசேஜை சொல்லும் இந்தப் படத்தைப் பற்றி சமூக ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களது கருத்தை அறிய விரும்பினேன். இதற்காக பிரத்யேக திரையிடல் ஒன்றை செய்தோம்.

படம் பார்த்தவர்கள் என்னைப் பாராட்டியதோடு, அவரவர் ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தைப் பற்றி நல்லவிதமாக எழுதியிருக்கிறார்கள். திடீரென்று பலரும் ‘அருவி’ பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் எழுதியதால், எங்கள் படம் டிரெண்டிங்கில் இருக்கிறது.”

“உங்க பின்னணி?”

“நான் இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவன். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக பணி புரிந்திருக்கிறேன். எனவே மாற்று சினிமாவுக்கான தன்மையும், கமர்ஷியல் சினிமாவுக்கான பண்பும் என்னிடம் இயல்பாகவே இருக்கின்றன. எந்த காம்ப்ரமைஸும் செய்துகொள்ளாமல் ‘அருவி’யை எடுத்திருக்கிறேன். நல்ல சினிமா வரவேண்டும் என்று நினைப்பவர்கள், எங்கள் ‘அருவி’யை தாலாட்டுவார்கள். ரசிகர்களை எங்கள் ‘அருவி’யும் தாலாட்டும்.”

“படத்தின் கதை அருவியின் பின்னணியில் நடப்பதா?”

“விளம்பர டிசைனை பார்த்த சிலர்கூட அதுமாதிரி கேட்டார்கள். ‘அருவி’ என்பது எங்கள் படத்தில் நாயகியுடைய கதாபாத்திரத்தின் பெயர்.”
“இது பெண்ணியப் படமோ?”

“குடும்பத்தோடு அமர்ந்து அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட படம்தான். கமர்ஷியல் ரசிகர்களும் ரசிக்கக்கூடிய வகையில் காமெடி, விறுவிறுப்பு எல்லாமே உண்டு. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு இப்படத்தின் கதையை ஒரே ஒரு பக்கத்தில் எழுதி அனுப்பி வைத்தேன். அதனால் கவரப்பட்ட அவர் என்னை அழைத்து முழு ஸ்க்ரிப்டையும் கேட்டார். அவரும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபுவும் நான் கதை சொல்லிய விதத்தை வைத்துதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.”

“ஹீரோயின் அதிதி ஃப்ரெஷ்ஷாக தோற்றமளிக்கிறார்...”

“கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சுமார் ஐநூறு பேர் வரை ஆடிஷன் செய்து ஒருவரைக்கூட நாங்கள் எதிர்பார்க்கும் ‘அருவி’யாகக் கண்டறிய முடியவில்லை. அதிதி, ஒரு அட்வகேட். சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்தான். எங்கள் கதையைக் கேட்டு நடிக்க சம்மதித்தார்.”
“படத்தில் வசனங்கள் பேசப்படும் என்கிறார்களே?”

“ரொம்ப நன்றி. இன்றைய சமூக அவலங்களை சாடக்கூடிய வசனங்கள் நிறைய இருக்கின்றன. ‘மக்கள் சினிமா’ என்கிற வகைமையில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘அருவி’ திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளியிருக்கிறது.

மிகக்கடுமையான வசனங்களை நன்கு உள்வாங்கி அதிதி நடித்திருக்கிறார். அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். படத்தில் நாயகி புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதையின் தன்மையில் இருக்கின்றன. எனவேதான் தணிக்கைச் சான்றிதழ் ‘யூ/ஏ’ கொடுத்தார்கள். மறுக்காமல் பெற்றுக்கொண்டோம்.”

யுவகிருஷ்ணா