தலைதீபாவளி நட்சத்திரங்கள்!
வருடாவருடம் தீபாவளி வந்தாலும் வாழ்வில் ஒருமுறைதான் தலை தீபாவளி வரும். ‘வண்ணத்திரை’ வாசகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும் வகையில், இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்களின் பட்டியலை வழங்குகிறோம்.
பிப்ரவரி : 2-ல் நடிகரும், எம்.எல்.ஏ. வுமான வாகை சந்திரசேகரின் மகள் ஜெ.சி.சிவநந்தினிக்கும் பழனியைச் சேர்ந்த ஆர்.தினேஷ்குமாருக்கும் பழனியில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சினிமாத்துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட ஏராளமான வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர். இதே மாதம் 6ம் தேதி ‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்த சாத்னா டைட்டஸ் கே.ஆர்.பிலிம்ஸ் அதிபர் கார்த்திக்கை இந்து முறைப்படி கரம்பிடித்தார்.
23ம் தேதி ஏ.வி.எம் சரவணனின் பேரன் டாக்டர்.சித்தார்த்துக்கும், டாக்டர் ஹரிணிக்கும் ஏ.வி.எம். நிறுவனத்தின் பிரும்மாண்ட படம் கணக்காக டும் டும் டும் சிறப்பாக நடைபெற்றது.
மே : 17ம் தேதி பிரபல சண்டை இயக்குநர் பெப்சி விஜயனின் மகனும், ‘மார்க்கண்டேயன்’, ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவருமான சபரிஷ் - கார்த்திகா பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் செய்துகொண்டனர். இதே மாதம் 29ம் தேதி நிழல்கள் ரவி மகன் ராகுலுக்கும் மதுப்ரியாவுக்கும் திருமணம் நடந்தது.
ஜூன் : 3ம் தேதி இயக்குநர் வேலுபிரபாகரனுக்கும் ஷெர்லி தாஸுக்கும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் லி மேஜிக் லேன்டன் பிரிவியூ தியேட்டரில் திருமணம் நடைபெற்றது. 4ம் தேதி ஆர்.சுந்தர்ராஜன் மகன் அசோக் - சுனிதா திருமணம் நடைபெற்றது. 23ம் தேதி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேத்தி எஸ்.கமலாவுக்கும் நாச்சியப்பன் என்கிற செந்தில்நாதனுக்கும் திருமணம் நடந்தது.
ஆகஸ்டு: 27ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா - கிருத்தீஷ் திருமணம் சென்னையில் நடந்தது. இந்தத் திரு மண விழாவில் ரஜினி, விஜய் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
‘பருத்திவீரன்‘ மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ப்ரியா மணி, மும்பையைச் சார்ந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் முஸ்தபா ராஜ் என்கிற அவரது நண்பரையே 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
செப்டம்பர் : 4ம் தேதி ‘களவாணி’ படத்தில் நடிகராக அறிமுகமான திருமுருகன் தன் உறவுக்காரப் பெண் மோகனப்ரியாவை இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கரம் பிடித்தார். 15ம் தேதி பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தரணுக்கும், ‘நகர்வலம்’, ‘ஆகம்’படங்களில் நடித்துள்ள தீக்ஷிதாவுக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம்.
அக்டோபர் : தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் 6ம் தேதி இந்து முறைப்படி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. 7ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் காதல் திருமணம்தான்.தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
சுரேஷ்ராஜா
|