மெர்சல் பிரிவ்யூ



ஆயிரம்வாலா சரவெடி கொளுத்தப் போறான் தமிழன்!

* தீபாவளி என்றாலே விஜய்க்கு ஸ்பெஷல். அவருடைய பெரும் வெற்றி பெற்ற பல படங்கள் தீபாவளி ரிலீஸ்தான். கடைசியாக 2014 தீபாவளிக்கு ‘கத்தி’ வெளியானது. கடந்த இரண்டு தீபாவளியாக விஜய்யை திரையில் பார்க்கமுடியாத ஏக்கத்தில் இருந்த ரசிகர்களின் தாகம் தீர்க்கும் விதமாக ‘மெர்சல்’ வெளியாகிறது.

* இயக்குநர் இராம.நாராயணனின் தேனாண்டாள் நிறுவனத்தின் நூறாவது படம் என்பதாலோ என்னவோ, பட்ஜெட் நூறு கோடியைத் தொட்டுவிட்டது என்று சொல்கிறார்கள்.

* ‘தெறி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் விஜய்யோடு இயக்குநர் அட்லீ இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்.

* முதன்முறையாக மூன்று வேடங்களில் தோன்றுகிறார் விஜய். பஞ்சாயத்துத் தலைவர், டாக்டர், மேஜிக் கலைஞர் என்று மூன்று வேடங்களுக்குமான கெட்டப்புகளில் செம மிரட்டு மிரட்டுகிறாராம்.

* மேஜிக் கலைஞர் வேடத்தில் நடிப்பதற்காக பிரபல மேஜிக் நிபுணர்களிடம் மேஜிக் ட்ரிக் கற்றுக் கொண்டாராம். இப்போது காணும் குழந்தைகளிடமெல்லாம் சின்ன சின்னதாக மேஜிக் செய்து அசத்துகிறாராம் விஜய்.

* விஜய், பஞ்சாயத்துத் தலைவர் வேடத்தில் வரும் காட்சிகள்தான் ஒட்டுமொத்த ஆடியன்ஸின் கிளாப்ஸை அள்ளப் போகிறது. ஒட்டுமொத்த மாஸையும் இந்தக் கேரக்டருக்காகத்தான் களமிறக்கி யிருக்கிறார்களாம் விஜய்யும், அட்லீயும்.

* காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என்று தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்கள் மூவரும் இடம்பெற்றிருந்தாலும், நித்யாமேனன் போர்ஷனில்தான் ரொமான்ஸில் துள்ளியிருக்கிறாராம் விஜய்.

* விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக் கிய எஸ்.ஜே.சூர்யா, இதில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். ‘ஸ்பைடர்’ மூலம் வில்லனாக மிரட்டியவர், இதில் தன் வில்லத்தனத்தின் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறாராம்.

* தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி காட்சிகளுக்கு விஜய் - வடிவேலு காமெடி காம்பினேஷன், ‘காவலன்’ படத்துக்குப் பின்னர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது. குலுங்கச் சிரித்து ரசிகர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவது நிச்சயம்.

* ‘பாகுபலி’ படத்துக்கு கதை எழுதியவரும், இயக்குநர்களில் ராட்சஷன் என்று பெயர் எடுத்திருப்பவருமான ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்தான் கதை எழுதியிருக்கிறார்.

தெலுங்கில் பல மசாலாப் படங்களுக்கு கதை எழுதி, பிரும்மாண்ட ஹிட் கொடுத்த கதாசிரியர் என்பதால் படத்துக்கு தமிழில் மட்டுமின்றி அக்கட தேசத்திலும் எக்ஸ்பெக்டேஷன் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.

* சினிமாவென்றால் கிராபிக்ஸ் என்றாகிவிட்ட காலகட்டத்தில் முத்துராஜ் அமைத்திருக்கும் அரங்கங்கள் ரசிகர்களிடம் நீண்டகாலத்துக்கு பேசப்படுமாம்.

* அட்லீ, சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு முன்பாக ‘முகப்புத்தகம்’ என்றொரு குறும்படத்தை இயக்கி, யூ-ட்யூப் இணையத்தில் வைரல் ஹிட் அடித்தார். அந்தக் குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு தான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பிரபல கேமராமேன் ரிச்சர்ட் எம்.நாதனின் உதவியாளர்.

* ‘தல’யின் ‘விவேகம்’ படத்துக்கு ஹாலிவுட் பாணியில் எடிட்டிங் செய்து கலக்கிய ரூபன்தான் ‘தளபதி’யின் ‘மெர்சல்’ படத்திற்கும் கத்திரிக்கோலை பிடித்திருக்கிறார்.

* ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே அத்தனை பாட்டும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டு. பின்னணி இசைக்கு வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் இசைப்புயல். ‘மெர்சல் அரசன்’ பாடலை தன்னுடைய அக்கா மகனும், பிரபல இசையமைப்பாளரும், இளம் ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷை பாட வைத்திருக்கிறார் ரஹ்மான். ‘நீதானே’ பாடலை ரஹ்மானே பாடியிருக்கிறார்.

* தமிழ்ப் பெருமை பேசக்கூடிய ஒரு பாடல் வேண்டுமென இயக்குநர் அட்லீயும், விஜய்யும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடல் இனி தமிழ்நாட்டில் நடக்கும் பாரம்பரியத் திருவிழாக்களில் ஒலிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அந்த ஆசையைத்தான் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று அதகளமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். எல்லாப் பாடல்களையுமே விவேக் எழுதியிருக்கிறார்.

* டைட்டில் பிரச்சினைக்கு கோர்ட்டுக்கு எல்லாம் போகவேண்டியிருந்தது என்றாலும், ‘மெர்சல்’ என்கிற டைட்டிலை டிரேட்மார்க்காகப் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுவாக நிறுவனங்களின் பெயரோ, அல்லது தயாரிப்புப் பொருளோதான் இதுவரை டிரேட்மார்க் செய்யப்பட்டு வந்தன.

இனிமேல் ‘மெர்சல்’ என்கிற பெயரை கமர்ஷியலாக யார் பயன்படுத்தினாலும், தயாரிப்பாளருக்கு ராயல்டி கொடுக்க வேண்டியிருக்கும். தென்னிந்திய சினிமாவிலேயே படத்தின் டைட்டிலை முதன்முறையாக டிரேட்மார்க் செய்து, இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

* “தமிழனின் நவீன வாழ்க்கை முறையில் இழந்துவிட்ட பல பாரம்பரியமான பண்பாட்டு நடவடிக்கைகளை நினைவுறுத்தக்கூடிய திரைப்படமாக ‘மெர்சல்’ இருக்கும். அதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டோம் என்று சொல்லமுடியாது.

வழக்கமாக விஜய் சார் படங்களில் இடம்பெறும் அத்தனை சுவாரஸ்யங்களும் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவரில் 300 ரன் அடித்தமாதிரி ‘தெறி’ அமைந்தது. ‘மெர்சல்’, 20 ஓவரிலேயே 300 ரன் அடிக்கும் விறுவிறுப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் அட்லீ.

* “இதுவரை திரையில் நான் பார்க்காத விஜய்யை முதன்முதலாக ‘மெர்சல்’ படத்தில் பார்க்கப் போகிறேன்” என்று சொல்பவர் யார் தெரியுமா? விஜய்யேதான். இளைய தளபதியே சொல்லிவிட்டார். அப்பீல் ஏது?

 சுரேஷ்ராஜா