இது ரெட்லைட் அல்ல; வெளிச்சம் பாய்ச்சும் டார்ச்லைட்!



“இப்போ நேஷனல் ஹைவேஸ் ரோடுகள் நாலு வழிச்சாலையா இருக்கு. முன்னாடியெல்லாம் அது இருவழிச் சாலையா இருந்தது. அதாவது 1990கள்ல நீங்க ஹைவேஸ் ரோட்டோரங்களில் பார்த்த விஷயங்கள்தான் இப்போ நான் இயக்கியிருக்கும் ‘டார்ச் லைட்’. லாரி போக்குவரத்து நிறைந்த இடங்களில் லாரிகளை மடக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களைப் பத்தின கதைதான் இது.

ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கு முன்னாடியே அப்படித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் நிறையபேர்கிட்ட பேசினேன். அவங்கள்ல ஒரு சிலர் சொன்ன உண்மையைக் கேட்டதும், அவங்ககிட்ட ஆண்கள் பண்ணும் வன்முறைகள், தவறுகள் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு கதையை படமா பண்ணணும்னு நினைச்சேன்.

ஆனா, யாரும் தயாரிக்க முன்வரலை. அதனால நானும் என் நண்பர்கள் அந்தோணி எட்வர்ட், ராஜ் பாஸ்கர் ரெண்டுபேரோட சேர்ந்து ‘டார்ச் லைட்’டை தயாரிச்சிருக்கேன்’’ என பேச ஆரம்பிக்கிறார் மஜீத். இதற்கு முன் விஜய் நடித்த ‘தமிழன்‘ படத்தை இயக்கியவர் இவர்தான்.

‘‘சமீபத்தில் நான் இயக்கிய ‘பைசா’ எல்லோராலும் பேசப்பட்டுச்சு. இனி என் ஒவ்வொரு படத்திலும் அழுத்தமான ஒரு கதையை பண்ணிடணும்னு முடிவெடுத்தேன். அப்படி ஒரு முயற்சியாகத்தான் இந்த ‘டார்ச் லைட்’ படத்தை கொண்டு வந்திருக்கேன். இது பாலியல் தொழிலாளிகளின் பளபளப்பை மட்டுமில்ல, அவங்களோட வலியும் வேதனையும் நிறைந்த இன்னொரு பக்கத்தையும் தொட்டிருக்கேன்’’ என திருப்தியாக பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் மஜீத்.

“சதாவுக்குதான் மார்க்கெட் இல்லையே.. அவங்களுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கணும்னு ஏன் தோணுச்சு?”

“உண்மையை சொல்லணும்னா, சதா மட்டும் தான் இந்தக் கதையைக் கேட்டு தைரியமா நடிக்க சம்மதிச்சாங்க. ஆரம்பத்துல நிறைய ஹீரோயின்கள்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி ‘எங்க இமேஜ் என்னாவுறது?’னு கோரஸா சொன்னாங்க. ஆனா, சதாகிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடி நீங்க பாலியல் தொழிலாளியா நடிக்கணும்னு சொன்னேன். அதிர்ச்சியா என்னைப் பார்த்தாங்க. அப்புறம், அவங்ககிட்ட நான் முழுக்கதையையும் சொன்னேன். அவங்க கண்ணுல இருந்து பொலபொலன்னு கண்ணீர் வந்திடுச்சு.

‘கண்டிப்பா பண்றேன் மஜீத்’னு நம்பிக்கை குடுத்து வந்தாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு சதா மறுபடியும் தமிழ்ல பிஸியாவாங்க. அதே மாதிரி இன்னொரு ஹீரோயின் ‘மெட்ராஸ்’ ரித்திகா பண்ணியிருக்காங்க. இவங்க தவிர இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், சரவண சக்தி, ரெங்கநாதன் அப்புறம் நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. ஆயிரம் விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின சக்தி இதுல கேமரா பண்றார். ‘பைசா’ ஜே.வி. இசையமைச்சிருக்கார். தொண்ணூறுகள்ல நடக்கற கதை என்பதற்காக இருவழிச் சாலையுள்ள ஏரியாக்கள்ல தேடித்தேடி ஷூட் பண்ணியிருக்கோம்.”
“இப்படி ஒரு சப்ஜெக்ட் எப்படி தோணுச்சு..?”

“ரியலாகவே பாலியல் தொழிலாளிகள் சிலரிடம் பேசினால் யதார்த்தமான கதையா இருக்கும்னு தோணுச்சு. சிலர்கிட்ட பேச முயற்சி பண்ணினால் ‘நாங்க அப்படி ஆள் இல்ல’னு பேச முன்வரல. ஒரு சிலர்தான், ‘நாங்க ஆடம்பரமான வாழ்க்கைக்கோ, சொகுசு பங்களா கட்டுறதுக்கோ இந்தத் தொழிலுக்கு வரல. அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாமதான் இப்படி பொழப்பு பொழைக்கறோம்.

குடிகார, வேலைக்கு போகாத கணவன், குழந்தைகள் படிப்பு, நோயாளி கணவன்னு எல்லா குடும்ப சுமைகளும் தனி ஒருத்தியா சுமக்க வேண்டியிருக்கு. பத்து பாத்திரம் தேய்க்கணு்ம்னு வீட்டு வேலைகளுக்கு போனால் கூட குடும்பசெலவை சமாளிக்க முடியாதுங்க. ஆனா ஒரு விஷயம், லாரி டிரைவர்கள் அவங்ககிட்ட நடந்துக்கற விஷயங்களை சொல்லும் போது, கண் கலங்கிட்டேன்.

‘நாங்க லிப்ஸ்டிக் போட்டுட்டு போனா, கூடுதலா பத்து ரூபா கிடைக்கும். ஆனா, எங்ககிட்ட லிப்ஸ்டிக் வாங்குறதுக்கு காசு இருக்காது. அதுக்காக பழைய சிகரெட் அட்டைகளின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் சிவப்பு கோட்டில் தண்ணீர் கலந்தால் அது லிப்ஸ்டிக் மாதிரி ஒட்டிக்கும். பல பெட்டிக்கடை வாசலில் கிடக்கும் சிகரெட் அட்டைகளை நாங்க சேகரிச்சு லிப்ஸ்டிக்கா யூஸ் பண்ணிக்குவோம்.

அதே மாதிரி கண்மை டப்பா வாங்கினா, ஒரு வாரத்தில் காலியாகிடும். அது ரொம்ப நேரம் கண்ணுல இருக்காது. அதனால கருவேல மரத்தில இருந்து ஒரு மை வரும் அது விஷம்தான். ஆனாலும் அதை கண் மையா பயன்படுத்துவோம். எங்கள லாரி டிரைவர்கள் வெறும் கட்டாந்தரையிலதான் படுக்க வைப்பாங்க. சிலர் குடிச்சுட்டு வந்து ரொம்ப மோசமா நடந்துக்குவாங்க’னு அவங்கள்ல பலரும் சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.

அவங்க சொன்னதை எல்லாம் சதா பேசுற வசனங்களா வச்சிருக்கேன். ஒரு பாலியல் தொழிலாளியின் நிறை, குறைகளை, உண்மையை சொல்லக் காரணம், உலகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் தெரியாமல் தொழில் செய்யும் அவங்களைப் பத்தின விழிப்புணர்வு நமக்கு வேணும். இந்தப் படத்தைப் பார்க்கும் பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் இப்படி ஒரு தொழிலுக்கு வந்திடக்கூடானு கண்டிப்பா தோணும். 

இது சதாவுக்கு மட்டுமில்ல, எனக்கும் ஒரு பெயர் கிடைக்கற படமா அமையும். அடுத்து ஒரு பெரிய ஹீரோகிட்ட ஒரு கதை சொல்லியிருக்கேன். அதற்கான வேலைகளும் நடந்துக்கிட்டே இருக்கு!”

மை.பாரதிராஜா