என் குரல் நல்லா இருக்கா சார்? விஐபி வீட்டு புதுப்பாடகி!
ஐஸ்வர்யாராய் போல அழகாக இருக்கிறார் பாடகி ஐஸ்வர்யா. குரலிலும் தேன் சொட்டுகிறது. ‘ஆக்சிஜன்’ தெலுங்குப் படத்தின் மூலம் அக்கட தேசத்தில் ஓவர்நைட் செலப்ரிட்டியாக கொண்டாடப் படுகிறார். சொந்தமாக சாஃப்ட்வேர் கம்பெனி வைத்து நடத்தும் இளம் பிசினஸ் உமனும்கூட. பிரியாணி கடை நடத்துகிறார். ஐஸ்கிரீம் கம்பெனியும் ஆரம்பித்திருக்கிறார்.
சொல்ல மறந்துவிட்டோமே?
கமல், விஜய், விக்ரம், அஜித்தையெல்லாம் வைத்து படமெடுத்த சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னத்தின் மருமகள். ‘கேடி’ இயக்கிய ஜோதிகிருஷ்ணாவின் மனைவி.“ரொம்ப வெயிட்டான குடும்பப் பின்னணிதான் போலிருக்கே?”
“அதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அப்பா பிசினஸ்மேன். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு ஒரு அண்ணன், அக்கா இருக்கிறார்கள். யு.ஜி சென்னையிலும் பி.ஜி பயோ டெக்னாலஜி கோவையிலும் கம்ப்ளீட் பண்ணினேன். கல்யாணத்துக்கு முன்னாடி நான்கு வருடங்கள் வேலைக்கு போனேன். 2012ல்தான் எனக்கு கல்யாணம் நடந்தது.
பக்கா அரேஞ்ஜ்டு மேரேஜ். திருமணத்துக்குப் பிறகு ‘ சாய் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் வெப் டிசைனிங் கம்பெனி ஆரம்பித்தேன். இப்பவும் அதை ரன் பண்றேன். அடுத்ததாக ‘அயிலாபுரம் பிரியாணி’ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன். இந்த ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் அனைவரையும் ஆந்திராவில் இருந்து வரவழைத்து பணிக்கு அமர்த்தியுள்ளேன். எங்கள் ஓட்டலில் ஒரு முறை மட்டன் பிரியாணி சாப்பிட்டீங்கன்னா வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். இப்போது குரு ஐஸ்கிரீம் என்ற பெயரில் ஐஸ்கிரீம் கம்பெனியும் ஆரம்பித்துள்ளேன்.
மாமா, கணவர் இருவரும் சினிமாவில் இருந்ததால் சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்களுடன் சேர்ந்து தயாரிப்பு பணிகளை ஒருங்கிணைத்தேன். ‘கருப்பன்’ படம் எடுக்கும் போது என்னுடைய கணவர் கோபிசந்த் நடிக்கும் ‘ஆக்சிஜன்’ படத்தை இயக்கியதால் அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டேன்.” “பாடகியா எப்படி ஆனீங்க?”
“சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். வாழ்க்கைப்பட்ட வீடும் சினிமா குடும்பம் என்பதால் ரொம்பவே மகிழ்ச்சி. ஹைடெக்கான ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நம்ம இந்தியப் படங்களில்தான் பாடல்கள் அதிகம். சினிமாவுக்கு பாட்டு இருக்கணுமான்னு கேட்குறவங்களுக்கு என்ன ரசனைன்னே புரியலை.
பழைய பாட்டு ஒவ்வொண்ணையும் கேட்குறப்போ, அது வேறும் பாட்டு மட்டும்தானா. அதுலே நம்மோட கடந்துபோன வாழ்க்கையை ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்க்கத்தானே செய்யுறோம்? நம்மூர் சினிமாவில் எனக்கு ரொம்ப பிடிச்சதே பாடல்கள்தான். எப்பவும் ஏதாவது பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருப்பேன். காலேஜ் டைமில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை பாடச் சொல்லுவாங்க. அப்போ நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணியிருக்கேன். ரெண்டு வருஷம் கர்நாட்டிக், இந்துஸ்தானி கற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு இருந்ததால் முழுமையாக அதில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
என்னுடைய மாமியார் வீட்ல உள்ளவங்களுக்கு பக்தி அதிகம். வீட்டில் நடக்கும் பூஜைகளில் என்னை பாடச் சொல்லுவாங்க. அந்த மாதிரி சமயங்களில் ‘நல்ல குரல் வளம் இருக்கு. வேஸ்ட் பண்ணாதே’ என்று என் கணவர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஆனா- அவரிடமும், என் மாமனாரிடமும் ‘உங்க படத்துலே பாட்டு பாட சான்ஸ் கொடுங்க’ன்னு கேட்குறதுக்கும் தயக்கமாதான் இருந்தது. வாய்ப்பு அதுவா அமைஞ்சா பாடலாம்னு இருந்தேன். இப்போ திடீர்னு ‘ஆக்சிஜன்’ படத்துக்கு என்னை பாட வெச்சிருக்காங்க. யுவன்ஷங்கர் ராஜா மியூசிக்கில் அந்தப் பாட்டு இப்பவே நல்ல ஹிட்டு. படம் விரைவில் ரிலீஸ் ஆகும்.”
“டைரக்டரின் மனைவி என்பதால் யுவன்ஷங்கர் உங்களை பாட வெச்சிட்டாரா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்னை ஒரு பாடகியாதான் அவர் ட்ரீட் பண்ணினாரு. ஒரு நாள் யுவன் சார்பா அவரோட ஸ்டுடியோ இன்சார்ஜ் அழைத்திருந்தார். போனதுமே வாய்ஸ் டெஸ்ட் எடுத்தாங்க. யுவன் முன்னாடி பாடுறதுக்கு ரொம்ப நெர்வஸாதான் இருந்தது. பயந்துக்கிட்டே பாடினேன்.
நடுநடுவுலே ‘நல்லா இருக்கா சார்’னு திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தேன். ‘நல்லா இல்லைன்னா உங்களை பல்லவியோடயே வீட்டுக்கு அனுப்பியிருப்போமே’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அப்புறம் எப்படியோ சமாளிச்சி பாடி முடிச்சதும் ‘பெரிய பாடகியா வருவீங்க’ன்னு வாழ்த்தினாரு. நான் பாடின அந்தப் பாட்டு மட்டுமில்லாமே, ‘ஆக்ஸிஜன்’ ஆல்பமே ஆந்திராவில் பெரிய ஹிட் ஆகியிருக்கு.” “தமிழிலும் பாடுவீங்களா?”
“பாடிட்டேனே சார்! ‘ஆக்சிஜன்’ பாடலைக் கேட்டிருந்த எங்க குடும்ப நண்பர் சுந்தர், ‘கூத்தன்’ படத்தின் தயாரிப்பாளரிடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரும் அந்தப் பாட்டை கேட்டுட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் ஒரு பாடல் என்றார்கள். என் குரல் அவங்களுக்கு திருப்தியா இருந்ததாலே ரெண்டு பாட்டு கொடுத்துட்டாங்க. ஒரு பாட்டு கர்நாடிக், இன்னொரு பாட்டு வெஸ்டர்ன்னு நம்ம என்ட்ரியே தமிழில் வெரைட்டியாதான் அமைஞ்சிருக்கு.”
“உங்க வாய்ஸுக்கு மெலடிதான் செட்டாகும்கிற மாதிரி தெரியுது?”
“ஆமாம்னு நெனைக்கிறேன். எனக்கும் மெலடிதான் பிடிக்கும். அதிலும் ஸ்வர்ணலதா மேடம் பாடிய மெலடி பாடல்கள்னா எனக்கு உயிர். ஜானகி அம்மா, சித்ரா மேடம் குரல்கள் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் ஸ்வர்ணலதாவின் பாடல்களைத்தான் ப்ராக்டிஸ் பண்ணுவேன். அந்த வகையில் மெலடி பாடல்களாகத்தான் வாய்ப்புகள் அமையுது. ஆனால், ஒரு பாடகியாக எல்லா ஸ்டைலிலும் ட்ரை பண்ணுவேன். அப்படி பண்றதுதான் சவால்.”
“தொடர்ந்து பாடுவீர்களா?”
“சினிமா தயாரிப்பு என்பது என்னுடைய மாமாவின் அடையாளம். அதில் என்னுடைய பங்கு சிறியளவில்தான் இருக்கும். சிங்கர் என்பது இறைவன் எனக்கு கொடுத்த கிஃப்ட். அந்த வகையில் என்னுடைய டேலண்ட்டை வெளியே கொண்டு வருவதற்காக தொடர்ந்து பாடுவேன். என் கணவர் மாதிரி டைரக்ஷனும் பண்ணமாட்டேன். அதற்கு தனி டேலண்ட் வேண்டும். என்னுடைய மாமாவும், கணவரும் கொடுத்த ஊக்கத்தால்தான் என்னை இப்போது பாடகியாக பார்க்கிறீர்கள். தொடர்ந்து சிங்கராக சக்சஸ் பண்ணுவேன்.’’
சுரேஷ்ராஜா
|