நான் உப்புமா ஹீரோ இல்லை!ஹீரோவாக களமிறங்கும் டைரக்டர் ஆவேசம்!!

முதல் படத்திலேயே டைரக்டாக ஹீரோ ஆகியிருப்பதோடு மட்டுமில்லாமல் டைரக்‌ஷன் அவதாரமும் எடுத்திருக்கிறார் மு.ரா.சத்யா. ‘என்னோடு நீ இருந்தால்’ என்கிற கவித்துவமான டைட்டிலோடு களமிறங்குபவர், சமீபத்தில் தடபுடலாக ஆடியோ வெளியீட்டை நிகழ்த்தி அசத்தி விட்டார். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கமாகப் போய்க் கொண்டிருந்தபோது யதேச்சையாக சாலையில் எதிர்ப்பட்டார். “பக்கத்துலேதான் சார் வீடு. வாங்க” என்று அழைத்துக்கொண்டு போய் உபசரித்தார். கையோடு ஒரு பேட்டியும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்.

“டைரக்ட் பண்ணுறீங்க ஓக்கே. என்ன தைரியத்தில் ஹீரோ ஆகுறீங்க?”
“ஜனங்க பார்ப்பாங்க என்கிற தைரியத்தில்தான். டைரக்‌ஷன்தான் என்னோட லட்சியம். ஹீரோ ஆவேன்னு நானே எதிர்பார்க்கலை. இந்தக் கதையை எடுத்துக்கிட்டு எத்தனை நடிகர்கள் வீட்டு படி ஏறி இறங்கி இருப்பேன்னு உங்களுக்கு தெரியுமா?

எல்லாருக்கும் கதை பிடிச்சிருக்கு. ஆனா சொல்லி வெச்ச மாதிரி ரெண்டு வருஷம் கழிச்சி வாங்க, அஞ்சு வருஷம் கழிச்சி வாங்கன்னு வழியனுப்பி வெச்சாங்க. நான் காத்துக்கிட்டிருப்பேன். காலம் காத்துக்கிட்டிருக்குமா?

அதுக்கப்புறம் நடிப்பு சொல்லித் தர்ற சில பட்டறைகளில் போய் என்னோட ஹீரோவைக் கண்டுபிடிக்கலாம்னு நெனைச்சேன். அங்கே இருக்கிறவங்க பலரும் என்னோட சுறுசுறுப்புக்கு ஒத்துவர மாட்டாங்கன்னு புரிஞ்சது. அவங்களோட ஆர்வமெல்லாம் டைரக்டா பெரிய படம், பெரிய டைரக்டர்னு இருக்கு.

எதுக்கு இவ்வளவு லோல் படணும்னு நானே ஹீரோவாயிட்டேன். பவர்ஸ்டாரையே ஏத்துக்கிட்ட தமிழர்களோட மனசுலே எனக்கு சின்ன இடமாவது இல்லாமலா போவும்?

வீட்டுல சாப்பாடு வெயிட்டா செய்யாத நாளில் விருந்தாளி வந்துட்டா என்ன பண்ணுவோம்? ‘சூர்ய வம்சம்’ தேவயானி மாதிரி இட்லி உப்புமா ரெடி பண்ணி சமாளிச்சிட மாட்டோம். அதுமாதிரிதான் என்னோட இந்த அதிரடி நடவடிக்கை.அதுக்குன்னு என்னை ‘உப்புமா ஹீரோ’ன்னு எழுதிடாதீங்க. ரசிகர்கள் விரும்பக்கூடிய காதல், காமெடி, சென்டி மென்ட், சஸ்பென்ஸ், திகில், ஆக்‌ஷன் எல்லாம் இருக்கிற இந்தப் படத்துலே நான் பக்காவா ஃபிக்ஸ் ஆகியிருக்கேன்.”

“அப்படியே மெய்சிலிர்க்க வெச்சுட்டீங்க பாஸ். படத்தோட கதை என்ன?”

“ரொமான்ஸ் த்ரில்லர். வழக்கமான தமிழ்ப்படம், இடைவேளைக்கு முன்னாடி பின்னாடின்னு ரெண்டு பார்ட்டா இருக்கும். நான் மூணு பார்ட்டா கதை சொல்லுறேன். கிராமத்துலே இருந்து வேலைக்காக சிட்டிக்கு வர்றான் ஹீரோ. பணக்காரப் பொண்ணு ஒருத்தியை பாத்ததுமே காதலிக்கிறான். காதல் ஒர்க்கவுட் ஆகுற நேரத்துலே ஹீரோயினை திடீர்னு காணோம். ஹீரோவுக்கு புதுசு புதுசா பிரச்னைகள் வருது. இதுக்கெல்லாம் என்ன காரணம்னு ஜாலியா சஸ்பென்ஸ் மிக்ஸ் பண்ணி சொல்லியிருக்கேன்.”

“ரொம்ப புதுமையான கதையா இருக்கே? யாரு ஹீரோயின்?”

“ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? இப்போ கோடம்பாக்கத்துலே ஹீரோயினே கிடைக்கிறதில்லை. கேரளாவில் இருந்துதான் இறக்குமதி பண்ணிக்கிட்டு இருக்கோம்.ஆக்சுவலா, இதுலே நயன்தாராதான் என்கூட நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அவங்க கிடைக்கலைன்னா கீர்த்தி சுரேஷுன்னு பிளான். என்ன பாஸ், முகம் இருளடிக்குது?

மிரளாதீங்க. அப்படியெல்லாம் கப்ஸா விடமாட்டேன். ஜாடிக்கேத்த மூடியா, என் முகத்துக்கு ஏத்த ஹீரோயின் கிடைச்சா போதும்னு நெனைச்சோம். மானஸா நாயரை நாங்க சந்திச்சப்போ ப்ளஸ்டூ எக்ஸாம் எழுதிக்கிட்டிருந்தாங்க. எக்ஸாம் முடிஞ்சதும் கமிட் ஆயிட்டாங்க. பரீட்சை லீவுலே நடிச்சிக் கொடுத்துட்டு இப்போ சின்சியரா காலேஜ் போயிக்கிட்டிருக்காங்க. படப்பிடிப்புக்கு வந்தப்போ தங்கிலீஷில் பேசிக்கிட்டிருந்தவங்க, இப்போ ‘மனோகரா’ கண்ணாம்பா மாதிரி செந்தமிழில் பொளந்து கட்டுறாங்க. கேமரா வுக்கு புதுசுங்கிறதாலே ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருந்தது. ஸ்டார்ட் ஆனதுக்கு அப்புறம் செம்ம பிக்கப்.”

“படத்துலே உங்களுக்கு டூயட்டே இருக்கக்கூடாதுன்னு உங்க வீட்டுலே ‘தடா’ன்னு கேள்விப்பட்டோம்?”

“ஓ மை காட். வாயை புடுங்க ட்ரை பண்ணுறீங்களா? நான் ஹீரோவா நடிக்கணும்னு முதலில் முன்மொழிஞ்சதே என் ஹோம் மினிஸ்டர் யசோதாதான். அவங்க என்னோட மனைவி மட்டுமல்ல; இந்தப் படத்தோட தயாரிப்பாளரும்கூட. படத்தோட திரைக்கதை யதார்த்தத்துக்கு வெகு அருகில் இருக்கும்.

அதுக்குன்னு காட்சிக்கு தேவைப்படாத லிப் டூ லிப் கிஸ், குத்துப்பாட்டுன்னு கவர்ச்சி சமாச்சாரம் எதையும் கமர்ஷியலுக்காக நாங்க சேர்க்கலை. வெட்கத்தை விட்டு சொல்லுறேன். படத்துலே ஹீரோயினுக்கும் எனக்கும் ‘டச்சிங் டச்சிங்’ சீன்கூட இருக்காது. ஹோம் மினிஸ்டரோட கடுமையான கண்காணிப்பும் இதுக்கு ஒரு காரணம்னு வெச்சுக்கங்களேன்.

ஆடியோ ஃபங்ஷனில் கலந்துக்கிட்ட கஸ்தூரிராஜா, பேரரசு மாதிரி பெரிய இயக்குநர்கள், இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சின்னு சந்தோஷமா பாராட்டுனாங்க. இந்தப் பாராட்டுகளுக்கு முன்னாலே நான் பட்ட கஷ்டமெல்லாம் ஜுஜூபி.”
“முழுக்க புதுமுகங்களா?”

“இல்லை சார். அந்த ரிஸ்க் எடுக்க நான் ரெடியா இல்லை. நானும் ஹீரோயினும் மட்டும்தான் புதுசு. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ரோகிணி, அஜய்ரத்னம், வையாபுரி, ‘பிளாக்’ பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவான்னு எல்லாருமே எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்ட்டிஸ்ட்டுங்களாதான் எங்க டீமில் அமைஞ்சிருக்காங்க.”

“ஓ.... ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சமீபமா படங்கள் பண்ணுறது இல்லையே?”

“உண்மைதான். பூரண ஓய்வில் இருக்காரு. நான் அவரோட வெறித்தனமான ரசிகன். ஆசைப்பட்டு தயங்கித் தயங்கி அவர்கிட்டே கேட்டேன். எனக்காக ஒத்துக்கிட்டாரு. என்னோட படத்துக்கு அப்புறம் அவரு வேற படம் எதுவும் கமிட் ஆனதாவும் தெரியலை. பொதுவா மூர்த்தி சாரோட தனித்துவமே, ஸ்பாட்டுலே அவரா யோசிச்சி அடிக்கிற ‘டபுள் மீனிங்’ டயலாக்தான். தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளும்.

இந்தப் படத்துலே ‘ஐயர் மாமா’ என்கிற கேரக்டரில் வர்றாரு. ஆனா, எங்க படத்தில் டபுள் மீனிங்குக்கு இடமேயில்லை. “கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்”னு அவருகிட்டே கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன். என்னோட வேண்டுதலை நிறைவேற்றினார்.”“மத்த டெக்னீஷியன்ஸ்?”“சூப்பர் ஸ்டாருக்கே மியூசிக் போட்ட சந்திரபோஸோட மைத்துனர் கே.கே.தான் நமக்கு மியூசிக் பண்ணுறாரு.

ஆறு பாட்டும் அட்டகாசமா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நானே எழுதிட்டேன். ஏவிஎம் சீரியல்களுக்கு பிரமாதமா ஒளிப்பதிவு பண்ணின நாக.சரவணன்தான் நமக்கு கேமரா. இராம.நாராயணன் சார் படங்களில் எடிட்டிங் நறுக்குன்னு இருக்கும். நான் ரசிச்ச அந்த எடிட்டர் ராஜ்கீர்த்தியை என் படத்துக்கு எடிட் பண்ணச் சொல்லி கேட்டுக்கிட்டேன். இத்தனை திறமைசாலிகள் சேர்ந்துதான் என்னோட தேரை நகர்த்துறாங்க.”
“இவ்வளவு உற்சாகமா ஒருத்தரை சமீபத்தில் தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை சார். ரொம்ப நன்றி....”

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நமக்கு சென்னைதான் ஊரு. சொந்தமா பிசினஸ் பண்ணி கைநிறைய சம்பாதிக்கறேன். ஆக்சுவலா நான் பள்ளிப் படிப்பையே கூட சரியா முடிக்கலை. என்னோட அறிவெல்லாம் இலக்கியம் படிச்சி வந்தது. இப்பகூட என் வீட்டு லைப்ரரியில் 2000, 3000 புக்கு இருக்கும்.

ஒவ்வொரு புக்ஃபேரிலும் ஆயிரக்கணக்கில் புக்கு வாங்கி குவிச்சி படிப்பேன். டைரக்டர் மகேந்திரன் சார் எழுதின ‘உதிரிப் பூக்கள்’, சுஜாதா சார் எழுதிய ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ போன்ற புத்தகங்களை படிச்சிதான் சினிமாவுக்கு எழுத கத்துக்கிட்டேன். பாடல்கள் எழுதுகிற ஆற்றலும் எனக்கு வாசிப்பால்தான் கிடைச்சது.

நானே கூட ஓர் எழுத்தாளர்தான் சார். ‘உணராத உண்மைகள்’, ‘மனதைப் புரட்டு மதுவை விரட்டு’, ‘இளைஞனே இடிந்துவிடாதே’ உட்பட சில சூப்பர் டூப்பர் ஹிட் புத்தகங்களை எழுதியிருக்கேன். தலைப்பெல்லாம் எப்படி? கேட்டதுமே சும்மா கிர்ரடிக்குதுல்லே?”

- சுரேஷ்ராஜா