ஆனந்தியை லவ் பண்ணுறேன்! ‘யோகி’ பாபு அடாவடி



ஒரு நடிகர் திரையில் தோன்றுகிறார் என்றாலே கைதட்டலும், விசில் சப்தமும் அரங்கங்களில் அதிர்வது என்பது ஹீரோக்களுக்கு மட்டும்தான். விதிவிலக்காக சில காமெடி நடிகர்களும் இந்தப் பட்டியலில் அத்திபூத்தாற் போல இடம் பெறுவதுண்டு. தமிழ் சினிமாவில் லேட்டஸ்டாக அந்த அந்தஸ்தை எட்டி இருப்பவர் ‘யோகி’ பாபு.

“எனக்கே விபூதி அடிச்சிட்டேல்லே?” என்று அப்பாவியாக ‘காக்கா முட்டை’யில் அவர் கேட்கும்போது வெடித்துச் சிரிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஆர்ட்டிஸ்ட் இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. தினம் தினம் யாராவது இவரிடம் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

காமெடி வேடங்கள்தான் கிடைக்கிறது என்றாலும், இந்த புத்தாண்டில் இருந்து வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறார்.இடைவிடாது படப்பிடிப்புகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அவரை, ஒரு சிறு இடைவெளியில் பிடித்தோம்.
“வித்தியாசமா ரோல் பண்ணணும்னு சொல்றீங்க. எந்தமாதிரி?”

“எல்லா மாதிரியும். ஆரம்பத்துலே என்னோட தோற்றத்தை வெச்சி அடியாளா நடிக்கத்தான் இவன் லாயக்குன்னு முடிவெடுத்தாங்க. இப்போ காமெடியில் பட்டையைக் கிளப்புறேன். அடுத்த கட்டமா டிஃபரன்டான வில்லனா நடிக்கணும். டபுள் ஆக்‌ஷன் பண்ணணும்னுலாம் ஆசைப்படுறேன்.”
“ஆசை நிறைவேறுமா?”

“நிறைவேறிடிச்சி. சினிமாவில் ஏதாவது வித்தியாசமா பண்ணணும்னு மெனக்கெடற இளம் ஹீரோ சித்தார்த். அவரோட ‘சைத்தான் கி பச்சா’ படத்துலே வில்லனா நடிக்கறேன். அதுவுமில்லாமே டபுள் ஆக்‌ஷனில் நடிக்கவும் பேசிக்கிட்டிருக்காங்க. உங்ககிட்டே சொல்றதுக்கு என்னண்ணே! ‘மான் கராத்தே’ படத்துலே வேலை பார்த்த ரமேஷ், ஒரு படம் டைரக்ட் பண்ண கமிட் ஆகியிருக்கிறார்.

அதுலே ட்வின்ஸா டபுள் ஆக்‌ஷன் நமக்கு. அதுலே என்னோட ரெண்டு கேரக்டருக்கும் ஃபிளாஷ்பேக் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். என்னோட நடிப்பை இந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும் என்கிற நம்பிக்கை இருக்கு...”

“அதுக்கு அப்புறம்?”

“விஜய் சாரை வெச்சு ‘புதிய கீதை’ எடுத்தாரே டைரக்டர் கே.பி.ஜெகந்நாத்? அவரோட டைரக்‌ஷனில் வித்தியாசமான ரொமான்ஸ் ரோல். படத்தோட பேரை கேட்டாலே சிரிப்பு வரும். ‘என் ஆளோட செருப்ப காணோம்’.

இதுலே ‘கயல்’ ஆனந்தியை ஒன்சைடா லவ் பண்ணுற கேரக்டர் நமக்கு. படம் நெடுக வருவேன். டிஃபரன்ட் டிஃபரன்டா டாக்டிக்ஸ் பண்ணி, ஆனந்தியை மடக்க ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பேன். ஒவ்வொரு வாட்டியும் பல்பு வெடிச்சிடும். இதுவரைக்கும் நான் பண்ணின கேரக்டர்களில் இது ரொம்ப புதுசு.”

“இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையே?”

“நல்ல பொண்ணா இருந்தா நீங்களே பார்த்து பண்ணி வெச்சுடுங்கண்ணே. ஷாக் ஆயிடாதீங்க. எல்லாத்துக்கும் நேரம் காலம் அமையணுமா இல்லையா? ‘பாபுவுக்கு என்னா, சினிமாவுலே நடிச்சி லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான்’னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. இதுக்காக நான் பட்ட கஷ்ட, நஷ்டமெல்லாம் எனக்கும் என் குடும்பத்துக்கும்தான் தெரியும்.

ஒரு மகனா என்னோட குடும்பத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை இன்னும் முடிக்கலை. அதையெல்லாம் செஞ்சிட்டுதான் கல்யாணம் பத்தி யோசிக்கணும். இப்போ நாம இருக்கிற பிசி ஷெட்யூலில் அதைப்பத்தியெல்லாம் யோசிக்க டைமே இல்லை.”

- தேவராஜ்