சுயம் காக்க உரத்து ஒலிக்கும் உரிமைக்குரல்!‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. மேக்கப் அறையில் ஆனந்திக்கு டச்சிங் நடந்து கொண்டிருக்கிறது. அன்று எடுக்கப்பட இருக்கும் காட்சியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் உதவியாளர் விளக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஹீரோ ஜி.வி.பி. சாரோடு நெருக்கமா பேசிக்கிட்டிருக்கீங்க. சட்டுன்னு அவரு உங்களை கட்டிப் புடிச்சி உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துடறாரு. ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்து அவரை தள்ளிவிட முயற்சிக்கிற நீங்க, அப்புறம் ஒத்துழைக்க ஆரம்பிச்சிடறீங்க.”

இதைக் கேட்டதுமே ஆனந்திக்கு சுர்ரென்று கோபம். பாதி மேக்கப்பிலேயே எழுந்து நேராக இயக்குநரிடம் போகிறார்.“இப்படி ஒரு சீன் இருக்குறதா நீங்க முன்னாடி சொல்லவே இல்லையே?” குரல் உயர்த்திக் கேட்கிறார்.“கதையில் சில மாற்றம் செஞ்சிருக்கேன். அதில் இந்தக் காட்சி வருது. இப்போவெல்லாம் தமிழ் சினிமாவில் லிப்லாக் சீன் சர்வசாதாரணம்” என்கிறார் இயக்குநர்.

“நீங்க என்கிட்டே கான்ட்ராக்ட் போடுறதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்களோ, அதைத் தான் நடிப்பேன். இப்பவும் நான் காலேஜுக்கு போய்க்கிட்டிருக்கிற ஸ்டூடன்ட். இந்த மாதிரி சீனில் என்னைப் பார்த்தாங்கன்னா என்கூட படிக்கிற மத்தவங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க. அவங்க முகத்திலே எப்படி முழிப்பேன்? என்னை நீங்க இந்தப் படத்துலே இருந்து தூக்கிட்டாலும் சரி, இந்த சீனில் நான் நடிக்க மாட்டேன்” என்று கத்திவிட்டு, கோபத்தில் தன்னுடைய செல்போனைத் தூக்கி வீசியெறிந்துவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தார் ஆனந்தி.

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்கிற படத்தில் பிரணீதா, ரெஜினாவுடன் ஆனந்தியும் நடிப்பதாக இருந்தது. அதர்வா ஹீரோ. ‘இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள்’ என்று ஆனந்தியிடம் கதை சொல்லியிருந்தார் இயக்குநர் ஆதம் இளவரசு.

ஆனந்தி படப்பிடிப்புக்குத் தயாராக இருந்த நிலையில், மூன்று என்பது நான்கு ஹீரோயினாக கதையில் மாற்றம் செய்யப்பட்டது. புதியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நுழைந்தார். ஆனந்தியின் கேரக்டருக்கு சில காட்சிகள் குறைக்கப்பட்டன.

ஆனால், சம்பளம் அதேதான். இருப்பினும், ஆனந்திக்கு உடன்பாடில்லை. “பேசிய சம்பளத்தை கொடுத்து விடுகிறார்கள் என்பதற்காக, எனக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்ட படத்தில் என்னால் நடிக்க முடியாது” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டு, நடிக்க முடியாது என்று விலகியும் விட்டார்.

இவை இரண்டுமே தமிழ் சினிமா இதுவரை கண்டிராத நிகழ்வுகள்தான். தன்னுடைய சுயத்துக்காக ஒரு நடிகை போரிடுவது என்பது புதுசு கிடையாது. ஏற்கனவே பானுமதி யில் தொடங்கி காஜல் அகர்வால் வரை நூற்றுக்கணக்கான நடிகைகள் இதுபோல துணிச்சலாகச் செயல்பட்டவர்களே.

ஆனால், ஆனந்தி இன்னமும் தனக்கான இடத்தைப் பிடிக்காத வளர்ந்து வரும் நடிகை என்பதால்தான் அவரது மனஉறுதி இங்கே மெச்சத்தக்கதாக இருக்கிறது. வளரும் நடிகை என்றால் வளைந்து கொடுத்துதான் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அடாத சூழலை அடித்து நொறுக்கியிருக்கிறார் ஆனந்தி.

இங்கு மட்டுமல்ல, ஆணாதிக்கம் மிகுந்த தெலுங்கு சினிமாவிலும் கூட ஆனந்தியின் உரிமைக்குரல் உரத்துதான் கேட்கிறதாம்.ஆனந்திக்கு சினிமா பின்னணி எதுவுமில்லை. கோடீஸ்வர வீட்டு வாரிசும் கிடையாது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏராளமான சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தாலும், இன்றும் கல்லூரிப் படிப்பு போக மீதி நாட்களைத்தான் படப்பிடிப்புகளுக்கு ஒதுக்குகிறார்.

சினிமாவை ஒரு கேரியராக கவுரவத்தோடு ஒரு பெண் எடுத்துக்கொள்ள முடியும் என்கிற நிலையை உருவாக்கும் ஆனந்தி போன்றவர்களே, எதிர்காலத்தில் திரைத்துறையில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு முன்னோடி ஆகிறார்கள்.

- மீரான்