அச்சமின்றிஅச்சுறுத்தும் கும்பல்! ஆபத்தில் மூவர்!

‘என்னமோ நடக்குது’ என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜபாண்டி - ஹீரோ விஜய்வசந்தின் கூட்டணி, மீண்டும் அதே வெற்றியை எட்டியதா என்று பார்ப்போம்.விஜய்வசந்த், ஒரு பிக்பாக்கெட் திருடன். ஒரு நாள் அவரது தேட்டையில் விவகாரமான விஷயங்கள் கொண்ட மெமரி கார்ட் சிக்குகிறது. அதைப் பறிக்க ஒரு கும்பல் அவரைத் துரத்துகிறது.

கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் வீட்டில் வேலை செய்பவரின் மகள் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது விடைத்தாளை மறுகூட்டலுக்காக அனுப்புகிறார் சிருஷ்டி. அதைத் திரும்பப் பெறுமாறு ஒரு கும்பல், இவருக்கு கொலைமிரட்டல் விடுக்கிறது.தனது காதலியின் மர்ம மரணத்தை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி. அவரை ஒரு கும்பல் போட்டுத்தள்ள மூர்க்கத்தனமாக முயற்சிக்கிறது.

இந்த மூவருக்கான ஆபத்துகளுக்கும் காரணம் ஒரே கும்பல்தான். மூவரின் பிரச்னையும் எந்தப் புள்ளியில் இணைகிறது என்பதுதான் ‘அச்சமின்றி’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.கெட்டப்பில் செம கெத்து காண்பிக்கிறார் விஜய்வசந்த். ரொமான்ஸ், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் காண்பித்து கம்ப்ளீட் ஹீரோவாகி விட்டார். சிருஷ்டி டாங்கேவின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். அதற்காக வழக்கமான கிளாமரை அவர் குறைத்துக் கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டமில்லாத கல்வி அமைச்சர் வேடத்தில் ராதாரவிதான் இப்படத்தின் ஹைலைட். டயலாக் டெலிவரி மூலமாகவே கொடூர வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறது அவரது அனுபவ நடிப்பு. அவர் குறித்த சஸ்பென்ஸ் உடையும் இடம் ‘சபாஷ்’ போட வைக்கிறது.
மிடுக்கான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனிக்கு டெய்லர் மேட் ரோல். அம்மா கேரக்டரில் அழுது வடிந்தோ, காமெடியோ செய்துகொண்டிருந்த சரண்யா பொன்வண்ணனுக்கு இதில் ஸ்டைலிஷான கேரக்டர். கெட்டப், ஹேர் ஸ்டைல் என்று ஹீரோயின் ரேஞ்சுக்கு பின்னியெடுத்திருக்கிறார்.

பிரேம்ஜியின் இசையில் பாடல்களும், பின்னணியும் ஓக்கே. வெங்கடேஷின் ஒளிப்பதிவு கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. நம்முடைய மக்களின் கல்வி ஆர்வத்தை, பணப்பசி கொண்டவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை மிகவும் தைரியத்தோடு அழுத்தமாகக் கதை சொல்லி கிளாப்ஸ் வாங்குகிறார் இயக்குநர் ராஜபாண்டி.