துருவங்கள் பதினாறுடோண்ட் மிஸ் இட்!

ஊட்டியில் அடைமழை. இரவில் ஓர் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார்.மூன்று வாலிபர்கள் குடித்துவிட்டு ஒருவர் மீது காரை ஏற்ற, அவர் ஸ்பாட் அவுட். பயந்து போய் அந்த உடலை டிக்கியில் போட்டுக்கொண்டு கிளம்புகிறார்கள். டிக்கியில் போட்ட பிணத்தை டிஸ்போஸ் செய்ய நினைத்தால், அது காணோம்.

அப்பார்ட்மென்ட் ஒன்றில் தோழியுடன் வசிக்கும் இளம்பெண் திடீரென்று மாயம். அவருடைய வீட்டில் ரத்தக்கறை. ஆனால்- அது அப்பெண்ணின் ரத்தம் அல்ல.ஒரே இரவில் இதுமாதிரி வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மூன்று சம்பவங்கள். இன்ஸ்பெக்டர் ரகுமான் விசாரணையைத் தொடங்குகிறார். அவரது விசாரணையில் சீனுக்கு ஒரு ட்விஸ்ட். எல்லா முடிச்சும் இறுதியில் அவிழ்வதே ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரகுமான் ஹீரோவாக நடித்திருக்கிறார். யூனிஃபார்ம் அணியாமலேயே போலீஸ் மிடுக்கை பார்வையாலும், கம்பீரமான உடல்மொழியாலும் காட்டுகிறார்.படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள்தான். அனைவருமே அனுபவம் வாய்ந்த நடிகர்களைப் போல தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியம். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், மகனை இழந்து தவிக்கும் தந்தையாக ரசிகர்களின் கண்களைக் கலங்க வைத்திருக்கிறார் டெல்லி கணேஷ்.

இருளிலும் மிளிரும் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு. மிரளவைக்கும் ஸ்டைலான ஜித் சாரங்கின் எடிட்டிங். திகில் படத்துக்கேயான பிரத்யேகமான அம்சங்களைச் சேர்த்து மிரட்டல் இசையைக் கொடுத்திருக்கும் ஜேக்ஸ் பிஜாய் என்று டெக்னிக்கல் ஏரியாவில் படம் செமத்தியாக ஸ்கோர் செய்கிறது.

முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை யூகிக்க முடியாத விறுவிறுப்பான திரைக்கதை, அட்டகாசமான மேக்கிங் என்று கோடம்பாக்கத்தின் கவனத்தை முதல் படத்திலேயே தன் மீது குவித்திருக்கிறார் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன்.உலகப்படம் மாதிரி தமிழில் படங்கள் வருவதில்லை என்று புலம்பும் ஜோல்னா பை வாசகர்கள், ஒருமுறை இந்தப் படத்தை பார்த்துவிட்டு புலம்பலாம். மற்றபடி எல்லோருமே மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம்தான்.