அல்ட்டிமேட் ஸ்டாரின் அசத்தல் பயணம்!துணிச்சலுக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர் அஜீத்குமார். “நான் எந்தக் கட்சியையும் சாராதவன், எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம்” என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பும் கூட, அவருடைய ரசிகர்கள் ‘தல’ கண்ணில் படாமல் தலைமறைவு மன்றங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் பெயரில் வருடம் முழுக்க மக்களுக்கு நற்பணிகள் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்றால் அஜீத் என்கிற அளவுக்கு, சினிமாத்துறையினர் மட்டுமின்றி மற்றவர்களும் பின் தொடரக்கூடிய ரோல்மாடலாக உருவெடுத்திருக்கிறார். தீவிர ஆன்மீகவாதியான அஜீத்துக்கு நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கின்றன.

இதுவரை ஐம்பத்தியாறு படங்கள் நடித்து முடித்திருக்கும் அஜீத்குமாரின் திரையுலகப் பயணம் குறித்த ஒரு ரீவைண்ட், இந்தக் கட்டுரை.

தமிழில் செல்வா இயக்கிய ‘அமராவதி’ மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜீத், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார். இப்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படம், அவருக்கு 57வது படம்.

‘பவித்ரா’, ‘நேசம்’ என்று அஜீத்தை வைத்து இருபடங்கள் இயக்கியவர் கே.சுபாஷ். அஜீத் வளரும் காலத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமான இயக்குநராக, உற்ற நண்பராக இருந்தவர் சமீபத்தில் மறைந்த இந்த இயக்குநர்.‘வான்மதி’, ‘காதல் கோட்டை’ என்று அவரை வைத்து இரு படங்கள் இயக்கி, முன்னணி ஹீரோவாக்கியவர் அகத்தியன்.

அஜீத், திரையுலக வாழ்வின் நெருக்கடியான சூழல்களைக் கண்டபோது அவருக்கு கைகொடுத்த ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களை கமர்ஷியல் மன்னன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். அவர் ‘தல’யாக உருவெடுத்த பின்னர், அவருடைய மாஸை தக்கவைக்கும் படங்களாக விஷ்ணுவர்த்தன் இயக்கிய ‘பில்லா’, ‘ஆரம்பம்’ அமைந்தன.

இவர்கள் தவிர்த்து ‘அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ என்று  ராஜ்கபூரும், ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ என்று எஸ்.எழிலும் அஜீத்தின்  இருபட இயக்குநர்கள் பட்டியலில் இணைகிறார்கள்.‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து இப்போது அஜீத்தின் 57வது படத்தை இயக்குவதின் மூலம் அவரை வைத்து மூன்று படங்கள் இயக்கிய பெருமை ‘சிறுத்தை’ சிவாவுக்கு கிடைக்கிறது.

அல்டிமேட் ஸ்டாரான அஜீத்தை நான்கு படங்களில் இயக்கிய சாதனைக்கு ஒரே ஒருவர்தான் சொந்தக்காரர். அஜீத்தின் ஃபேவரைட் டைரக்டரான சரண். இவரது இயக்கத்தில் ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என்று நான்கு படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

‘அமராவதி’ - செல்வா, ‘பிரேம புஸ்தகம்’ (தெலுங்கு) - கொல்லப்புடி சீனிவாஸ், ‘பாசமலர்கள்’ - சுரேஷ் மேனன், ‘ராஜாவின் பார்வையிலே’ - ஜானகி சவுந்தர், ‘ஆசை’ - வசந்த், ‘கல்லூரி வாசல்’ - பவித்ரன், ‘மைனர் மாப்பிள்ளை’ - வி.சி.குகநாதன், ‘ராசி’ - முரளி அப்பாஸ், ‘உல்லாசம்’ - ஜேடி -ஜெர்ரி, ‘பகைவன்’ - ரமேஷ் கிருஷ்ணன், ‘ரெட்டை ஜடை வயசு’ - சி.சிவகுமார், ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ - விக்ரமன்,

‘உயிரோடு உயிராக’ - சுஷ்மா அகுஜா, ‘தொடரும்’ - ரமேஷ்கண்ணா, ‘உன்னைத் தேடி’ - சுந்தர்.சி, ‘வாலி’ - எஸ்.ஜே.சூர்யா, ‘நீ வருவாய் என’ - ராஜகுமாரன், ‘முகவரி’ - வி.இசட்.துரை, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ - ராஜீவ் மேனன், ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ - கவிகாளிதாஸ், ‘தீனா’ - ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ - சரவணசுப்பையா, ‘அசோகா’ (இந்தி) - சந்தோஷ் சிவன், ‘ரெட்’ - சிங்கம்புலி, ‘என்னை தாலாட்ட வருவாளா’ - கே.எஸ்.ரவீந்திரன், ‘ஆஞ்சநேயா’ - என்.மகாராஜன்,

‘ஜனா’ - ஷாஜிகைலாஷ், ‘ஜி’ - என்.லிங்குசாமி, ‘பரமசிவன்’ - பி.வாசு, ‘திருப்பதி’ - பேரரசு, ‘ஆழ்வார்’ - செல்லா, ‘கிரீடம்’ - ஏ.எல்.விஜய், ‘ஏகன்’ - ராஜுசுந்தரம், ‘மங்காத்தா’ - வெங்கட் பிரபு, ‘பில்லா-2’ - சக்ரிடோலட்டி, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ - கவுரி ஷிண்டே, ‘என்னை அறிந்தால்’ - கவுதம் வாசுதேவ் மேனன் என இதுவரை மொத்தம் 39 இயக்குநர்கள் அஜீத்தை வைத்து தலா ஒரு படம் இயக்கி இருக்கிறார்கள். கூட்டிப் பார்த்தால் கணக்கு ஒன்று கூடுதலாக வரும். ஏனெனில் ‘உல்லாசம்’ படத்தை இயக்கியவர்கள் ஜேடி & ஜெர்ரி என்று இரண்டு இயக்குநர்கள்.

மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க அஜீத் என்றுமே தயங்கியதில்லை. திரையுலகில் அவருடைய போட்டியாளரான விஜய்யுடனேயே ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

பிரசாந்துடன் ‘கல்லூரி வாசல்’, விக்ரமுடன் ‘உல்லாசம்’, சத்யராஜுடன் ‘பகைவன்’, கார்த்திக்குடன் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘ஆனந்தப் பூங்காற்றே’, பார்த்திபனுடன் ‘நீ வருவாய் என’, மலையாள ஹீரோ சுரேஷ்கோபியுடன் ‘தீனா’, அப்பாஸுடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ஆர்யாவுடன் ‘ஆரம்பம்’ என்று நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அஜீத், சொந்தக்குரலில் பேசவில்லை. ‘அமராவதி’, ‘பாசமலர்கள்’ ஆகிய படங்களில் இவருக்கு குரல் கொடுத்தவர் இன்னொரு ஹீரோவான விக்ரம்.‘அசல்’ படத்தின் திரைக்கதை, வசனப் பணிகளில் இயக்குநர் சரணுக்கு அஜீத் உதவினார். மட்டுமின்றி படப்பிடிப்பிலும் சரணுக்கு கை கொடுத்தார். இதையடுத்து அஜீத்தின் பெயரை படத்தின் டைட்டிலில் இணை இயக்குநர் என்று சரண் வெளியிட்டார்.

‘அமர்க்களம்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். அதுவரை நிறைய காதல் கிசுகிசுக்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு ஷாலினி வாயிலாகவே வாழ்க்கை நேர்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்குப் பிறகு ஷாலினி நடிப்பதில்லை. அனோஷ்கா என்கிற மகள், ஆத்விக் என்கிற மகன் இவர்களது திருமண வாழ்வின் மகிழ்ச்சிகரமான அடையாளமாக பிறந்திருக்கிறார்கள். அஜீத்தின் மைத்துனி ஷாலினி (‘அஞ்சலி’ பாப்பா), மச்சான் ரிச்சர்ட் இருவருமே நடிப்புத்துறையில் இருக்கிறார்கள்.

‘அல்ட்டிமேட் ஸ்டார்’ என்று ரசிகர்களால் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை தன்னுடைய படங்களின் டைட்டிலில் போடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் அஜீத். அவரை இயக்கும் இயக்குநர்களுக்கு இது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. வெறுமனே அஜீத்குமார் என்று திரையில் ஒளிர்ந்ததுமே, தமிழ்நாடே ஆர்ப்பரிக்கிறது என்றாலும் ‘தல’யின் கெத்துக்கு ஒரு பட்டம் போட்டால்தானே வெயிட்டு என்கிறார்கள் அவரை இயக்குபவர்கள்.

நடிப்பு மட்டுமின்றி அஜீத்துக்கு விளையாட்டிலும் ஆர்வமுண்டு. அட்டகாசமாக பேட்மிண்டன் விளையாடுவார். அது மட்டுமின்றி ஆபத்தான மோட்டார் ரேஸ் விளையாட்டுகளிலும் வல்லவர். கார், பைக் ரேஸ் வீரரான இவர், ஒரு படத்திலாவது பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

தரையில் மட்டுமின்றி வானத்திலும் டிரைவிங் செய்வதில் இவர் கில்லி. விமானம் ஓட்டுவதற்கு உரிய பைலட் லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறார். கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குட்டி விமானங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்கவிட்டு விளையாடுவது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

சொந்தமாக படம் தயாரிக்க வசதியாக ‘ஏகே இன்டர்நேஷனல்’ என்கிற கம்பெனியின் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ‘தல’யின் தயாரிப்பில் அவரே நடிப்பாரா அல்லது மற்ற ஹீரோக்களுக்கு வாய்ப்பளிப்பாரா என்பது மில்லியன் டாலர் சஸ்பென்ஸ்.

- தேவராஜ்