துரத்தும் துரதிருஷ்டம்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 23

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?” என்று ஒருமுறை கூட புலம்பாத ஒரே ஒருவரை காட்டுங்கள். அவருக்கு நாமெல்லாரும் சேர்ந்து மெரீனா பீச்சில் சிலை வைப்போம்.வாழ்க்கை எல்லோரையும் எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பதில்லை அல்லவா?வாழ்வில் நான்கு படிகள் மேலே ஏறுவதற்கு மூச்சு இரைக்கிறது. ஆனால், மிகச் சுலபமாக நாற்பது படிகள் சறுக்கி விடுகிறது.

‘பட்ட காலிலேயே படும்’ என்பதைப் போல, ஒரு முறை அடிவாங்கியவனுக்கே மறு கன்னம் என்றில்லாமல் கால், கை, முதுகு என்று உடலின் சகலபாகங்களிலும் அடிவிழுவது இயல்புதான். “என்னோட டைம் சரியில்லை. வேறென்ன சொல்லுறது?” என்று ஒருகட்டத்தில் இந்த வீழ்ச்சிகளை ஒப்புக்கொள்ள முடிந்தவனாலேயே, அந்த வீழ்ச்சிகளிலிருந்து மீண்டும் மேலெழ முடியும்.

ஒட்டுமொத்த முப்பத்தியாறு சிச்சுவேஷன்களில் ஏழாவதாக நாம் பார்ப்பது இந்த ‘துரதிருஷ்டம்’ என்கிற சூழலைத் தான்.அறுபதுகளில் இந்த சூழலை வைத்து ஐநூறு படமாவது எடுத்திருப்பார்கள்.ஹீரோ கஷ்டப்பட்டு முன்னேறுவான். ஒரு மகிழ்ச்சியான டூயட்டோ அல்லது குடும்பப்பாட்டோ இடம்பெற்று அடுத்த இரண்டாவது காட்சியில் இடைவேளைக்கு முன்பாக அவனுக்கு ஒரு சிக்கல் தோன்றும்.

இடைவேளைக்குப் பின்பு இந்தச் சிக்கல் இடியாப்பச் சிக்கலாக மாறி, கிளைமேக்ஸில் செத்து கித்து தொலைத்துவிடுவானோ என்கிற பதட்டமே படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுவிடும். இதற்குள் இரண்டு சோகப்பாட்டு வேறு பாடிவிடுவான் (அதில் ஒன்று முன்பு அவன் சந்தோஷமாக பாடிய பாட்டையே, கொஞ்சம் வரிகளை மாற்றி சோகமாக பாடுவதாக இருக்கும்). எத்தனை படம் பார்த்திருப்போம் இதுமாதிரி? அதிலும் ‘துலாபாரம்’ எல்லாம் வேற லெவல். துரதிருஷ்டத்தில் இருந்து மீளுவதற்கு நம்பிக்கைக் கீற்றே கொஞ்சம்கூட தெரியாது.

‘ராஜா ஹரிச்சந்திரா’ காலத்தில் இருந்தே இந்தத் துரத்தும் துரதிருஷ்டம் சிச்சுவேஷன், சினிமாவுக்கு செமையாக ஒர்க்கவுட் ஆகிறது.

இடையில்தான் உலகப்பட தாக்கத்தில் நாம் சற்று தடம் புரண்டு விட்டோம்.இன்றைய டிரெண்டுக்கு துரதிருஷ்டத்தை எப்படியெல்லாம் விதம் விதமாக கதையாக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஏனெனில் படம் பார்க்கும் ரசிகன், மிகவும் எமோஷனலாக படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களோடு தன்னை பொருத்திப் பார்த்துக் கொள்ள இந்தக் கதைகள் உதவுகின்றன.

‘நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’, இந்த சிச்சுவேஷனை காமெடியாக ஹேண்டில் செய்த படம்.ஹீரோ விஜய்சேதுபதிக்கு இன்னும் இரண்டு நாளில் கல்யாணம். இருவீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்தவளை கஷ்டப்பட்டு கை பிடிக்கப் போகிறார்.

திடீரென அவரது பைக் வேறு தொலைந்து போகிறது. ஆபீஸில் எம்.டி. போட்டு வாட்டு வாட்டென்று வாட்டுகிறார். இந்தக் கவலைகளை மறக்க நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுகிறார். கீழே விழுந்து கவலைகளோடு காதலி, கல்யாணம் அனைத்தையும் மறந்துவிடுகிறார். அவருக்கு எப்படி நண்பர்கள் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஹீரோவை துரத்தும் (அல்லது வேறேதேனும் மைய கதாபாத்திரத்தை துரத்தும்) துரதிருஷ்டம் என்பதை வைத்து சோகப்படமெல்லாம் எடுக்க வேண்டியதில்லை, காமெடியாகவும் எடுக்கலாம் என்று எடுத்துக் காட்டி வென்றிருக்கிறார்கள்.நீங்கள் இந்த சிச்சுவேஷனை வைத்து ரொமான்ஸ் அல்லது த்ரில்லர் எழுத முயற்சியுங்களேன். அல்லது ஒரு பேயை துரதிருஷ்டம் துரத்துகிறது என்று எழுதிப் பாருங்கள். சூப்பராக இருக்கும்.

(தொடரும்)