பூர்ணாவுக்கு கல்யாணம்!பூர்ணாவும், பாவனாவும் நெருங்கிய தோழிகள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் கேரளாவிலிருந்து ஃபீல்டுக்கு வந்தார்கள். பாவனா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பெரிய ரவுண்டு அடித்துவிட்டு டயர்டாகி இப்போது கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக முடிவெடுத்து விட்டார்.

பூர்ணாவுக்கோ சரியான கேரக்டர்கள் அமையாமல் தட்டுத் தடுமாறி, தெலுங்குக்குப் போய் அங்கே சில குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்று பிரபலமான பின்பே, இப்போது தமிழில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி யிருக்கிறது.

இயக்குநர் ராமுக்கு ஜோடியாக ‘சவரக்கத்தி’, அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘சதுரங்கவேட்டை-2’ படங்களில் நடித்து வருபவருக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைத்தது. உடனே அவருக்கு முன்பாக ஆஜரானோம்.
“கேள்விப்பட்டது உண்மையா?”

“ஆமாம். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையா என்னோட பேரன்ட்ஸ் பார்த்துக்கிட்டிருக்காங்க. எந்த ஒரு பெற்றோருமே தங்கள் மகளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து, சிறப்பா வாழவைக்கணும்னுதான் விரும்புவாங்க.”
“அப்போ நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்களா?”

“கல்யாணம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான மங்களகரமான ஒரு நிகழ்ச்சி. அதை நான் இழக்க மாட்டேன். இதுவரை நான் யாரையும் காதலிச்சதில்லை. அதனாலேதான் கல்யாணப் பேச்சை எங்கேயும் பேசலையே தவிர, எனக்கு கல்யாணம் வேணாம்னு நான் மறுத்ததே இல்லை.”

“அப்போன்னா சீக்கிரமே கல்யாண அழைப்பிதழை எதிர்பார்க்கலாமா?”
“இன்னும் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்கலை. கிடைச்சதும் அடுத்த வருஷ இறுதியில் கல்யாணம் கண்டிப்பா நடக்கும். வெளிப்படையா எல்லாருக்கும் அறிவிச்சிதான் செய்வேன்.”

- தேவராஜ்