சினிமான்னா எல்லாருக்கும் போதை!



மனிஷாஸ்ரீ பளிச்...

திரையில் தோன்றும் ஹீரோயினை விட்டுவிட்டு, சைடில் வரும் தோழிகளை சைட் அடிக்கும் பழக்கம் சினிமா ரசிகர்கள் ஏராளமானோருக்கு உண்டு. சமீபத்தில் அப்படி ‘வீரசிவாஜி’ படத்தில் சைட் அடிக்கப்பட்ட பியூட்டி டால் மனிஷாஸ்ரீ. படம் பார்த்து முடித்ததுமே அவருக்குத்தான் போன் அடித்தோம்.

“என்னை கவனிச்சி போன் பண்ணினதுக்கு நன்றி. ‘வண்ணத்திரை’ன்னு சொல்லுறீங்க. கொஞ்சம் வேறமாதிரி உங்களைப் பத்தி சொல்லியிருந்தாங்க. இருந்தாலும் வளர்ந்து வரும் நடிக, நடிகையருக்கு நீங்கதான் வலுவா கை கொடுக்கறீங்கன்னும் சில பேர் சொன்னாங்க. இப்போ என்னை பேட்டிக்கு கேட்குறீங்க பாருங்க. அதுலே இது நிரூபணம் ஆயிடிச்சி” என்று கிலோ கணக்கில் நம் தலையில் ஐஸ் வைத்தார்.அடுத்த அரை மணி நேரத்தில் மனிஷாவுக்கு முன்பாக மப்பாக அமர்ந்திருந்தோம்.

“தோழி கேரக்டரில் நடிக்கத்தான் மெட்ராசுக்கு ஃபிளைட் பிடிச்சீங்களா?”
“ஓ. நோ. நீங்க நினைக்கிற மாதிரி நான் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. ‘இருக்கு ஆனா இல்ல’ படத்தில் நான்தான் ஹீரோயின். அதுக்கு அப்புறம் ரெண்டு படம் ஹீரோயினா பண்ணியிருக்கேன்.

தொடர்ந்து வாய்ப்பு தேடுறப்போ ‘இருக்கு ஆனா இல்ல’ன்னு நிறைய டைரக்டர்ஸ் பதில் சொன்னாங்க. ‘வீரசிவாஜி’ பெரிய படம் என்பதால் ஃப்ரண்ட் கேரக்டர் பண்ண ஓக்கே சொல்லிட்டேன். ஏன்னா, படத்தோட ஹீரோயின் ஷாம்லி வர்ற சீன் எல்லாத்துலேயும் நானும் இருப்பேன். இந்தப் படத்தில் என் முகத்தை நோட்டீஸ் பண்ணிட்டு இப்போ நிறைய ஆஃபர் வருது. அப்புறம் நான் கம்ப்ளீட் நார்த் இண்டியன் கிடையாது.”

“அதானே பார்த்தேன்... நல்லா தமிழ் பேசுறீங்களே?”

“அம்மா தீபா ஜெய்ப்பூர். அப்பா நரேஷ் சென்னை. வட இந்தியாவும் தென்னிந்தியாவும் கூட்டணி போட்டு பிறந்த குழந்தை நான். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். லயோலா காலேஜில்தான் படிச்சேன். எம்பேரு மனிஷாதான். சினிமாவுக்காக  எக்ஸ்ட்ராவா சேர்த்துக்கிட்டேன்.”

“சினிமா ஆசை எப்படி?”

“ஸ்கூல் படிக்கிறப்பவே விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க. பிரபலமான ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரம்தான் என்னோட ஃபர்ஸ்ட். குத்துமதிப்பா இதுவரைக்கும் ஆயிரம் விளம்பரம் பண்ணியிருப்பேன். அப்போலேருந்தே மாசத்துக்கு இருபத்தஞ்சி நாளாவது ஷூட்டிங்கில்தான் இருப்பேன்.

மூணு வருஷம் முன்னாடிதான் ‘இருக்கு ஆனா இல்ல’ படத்தோட ஆடிஷனில் ஓர் அனுபவத்துக்காக கலந்துக்கிட்டேன். செலக்ட் பண்ணிட்டாங்க. ஆரம்பத்தில் ஃபேமிலியில் பிராப்ளம் பண்ணினாலும், அப்புறம் நான் சினிமாவில் நடிக்க ஓக்கே சொல்லிட்டாங்க.”

“மாடலிங்கில் இருக்குற நிறைய பேர், இப்போ சினிமாவுக்கு வரத் தயங்குறாங்களே?”

“ஆமாம். கையிலே காசு, வாயிலே தோசை மாதிரி அந்த ஏரியா. நாம நடிச்சி முடிச்சி வீட்டுக்கு போறதுக்குள்ளே நம்ம அக்கவுண்டுலே துட்டு போட்டுடுவாங்க. சினிமா அப்படி இல்லையே? இங்கே ரிஸ்க் ரொம்ப அதிகம். படவாய்ப்பு கிடைக்கிறதே சிரமம். கிடைச்சபிறகு நம்மை தொடர்ச்சியா தக்க வெச்சுக்குறதுக்குள்ளே நாக்கு வெளியே தள்ளிடுது.”

“பார்க்க பளீர்னு இருக்கீங்க?”

“டயட்டெல்லாம் எதுவுமில்லை. ஜிம்முக்கு போறதில்லை. எதுவா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட்டா போதும். எப்பவும் அழகாதான் இருப்போம்.”
“உங்களை டிவியில் பார்த்தமாதிரி ஞாபகம்?”

“என்ன பாஸ் இது? ஆயிரம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன்னா பார்க்காமலா இருந்திருப்பீங்க. அது மட்டுமில்லாம செஃப் தாமுவோட சேர்ந்து புரோகிராம் பண்ணியிருக்கேன். நானே நல்லா சமைப்பேன். ஒரு முறை சாப்பிட்டு பார்க்கறீங்களா?”

“இந்த ரிஸ்க்கை இன்னொரு நாளைக்கு எடுத்துக்கறேனே! கேட்க வேண்டிய கேள்வியை மறந்துட்டேன். கிளாமர்?”“ஆயிரம் பேர் கிட்டேயாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பீங்க இல்லே? எனக்கு கிளாமர் செய்ய ஆட்சேபணை இல்லை. கதைக்குத் தேவையான பட்சத்தில் அது இருக்கணும். அதாவது ‘தேவி’ படத்தில் தமன்னா பண்ணமாதிரி. அப்புறம், அந்த ட்ரெஸ்ஸில் நான் அழகா தெரியணும் என்பதுதான் என்னோட கண்டிஷன்.”

“பிடிச்ச ஹீரோ?”

“ரஜினி சார் ஆல்டைம் ஃபேவரைட். இப்போ தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன். ஒருநாள் இவங்க மூணு பேருக்குமே ஹீரோயினா நடிப்பேன்.”
“உங்க தன்னம்பிக்கையை பாராட்டுறோம். பிடிச்ச ஹீரோயின்?”

“இந்தியில் கஜோல். சவுத் இண்டியாவில் நித்யாமேனன். ‘ஓக்கே கண்மணி’யில் நித்யாவோட பெர்ஃபாமன்ஸ் சும்மா அள்ளிடிச்சில்லே! அப்புறம் ஜோதிகா, நயன்தாரா ரெண்டு பேரையுமே பிடிக்கும்.”

“விளம்பரத்துறையை விட்டு சினிமாவுக்கு வந்துட்டோமேனு ஃபீல் பண்ணுறீங்களா?”

“ஒரு டிசிஷன் எடுத்தாச்சி. திரும்ப அதைப்பத்தி யோசிச்சி பிரயோஜனமில்லை. இந்த மூணு வருஷத்துலே நிறைய சம்பாதிச்சிருக்க முடியும்தான். ஆனா, சினிமாவில் ஃப்ரெண்ட் கேரக்டரில் வந்ததுக்கே எனக்கு எவ்வளவு புகழ் கிடைச்சிருக்கு! இரண்டாயிரம் விளம்பரங்களில் நடிச்சிருந்தாலும் இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டேன். சினிமான்னா எல்லாரும் போதை ஆகுறதுக்கு இந்த உடனடி பரவலான அங்கீகாரம்தான் காரணம்.”

“வேற என்ன படங்கள்?”

“இப்போ ‘போங்கு’ ரிலீஸ் ஆகுது. இதில் ரூஹிசிங்தான் ஹீரோயின். இருந்தாலும் அவங்களைவிட எனக்குதான் நட்டு சாரோட அதிக சீன்ஸ். அரசியல்வாதியோட பொண்ணா நடிக்கிறேன். இந்தி, தமிழ் ரெண்டிலும் தயாராகுற ‘மீண்டும் வா அருகில் வா’ன்னு ஒரு திகில் படம். இதுக்கப்புறம் இன்னொரு முக்கியமான பிராஜக்ட் இருக்கு. அது சஸ்பென்ஸ்.”

- சுரேஷ்ராஜா