அசை போடலாம்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 16

கதைவிட கற்றுக் கொடுக்கும் இந்த தொடர் தொடங்கி பதினைந்து வாரங்கள் கடந்து விட்டன. சும்மா ஜல்லியடித்திருக்கிறோமோ அல்லது உருப்படியாக ஏதேனும் கதைவிடுகிறோமோ என்று ஒருமுறை அசை போடவேண்டிய நேரம் இது. ஏனெனில், அடுத்து மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் தொடர்ச்சியாக பல வாரங்களுக்கு கதைவிடப் போகிறோம்.

இதுவரை நாம் கற்றுக் கொண்டது என்னென்ன?

*  சினிமாவுக்கு சொல்லும் கதை நாலே வரிகளில் நறுக்கென்று அமையவேண்டும். அந்த நாலு வரியில் ஒருவரை கவர தவறிவிட்டால், அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்படவே லாயக்கற்றது.

*  முரண்தான் கதையின் கரு. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார், அவருக்கு ஒரு ராணி. ஊரே சுபிட்சமாக இருந்தது’ என்று முரணின்றி சொன்னால், அது கதைக்கு உதவாது. ‘தந்திரக்கார மந்திரிக்கு ராஜா ஆக ஆசை, கூடுதலாக ராணி மீதும் கண்’ என்று ஒரு முரண் அமைத்து கொக்கி போட்டால்தான் அது சுவாரஸ்யமான கதை.

*  இதுவரை எடுக்கப்பட்ட வெற்றிகரமான படங்களின் ஒன்லைனர் எது என்பதை கண்டுபிடித்து எழுதிப் பார்ப்பது, கதை எழுதுவதற்கான அடிப்படைப் பயிற்சி. இந்த ஒன்லைனரில் காணப்படும் முரண்களை அடையாளம் கண்டுகொள்வதே கதை எழுதுவதற்கான அடிப்படை முயற்சி. உதாரணத்துக்கு ‘எந்திரன்’ படத்தின் ஒன்லைனர் என்ன? ‘இயந்திரமான ரோபோவுக்கு உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மீது காதல்’

*  தழுவுதல் ஒரு கலை. காதலியையோ / மனைவியையோ தழுவுவதை சொல்லவில்லை. ‘பார்த்தது’, ‘கேட்டது’, ‘படித்தது’  இந்த மூன்று விஷயங்களில் இருந்து சினிமாவுக்கான ஒரு கதையை தழுவுவது. பிற மொழிகளில் பார்த்த படங்களையோ / வாசித்த நாவல்களையோ நம் தமிழுக்கு ஏற்றமாதிரியாக தழுவுவது தப்பேயில்லை. மகாபாரதத்தின் கர்ணனை எவ்வளவு அழகாகத் தழுவி மணிரத்னம் ‘தளபதி’ ஆக்கினார்?

*  ‘தி செவன் பேசிக் பிளாட்ஸ்’ என்கிற அற்புதமான நூலை எழுதிய கிறிஸ்டோபர் புக்கர் விவரிக்கும் ஏழுவிதமான கதைகளை திரும்பத் திரும்ப ஒருவரிக் கதைகளாக எழுதிப் பார்ப்பது புதுமையான கதைகள் உருவாகவும், உங்களது பேனா எந்தவித கதையையும் பிரசவிக்க தயாராகவும் செய்யும்.

*  ‘தி பேசிக் பேட்டர்ன்ஸ் ஆஃப் ப்ளாட்’ நூலில் ஃபாஸ்ட்டர் ஹாரிஸ் என்பவர் சொல்லித் தரும் டெக்னிக். இதன் அடிப்படையில் முதன்மை பாத்திரம் ஏற்படுத்தக்கூடிய மூன்று விதமான சாத்தியங்கள் கொண்ட விளைவுகளை அட்சரசுத்தமாக கற்றுக் கொண்டால், கதை விடும்போது எந்த இடத்திலும் உங்கள் கற்பனைக்கு முடிச்சே விழாமல் கதைக்கு இஷ்டத்துக்கும் முடிச்சு போடலாம்.

*  இரண்டாயிரங்களுக்கு பிறகான கதை சொல்லும் முறைகளில் உருவாகியிருக்கும் ஏழு போக்குகளை அறிந்து வைத்துக் கொள்வது, நம் எழுத்துத் திறமையை இன்றைய தேதிக்கு அப்டேட் செய்துகொள்ள உதவும்.வெறும் 15 வாரங்களில் இத்தனை விஷயங்களையும் மிக எளிமையான உதாரணங்களோடு நாம் கற்றிருக்கிறோம்.

எழுத்து என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அதை பாடமாக படித்து மட்டுமே ஒருவர் கற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்’ என்று நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பொய் சொல்ல கற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த புனைவுத் திறமையை பாசிட்டிவாக கதை எழுத பயன்படுத்தக் கூடாதா என்கிற ஆதங்கத்திலேயே இந்தத் தொடர் எழுதப்படுகிறது.

‘கதை எழுதுவது எப்படி?’ என்று சந்தையில் விற்கப்படும் பல்வேறு ஆங்கில நூல்களை பல்லாயிரம் ரூபாய் செலவழித்து வாங்கி, நேரம் வீணாக்கி வாசித்துக் குழம்பிய ஒருவரே, தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் முடிந்தவரை எளிமையான தமிழில் இங்கே மொத்தமாக இறக்கி வைக்க முயற்சிக்கிறார். ஓரிருவராவது இதற்குள்ளாக நான்கைந்து ஒன்லைனர்கள் யோசித்து இருப்பீர்களேயானால் இந்தத் தொடர் எழுதப்படுவதின் நோக்கம் நிறைவேறி வருகிறது என்று அர்த்தம்.

(கதை விடுவோம்)