நரிக்குறவர் மொழியில் தமிழ்ப்படம்!



“நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...” என்று எம்.ஜி.ஆர். நரிக்குறவர் வேடத்தில் ஆடிப்பாடியது இன்று வரைக்கும் ஹிட்டு. பிற்பாடு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ‘குறத்தி மகன்’ என்று நரிக்குறவர்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டு படமெடுத்தார்.

இதைத் தவிர்த்து அவர்களின் வாழ்க்கையை சினிமாவில் வெளிப்படுத்திய பதிவுகள் மிகவும் குறைவுதான். இப்படிப்பட்ட நிலையில் நரிக்குறவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து துணிச்சலாக படமெடுத்திருக்கிறார் இயக்குநர் அக்னி ஆதவன். ‘வேதபுரி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் குறித்து அவரிடம் கேட்டோம்.

“கிராமத்துப் படங்களே அரிதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் நரிக்குறவர்களை வெச்சு படமெடுத்திருக்கீங்க?”

“மனித வாழ்வில் பிரச்னை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான். ஏழை, பணக்காரன் பேதமெல்லாம் பிரச்னைக்கு இல்லை. அந்த அடிப்படையில் நரிக்குறவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளை நான் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் முழுக்கவே நரிக்குறவர்கள்தான் நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேசக்கூடிய மொழியைத்தான் படத்திலும் பேசுவார்கள். தமிழில் சப் டைட்டில் போடுகிறோம்.”

“மொழிக் குழப்பம் வரும் போலிருக்கே?”

“நல்ல கதைக்கு மொழி குழப்பமெல்லாம் வராது. சினிமா என்பதே தனி மொழிதான். நல்ல ஒரு சினிமா ரசிகன், தான் அறியாத ஐரோப்பிய மொழிப் படங்களைக் கூட எந்த குழப்பமுமில்லாமல் டிவிடி வாங்கிப் பார்க்கிறான். நரிக்குறவர்களின் மொழியைத் தான் நான் ப்ளஸ் பாயின்டாக நினைக்கிறேன். மற்ற படங்களி லிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய அம்சம் அதுதான். யதார்த்தமாக இருக்கும் என்பதால் ரசிகர்களையும் அது ஈர்க்குமென்று நம்புகிறேன். நரிக்குறவர்கள் தங்களுக்குள் தமிழில் பேசுவதாகக் காட்டினால், அது யதார்த்தத்துக்குப் புறம்பானது.

அப்புறம் சண்டைக்காட்சி களும், பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இதுவரை சினிமாவில் பார்க்காத வித்தியாசமான சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சரவணன் கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறார்.”
“கதை?”

“வேதபுரி என்றொரு ஊர்.  இந்த ஊரில் வசிக்கும் குறவர்கள் அடுத்தடுத்து சில விசித்திரமான விபரீதங்களைச்  சந்திக்கிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம் என்பதே தெரியவில்லை. இந்த  விபரீதத்தில் இருந்து எப்படி விடுபடுகிறார்கள், தங்களுக்கு பிரச்னை செய்கிறவர்களை எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. ஈஷா செல்வா,  ரசாக் என்று இரட்டை நாயகர்கள். தேவதா, யோகா இருவரும் இவர்களுக்கு ஜோடிகள்.”

“உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?”

“சொந்த ஊரு பாண்டிச்சேரி. நான் மட்டுமில்லை. இந்தப் படத்துல நடிச்சிருக்கிறவங்க, டெக்னீஷியன்ஸ் எல்லாருமே பாண்டிச்சேரிதான். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிச்சேன். படிச்சி முடிச்சதும் பாண்டியில் சொந்தமா லோக்கல் சேனல் ஒண்ணு நடத்தினேன். இருந்தாலும் சினிமா எடுக்க வேண்டுமென்கிற ஆசை உள்ளுக்குள்ளேயே தணலாகக் கனன்று கொண்டிருந்தது. என்னுடைய நண்பரான பாஸ்கர் சீனிவாசன் சர்வதேச கராத்தே சாம்பியன். அவருக்கு என்னுடைய கதை பிடிச்சிருந்ததாலே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.”

- சுரேஷ்ராஜா