கமர்ஷியலாக பக்தி பரப்பும் கன்னிசாமி!



ஆடி மாசத்தில் அம்மன் படங்கள் என்றால், கார்த்திகை மாசத்தில் ஐயப்பன் படங்கள். தொடர்ச்சியாக பேய் படங்கள் தமிழ் சினிமா ரசிகர் களை மிரட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென ‘மேற்கு முகப்பேர் கனக துர்கா’ வெளியாகி, பரபரப்பாக ஓடி பக்தர்களின் நெஞ்சில் பால் வார்த்தது. அதேபோலவே ஐயப்பனின் புகழ்பாடும் படமாக உருவாகி, வெளிவரத் தயாராக இருக்கிறது ‘கன்னிசாமி’.

இதில் ‘பருத்தி வீரன்’ சித்தப்பு சரவணன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக மேக்கப் போட்டிருக்கிறார். அர்ச்சனாசிங் ஹீரோயின். கே.ஆர். மணிமுத்து எழுதி இயக்குகிறார். பக்திப்பட ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஏற்கனவே ‘குருசாமி’, ‘அபூர்வ மகான்’ படங்களை இயக்கியிருக்கிறார்.

ஹீரோ மேடைப் பாடகர். அவரை துரத்தித் துரத்தி காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோயின். இவர்கள் இருவரது இல்லற வாழ்க்கையிலும் வில்லன் மூலமாக பிரச்னை வருகிறது. அடுத்தவரின் மனைவி என்று தெரிந்தும் நாயகிக்கு ரூட்டு விடுகிறார் வில்லன். இந்த ஆசை பேராசையாகி, என்ன நடந்தாலும் ஹீரோயினை அடைந்தே தீருவது என்று முரட்டுத்தனமாக முயற்சிக்கிறார்.

காமக்கொடூரனான வில்லனிடமிருந்து ஹீரோயினை, ஹீரோ எப்படி கடவுள் அனுக்கிரகத்துடன் காப்பாற்றுகிறார் என்பதை கமர்ஷியல் அயிட்டங்களைக் கலந்து கட்டி சொல்லுவதே ‘கன்னிசாமி’.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு நடைப்பயணமாகச் செல்லும் வழித்தடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றிருக்கும் கண்மணிராஜாவின் கைவண்ணத்தில் ‘கன்னிசாமி’ படப்பாடல்கள் இந்த கார்த்திகை சீசனில் ஹிட்டடிக்கும் என்கிறார்கள்.

“சமீப வருடங்களில் வெளிவந்த பல பக்திப்படங்கள் தெலுங்கு உள்ளிட்ட வேறு மொழிகளில் எடுக்கப்பட்டு, இங்கே டப்பிங் செய்யப்பட்டவைதான். அப்படியில்லாமல் ‘கன்னிசாமி’, தமிழிலேயே நேரடியாக தயாரிக்கப்பட்டிருக்கும் முழுநீள பக்திப்படம். இதில் நடித்த அனைவரும் விரதமிருந்து பய பக்தியோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். ரசிகர்களை பக்திப் பரவசத்தில் ‘கன்னிசாமி’ நிச்சயம் ஆழ்த்தும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் கே.ஆர்.மணிமுத்து.

- ரா