கமல் பேச்சை கேட்பேன்! என் மனம் போல் நடப்பேன்!



கவுதமி மனம் திறக்கிறார்...

ரஜினியுடன் இணை சேர்ந்தாலும், ராமராஜனுக்கு துணையானாலும், நடிப்பில் அசத்தும் கலைஞி கவுதமி. மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் அவருடன் ஒரு சந்திப்பு:“நடிப்பில் இடைவெளி விட்டது ஏன்?”“நான் சினிமாவை விட்டு விலகவில்லை. ஆடை வடிவமைப்பு செய்து வருகிறேன். பொருத்தமான கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தேன். ‘பாபநாசம்’ அமைந்தது. அடுத்து மோகன்லாலுடன் ‘நமது’ செய்கிறேன்.”
“‘நமது’ எப்படிப்பட்ட படம்?”

“ஏற்கனவே ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, தமிழில்  ‘இருவர்’  படங்களில் அவருடன் நடித்துள்ளேன். இக்கதைக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று அவரும் டைரக்டரும் விரும்பி என்னை அழைத்தார்கள். டைரக்டர் சந்திரசேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார்.    அவர் இயக்கிய ‘அய்த்தே’ படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கியது.

அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. முன்பாக டைரக்டர் மோகன்லாலிடம் கதை சொல்லக் கேட்டபோது, ஒரு வருடம் பிஸி என்று சொன்னாராம். ஆனால், முழுக் கதையையும் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வன்முறை இல்லாத படம் இது. தமிழ், தெலுங்கில் நானே டப்பிங் பேசுகிறேன். மலையாளத்தில் பேச முயற்சிப்பேன்.”
“தொடர்ந்து நடிப்பீர்களா?”

“பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சினிமாவை விட்டு எங்கும் போகமாட்டேன். அது என் ரத்தத்தில் ஊறிவிட்டது.”“உங்கள் மகள் சுப்புலட்சுமி சினிமாவுக்கு வருவாரா?”“சினிமாதான் அவுங்களுக்கும் விருப்பம். இதில் எந்த துறை  பிடிக்கிறதோ அதில் ஈடுபடுவார்.”“கமல்ஹாசனின் ஆலோசனைப்படி நடிக்கிறீர்களா?”“அவரது பேச்சைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் என் மனம் போல்தான் நடப்பேன்.”

-நெல்பா