அம்மா!



ஹீரோயினிஸம்

மலையாள இறக்குமதி நடிகைகள் பொதுவாகவே தங்களுடைய முதல் பேட்டியில் மறக்காமல் இதை சொல்வார்கள்.“நான் பாரம்பரியமான குடும்பத்துப் பொண்ணு. அதனாலே கிளாமரா நடிக்க மாட்டேன்.

அது என்னோட தோற்றத்துக்கும் ெசட்டாகாது. அப்படி நடிச்சுத்தான் வாழணுங்கிற அவசியமும் எனக்கு இல்லை. நான் நடிக்கிற படத்தை, நானே என் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கணும்.”

இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால், மூன்றாம் படத்திலேயே இந்த சபதத்தையெல்லாம் முற்றும் துறந்து நிற்பார்கள். கேட்டால், கதைக்கு கிளாமர் தேவைப்பட்டது என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். நயன்தாராவிலிருந்து, நாளை அறிமுகப்போகும் நடிகைகள் வரை அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.

ஆனால், தான் சொன்ன சொல்லில் இருந்து கொஞ்சமும் மீறாமல் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் சொன்ன வாக்கை காப்பாற்றி வருபவர் சரண்யா பொன்வண்ணன்.ஷீலா என்கிற இயற்பெயர் கொண்ட சரண்யா, கேரளாவில் ஆலப்புழையில் பிறந்தவர். இவரது அப்பா ஏ.பி.ராஜ், மலையாளத்தில் அறுபத்தைந்து படங்கள் இயக்கிய பிரபலமான இயக்குநர்.

தன்னுடைய பதினேழாவது வயதில் சரண்யா என்கிற பெயரில் மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மும்பையைச் சேர்ந்த சிகப்பு விளக்குப் பகுதி பெண்ணாகத் துணிச்சலாக நடித்தார். ஆனாலும், இன்றுவரை கண்ணியம் குறையாத தோற்றத்தில் மட்டுமே சரண்யாவை நாம் சினிமாவில் கண்டிருக்க முடியும்.

அவர் இளம் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ படவாய்ப்புகளை, விருப்பமில்லாத உடைகளை அணியவேண்டியது என்பதால் தவிர்த்திருக்கிறார். உடை விஷயத்தில் மட்டுமல்ல, சினிமா உலகில் பழகும் விஷயத்திலும் சரண்யா, எல்லா நடிகைகளுக்கும் முன்மாதிரிதான்.

அவர் முன்னணி நடிகையாக இருந்த காலகட்டத்தில் அவரைப்பற்றி எவ்வித தவறான தகவல்களும் வெளிவருவதைப் போல நடந்துகொண்டதே இல்லை. நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை மணந்து கொண்டு பொன்னான இல்லற வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

கிளியோபாட்ராவே தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நடித்தாலும், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவரும் அம்மா/அண்ணி வேடங்களுக்குத்தான் அழைக்கப்படுவார். அப்படியொரு நியதி. ஒரு நடிகருக்கு ஹீரோயினாக நடித்தவர்களே, பிற்பாடு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்ததெல்லாம் தமிழ் சினிமாவில் நடந்தவைதான்.

இனி ஹீரோயினாக நடிக்க முடியாது என்கிற நிலை சரண்யாவுக்கு வந்தபோது, எந்தவித தயக்கமுமின்றி அம்மா கேரக்டர்களை ஒப்புக் கொண்டார். “இரண்டு மகள்களைப் பெற்றவள் நான்.

சினிமாவில் அம்மாவாக நடிக்கும்போது, நான் பெறாத பிள்ளைகள் மீதும் எனக்கு தாய்மையுணர்வு ஏற்படுகிறது” என்று அவர் சொன்னபோது, அதுவரை சினிமாவில் வெறும் சென்டிமென்டுக்காக மட்டுமே ஒப்புக்குச் சப்பாணியாக அமைக்கப்படும் அம்மா கேரக்டர்களுக்கு பெரிய மரியாதையே தோன்றியது. அம்மா வாக நடித்து தேசியவிருதை வென்ற ஒரே நடிகை சரண்யாவாக மட்டுமே இருக்கும்.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக நடித்தார். அப்படத்துக்காக வயலில் மாடுகட்டி ஏர் ஓட்டி நடித்தார். வெறுங்காலுடன் கல்லும் முள்ளும் நிறைந்திருந்த பாதைகளில் தன்னை துன்பப்படுத்திக் கொண்டு அவர் நடித்ததற்குத்தான் தேசியவிருது நிவாரணமாக அமைந்தது.

‘ராம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘எம் மகன்’, ‘களவாணி’, ‘நீர்ப்பறவை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வேலையில்லா பட்டதாரி’ என்று பல்வேறு படங்களில் கோடிக்கணக்கான தமிழக அம்மாக்களின் பிரதிநிதியாக சரண்யா தோன்றி, தாய்மையுணர்வைப் பெருமைப்படுத்துகிறார். ஒவ்வொரு தமிழனும் சரண்யாவின் முகத்தில் தன் அம்மாவை காண்கிறானே... இதைவிட பெரிய வெற்றியும், பெருமையும் ஒரு நடிகைக்குக் கிடைத்துவிட முடியுமா என்ன?

- மீரான்