நயன்தாரா அபாரம்!



‘பாகுபலி’யின் சரித்திரம் காணாத வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்குப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடியிருக்கிறது. ‘செல்வந்தன்’, ‘பிரபாஸ் பாகுபலி’, ‘இது தாண்டா போலீஸ்’, ‘மக தீரா’, ‘புருஸ்லீ’, ‘எவன்டா’ உட்பட ஏராளமான படங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றி வெளியிட்டவர் பத்ரகாளி பிரசாத்.

இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வரும் ‘செல்வி’யை வெளியிடும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தில் நாயகனாக வெங்கடேஷ், நாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்கள்.

இவர்களோடு ஜெயப்பிரகாஷ், சம்பத், செளகார்ஜானகி என்று தமிழுக்கு அறிமுகமான நட்சத்திரப் பட்டாளமும் உண்டு. இசை ஜிப்ரான். ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு. தமிழில் வசனங்கள் எழுதியிருப்பவர் ரீமேக் மன்னன் ஏ.ஆர்.கே.ராஜராஜா. படத்தை இயக்கியிருப்பவர் தெலுங்கில் முன்னணி இயக்குநராக இருக்கும் மாருதி.மாருதியிடம் படம் குறித்து கேட்டோம்.

‘‘தெலுங்கில் ‘பாபு பங்காரம்’ என்ற பெயரில் தயாராகி வரும் படம்தான் தமிழில் ‘செல்வி’யாக வருகிறது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, ரஷ் காட்சிகளை பார்த்த ஹீரோ வெங்கடேஷ் என்னை அழைத்து, இப்படத்தை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழுக்கு அறிமுகமான நடிகர்கள், டெக்னீஷியன்களை டீமில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் சொன்னார். அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்டதாலேயே இப்படம் இப்போது தென்னிந்தியாவின் பெரிய படங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கமல் சாருடன் தொடர்ச்சியாக வேலை பார்த்து அனுபவம் பெற்ற ஜிப்ரான்தான் எங்களுக்கு இசையமைக்கிறார். கமல் ஒரு டெக்னீஷியனை கொண்டாடுகிறார் என்றால், அவரது திறமை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜிப்ரானுடனான ஆரம்பகட்ட கம்போஸிங்கின்போதே, அவரது அசாத்தியத் திறமையை உணர்ந்தேன்.

ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட டூயட் பாடல்கள் மிகப்பிரமாதமாக வந்திருக்கின்றன. நயன்தாரா முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்து நடனம் ஆடினார். ஏற்கனவே வெங்கடேஷோடு, நயன்தாரா இணைந்து நடித்த ‘லக்ஷ்மி’, ‘துளசி’ படங்கள் சூப்பர்ஹிட். எனவே, இந்த ஜோடி தெலுங்கில் வெகுவாக சிலாகிக்கப்பட்ட ஜோடி. மூன்றாவது முறையாக இணைகிறார்கள் எனும்போது, மொத்த சுமையும் இயக்குநரான என் மீதுதான் வந்து விழுந்திருக்கிறது.

வெங்கடேஷ் ஏற்கனவே போலீஸாக காக்கி உடையில் நிறைய முறை நடித்திருக்கிறார். டப்பிங் புண்ணியத்தில் தமிழ் ரசிகர்களும் அவரை காக்கி உடையில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இம்முறை, ‘வந்துட்டேன்னு சொல்லு’ எனுமளவுக்கு இளமையான தோற்றத்தில் ஜம்மென்று இருப்பார். அவருடைய பிறந்தநாளில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. காதல், காமெடி, ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் வெற்றிதான் அவருடைய பிறந்தநாளுக்கு நான் தர வைத்திருந்த பரிசு.

முக்கியமான இன்னொருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இப்படத்தை தெலுங்கில்தான் நான் இயக்குகிறேன். முழுமையாக தமிழாக்கம் செய்து, அதற்கு பொருத்தமான தமிழ் வசனங்களை எழுதி ஒரிஜினல் தமிழ்ப்படம் மாதிரியே உருவாக்கியிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜாதான் அவர். அவர் ஏராளமான தெலுங்குப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, டோலிவுட்டுக்கு கோடம்பாக்கத்தில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்” என்று முடித்துக் கொண்டார் இயக்குநர் மாருதி.

“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ‘செல்வி’, மறக்க முடியாத படமாக இருக்கும். எங்களது பத்ரகாளி பிலிம்ஸ் கம்பெனியில் பல்வேறு மொழிகளிலும் தயாராகும் படங்களை மொழி மாற்றிக் கொடுத்து வருகிறோம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். தரமான கதையம்சம் உள்ள இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை எட்டும்.

பல்வேறு மொழிகளிலும் நெடுங்காலமாக டப்பிங் துறையில் ஈடுபட்டிருக்கும் எனக்கு தமிழில் கிடைத்ததைப் போல பெரிய வரவேற்பு வேறெங்கும் கிடைத்ததில்லை. நான் நேரடியாக தயாரிக்கும் முதல் படம் தமிழில்தான் இருக்க வேண்டும் என்பது என் கனவு. ‘செல்வி’யின் மூலமாக அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் காலம் கனிந்திருக்கிறது” என்று சந்தோஷமாக சொல்கிறார் படத்தை தமிழில் வெளியிடும் பத்ரகாளி பிரசாத்.

- எஸ்