தழுவலாம்! தப்பில்லை!!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 5

ஒரு வரியில் கதை எழுதச் சொல்லிவிட்டீர்கள். என்னத்தை எழுதுவது என்றே தெரியவில்லை என்று ஏகப்பட்ட பேர் சொல்கிறீர்கள். சின்ன வயதிலிருந்து கதைகளையே கேட்டு வளர்ந்த கலாச்சாரத்தில் பிறந்த நமக்கா கற்பனைப் பஞ்சம்?

இராமாயணம், மகாபாரதத்தில் தொடங்கி கடந்த வாரம் கடைக்கு வந்த மாத நாவல்கள், டிவி சீரியல்கள் வரை எத்தனை கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் ஒருவரியில் எழுதத் தொடங்கினால், ஒரே நாளில் நம்மால் நூறு கதைகள் கூட எழுத முடியும்.

“என்னை காப்பி அடிக்கச் சொல்கிறீர்களா?” என்று உடனே தொடையைத் தட்டி கிளம்பிவிடாதீர்கள். அயல்மொழிகளில் வந்த படங்களின் டிவிடியைப் பார்த்து, அப்படியே சீனுக்கு சீன் கதை பண்ணி, படமெடுப்பதுதான் காப்பி.

நீங்கள் கேட்ட, பார்த்த, கேள்விப்பட்ட ஏதோ ஒரு கதையின் தாக்கத்தில் அதன் அடிநாதத்தை மட்டும் பிடித்து, உங்கள் படைப்பாற்றலின் விளைவாக உருவாகும் கதை உங்கள் கதைதான். அதில் சந்தேகம் எதுவுமில்லை. மனைவியை/காதலியை ஆசையாகத் தழுவுவது மாதிரி கதைகளைத் தழுவ கற்றுக் கொள்வோம். சொல்வதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் சினிமாவில் காலம் தள்ள அடிப்படையான பண்பு, இந்த தழுவுதல்தான்.

சினிமா விவாதக் கூட்டங்களில், “ஒரு சீன் சொல்லுங்க...” என்று கேட்கப்படும்போது ‘ஙே’யென்று முழித்துக் கொண்டிராமல், படபடவென்று நீங்கள் பார்த்த சினிமாவிலிருந்தோ, வாசித்த நாவலிலிருந்தோ, நேரில் கண்டதோ அல்லது வாய்மொழியாகக் கேட்டதோ என்றொரு சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், நீங்கள்தான் அடுத்த பாக்யராஜ்.

நீங்கள் சொல்லும் சீன் அப்படியே படத்தில் வரப்போவதில்லை. கொஞ்சம் பட்டி தட்டி டிங்கரிங் பார்த்துத்தான் வைக்கப் போகிறார்கள். உங்களால் தங்கு தடையின்றி ‘சீன்’ சொல்ல முடிகிறது என்பதுதான் சினிமாவில் உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தப் போகும் பண்பு.

ஒரு ரயில் பயணத்தில் தான் சந்தித்த மனிதர் ஒருவரின் வாழ்க்கை அனுபவங்கள்தான் ‘காதல்’ படத்தின் கதையை எழுதத் தூண்டியது என்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். நாமும் எவ்வளவோ பயணிக்கிறோம். எத்தனையோ பயணிகள் நம்மிடம் பேசுகிறார்கள். எத்தனை பேருக்கு இந்தப் பேச்சுகளில் ஒரு சினிமா ஒளிந்திருக்கிறது என்று தோன்றியிருக்கிறது?

‘பார்த்தது’, ‘கேட்டது’, ‘படித்தது’  இவற்றை சினிமாவாக மனதுக்குள் ரீல் ஓட்டிப் பார்ப்பவன் மட்டுமே சினிமாக்காரன் ஆக முடியும்.மகாபாரதத்தில் தான் வாசித்த கர்ணனின் கதையைத்தான் இயக்குநர் மணிரத்னம், ‘தளபதி’யாக எடுத்திருக்கிறார். மார்லன் பிராண்டோ நடித்த ‘காட்ஃபாதர்’, உலகளவில் சினிமா இயக்குநர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்.

அதை அப்பட்டமாக பல மொழிகளிலும் காப்பி அடித்திருக்கிறார்கள். ஆனால், மணிரத்னமோ அப்படத்தின் ஒருவரிக் கதையை எடுத்துக்கொண்டு மனதுக்குள் உருப்போட்டு, களம் மாற்றி, கதாபாத்திரங்களை புதியதாக உருவாக்கி எடுத்த ‘நாயகன்’, தழுவுதலுக்கு பெரிய மரியாதையையே இந்தியத் திரையுலகில் ஏற்படுத்தியதை யாராவது மறுக்க முடியுமா என்ன?

தழுவுதல் என்பது குற்றமல்ல. அதற்காக வெட்கப்பட வேண்டியதுமில்லை. சினிமா தோன்றிய காலத்திலிருந்தே இதிகாசங்களிலிருந்து, நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து கதைகளைத் தழுவியே படமாக்கி வருகிறார்கள்.

நாம் சிறுவயதில் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் கதைகள் பெரும்பாலும் வேறுமொழிப் படங்களிலிருந்தோ, கதைகளிலிருந்தோ தழுவியவைதான். அப்படியே காப்பி அடிப்பதற்கும், ஒரு கதையில் ஈர்க்கப்பட்டு அதை மெருகேற்றி புதிய கதையாக உருவாக்குவதற்கும் வித்தியாசமுண்டு.

சமீபத்திய ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.ஆங்கிலத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் நாவல்கள் மிகவும் பிரபலம். அதுபோலவே பெண் எழுத்தாளரான அகதா கிறிஸ்டி எழுதிய மர்ம நாவல்களும் உலகப் பிரசித்தம். இந்த இரண்டையும் கலந்துகட்டி ஒரு புதுவித தழுவுதலைச் செய்துகாட்டி பிரும்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் பி.வாசு.

பாரதி வாசு என்கிற பெயரில் இரட்டை இயக்குநர்களாக சந்தானபாரதியும், பி.வாசுவும் இணைந்து ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் அறிமுகமானார்கள். தமிழ், தெலுங்கில் இவர்கள் இரட்டை இயக்குநர்களாக பணிபுரிந்து கொண்டிருந்தாலும் கன்னடத்தில் தனியாகவே தன் கணக்கை ஆரம்பித்தார் பி.வாசு. முதல் படமே கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை வைத்து இயக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

‘குரி’ என்கிற அந்தப் படம் சூப்பர்ஹிட்டாகி, பி.வாசுவை தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் சேர்த்தது. அதன் பிறகு தமிழில் அவர் கோலோச்சியிருந்தாலும், தனக்கு வாழ்வு கொடுத்த கன்னடத்தை என்றுமே மறந்ததில்லை. கன்னடத்தின் வரலாற்றுச் சாதனை திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்குமார் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு வாசுவுக்கு கிடைக்கிறது. சூப்பர்ஹிட் இயக்குநரும், சூப்பர் ஸ்டாரும் இணைகிறார்கள். எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகும்.

அதை பூர்த்தி செய்ய வேண்டுமில்லையா?அதற்குத்தான் ஜேம்ஸ்பாண்ட்  அகதா கிறிஸ்டி தாக்கத்தில் ஒரு கதையை உருவாக்கினார். ஏனெனில் சிவராஜ்குமாரின் அப்பா ராஜ்குமார், ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைகளைத் தழுவி நடித்து கன்னடத்தில் ஏராளமாக ஹிட் கொடுத்தவர்.

வாசுவோ, அகதா கிறிஸ்டி பாணியிலான மர்மக் கதைகளை இயக்குவதில் மாஸ்டர் என்று பெயரெடுத்தவர். ரசிகர்கள், வாசு -  சிவராஜ்குமார் காம்பினேஷனில் இந்த இரு தன்மைகளையுமே எதிர்பார்ப்பார்கள் இல்லையா?‘மர்டர் ஆன் த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’ என்கிற அகதா கிறிஸ்டியின் நாவலில் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. ஒரு டிடெக்டிவ் அதை துப்பறிந்து, கடைசி அத்தியாயத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிகிறார். இந்த ஒன்லைனரை பிடித்து, ‘சிவலிங்கா’ என்கிற பிரும்மாண்டமான வெற்றியைக் கொடுத்திருக்கிறார் பி.வாசு.

அகதா கிறிஸ்டியின் நாவலில் ஆவி இல்லை. ‘சிவலிங்கா’வில் தன்னுடைய டிரேட்மார்க் ஆவியைக் கொண்டுவருகிறார் வாசு. படத்தின் முதல் காட்சியிலேயே பி.வாசுவின் மகன் சக்தி, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்படுகிறார். அது ஒரு கொலை என்று முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்கு சொல்லப்பட்டு விடுகிறது.

தற்கொலை என்று கேஸ் ஊத்தி மூடப்படுகிறது. கொல்லப்பட்ட சக்தியின் காதலி, தன்னுடைய காதலர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பேயில்லை என்று வாதிடுகிறார். அதையடுத்து சிஐடியான சிவராஜ்குமார் துப்பறிகிறார். சிஐடியின் மனைவியான வேதிகாவின் உடலில் ஆவியாக உட்புகும் சக்தி, கேஸைத் துப்பறிய உதவுகிறார் என்று கதை போகிறது. கிளைமேக்ஸ், அப்படியே அகதா கிறிஸ்டியின் நாவல் பாணியிலேயே அமைந்திருக்கிறது.

விறுவிறுப்பான ஒரு டிடெக்டிவ் நாவலில் தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் எடுத்து தழுவிக்கொண்டு, தன்னுடைய சொந்த சரக்கை பொருத்தமான இடங்களில் பொருத்தி மகத்தான வெற்றியை எட்டியிருக்கிறார் பி.வாசு. தமிழிலும் இப்படத்தை லாரன்ஸை நாயகனாக்கி இயக்குகிறார் வாசு.

தழுவுதலுக்கான இலக்கணம் இதுதான். ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தையோ, கொரியன் படத்தையோ அப்படியே சீன் பை சீனாக சுடுவதுதான் ஈயடிச்சான் காப்பி. தனக்கு பிடித்த கதையை, தன் பாணியில் புதுக்கதையாக உருவாக்கிக் கொடுப்பது சினிமாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான்.

‘டைட்டானிக்’ சம்பவத்தை அப்படியே காப்பி அடித்துவிட்டார் என்று ஜேம்ஸ்கேமரூனை யாராவது குற்றம் சாட்ட முடியுமா என்ன? நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தழுவி, தன் பாணியில் கொடுத்ததால்தானே உலகமே அசந்துபோகக்கூடிய மகத்தான காவியத்தை அவரால் தரமுடிந்தது?

(கதை விடுவோம்)