சினிமா என்பது ஒன்வே! ‘காதல்’ சுகுமார் பேட்டி



காதல்’ படத்தில் சென்னைக்கு வரும் காதலர்களான பரத்துக்கும், சந்தியாவுக்கும் அடைக்கலம் தரும் நண்பராக நடித்து புகழ்பெற்றவர் சுகுமார். எனவேதான் தன் பெயரையே ‘காதல்’ சுகுமார் என்று மாற்றிக் கொண்டார்.

தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் ‘திருட்டு விசிடி’ படம் மூலமாக டைரக்டர் ஆகிவிட்டார். இப்போது தன்னுடைய இரண்டாவது படமான ‘சும்மாவே ஆடுவோம்’ ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

“என்ன கதை?”
“தமிழர்களின் பாரம்பரியமான கூத்துக்கலை போன நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்தது. உலகமயமாக்கலுக்குப் பிறகு மிகவும் நலிவுற்றுவிட்ட அக்கலையை நம்பி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களின் கதை இது. கேட்குறப்போ டாக்குமென்டரி ஃபீல் வரும். ஆனா, நம்ம ஏரியாவான கம்ப்ளீட் காமெடியில் அடிச்சி ஆடியிருக்கோம்.

மதுரையில் உள்ள ஜமீன் ஒருத்தர் கூத்துக் கலைஞர்களுக்காக இலவசமா ஒரு கிராமத்தை கொடுக்குறாரு. அந்த கிராமத்துக்கு ‘கூத்துப்பேட்டை’ன்னு பேரு. அங்கு வாழ்பவர்கள் நவீனகால கலை வளர்ச்சியோடு போட்டி போட முடியாம தடுமாறுகிற காலத்தில் அந்த கிராமமே பறிபோய்விடும் என்பது போல நிலைமை. அந்த ஆபத்தை அவங்க எப்படி எதிர்கொள்ளுறாங்க என்பதுதான் கதை.“நீங்கதான் ஹீரோவா?”

“இல்லைங்க. நீச்சல் வீரரான அருண்பாலாஜியை ஹீரோவா அறிமுகப்படுத்துறோம். இவர் சர்வதேச அளவில் பல சாதனைகளை நீச்சலில் செய்திருக்கிறார். குற்றாலீஸ்வரனோட சாதனையை முறியடித்தவர் இவர்தான்.

நடிப்பிலும் எதிர்நீச்சல் போட்டு ஜெயிச்சிருக்காரு. ஹீரோயின் லீமா பாபு. கதைக்கு டர்னிங் பாயின்டா வருகிற ஒரு கேரக்டரில் தயாரிப்பாளர் டி.என்.ஏ.ஆனந்தன் நடிச்சிருக்காரு.”
“நீங்க கேட்டா பெரிய ஹீரோக்களே கால்ஷீட் கொடுப்பாங்களே?”

“உண்மைதான். எல்லார் கிட்டேயும் எனக்கு நல்ல நட்பு இருக்கு. அவங்க கிட்டே போய் ஒரு கதையை நாம சொல்லி மறுத்துட்டாங்கன்னா ஒரு மாதிரி ஆயிடும். அவங்களே நம்மளைக் கூப்பிட்டு, ‘ஒரு கதை சொல்லு சுகுமாரு’ன்னு கேட்குற அளவுக்கு வளரணும். அதுதான் என் ஆசை.”“இனிமே ரெகுலரா டைரக்‌ஷன்தானா?”

“சினிமா என்பது ஒன்வே. வெற்றியோ, தோல்வியோ, உள்ளே நுழைஞ்சுட்டவன் இங்கேயேதான் சுத்திக்கிட்டிருக்கணும். இப்போதான் ரெண்டாவது படம் டைரக்ட் பண்ணுறேன். முதல் படத்துலே செஞ்ச தவறுகளை களைஞ்சி, இதை நல்ல வெற்றிப்படமா உருவாக்குறதுதான் என் ஆசை.

தமிழ் சினிமா எப்பவுமே மாற்றங்களை அனுமதிக்கிற ஜனநாயகத்தை கொண்டிருக்கு. நட்சத்திரங்கள் இல்லைன்னாலும் பரவாயில்லை, நல்ல படம் எடுத்தா அதை மக்களிடம் கொண்டு சேர்த்துடலாம் என்கிற நம்பிக்கையை நிறைய நிறுவனங்கள் இப்போ தந்துக்கிட்டிருக்கு. தொடர்ச்சியா இயக்குவதற்கு வாய்ப்பு கிடைச்சிக்கிட்டே இருக்கும்னுதான் நினைக்கிறேன். பார்ப்போம்.”

“கொஞ்சநாளா ஹீரோக்கள் இணைந்து நடிக்கிற டிரெண்ட் பிரபலம் ஆகுது. பிரபல காமெடி நடிகர்கள் அதுமாதிரி இணைந்து நடிப்பீங்களா?”“முன்னாடியெல்லாம் அப்படித்தான் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா, இப்போ அது சவாலான காரியம் ஆயிடிச்சி. என்னோட படத்தில் பெரிய காமெடி நடிகர்களோடு பாண்டு, கொட்டாச்சி, போண்டாமணி உள்ளிட்ட நாற்பத்தைந்து காமெடி நடிகர்கள் நடிக்கிறாங்க.”“ஹீரோக்கள் பிறமொழிகளில் நடிக்கப் போய் வெற்றியை சுவைக்கிறாங்க. காமெடி நடிகர்களால் முடியலையே?”

“ஏன் இல்லை? நம்ம கோவைசரளா தெலுங்கில் சக்கைப்போடு போடுறாங்க. ஷகீலாகூட தெலுங்குக்கு போய் செமத்தியான காமெடி கேரக்டர்ஸ் செய்யுறாங்க. அதே மாதிரி தெலுங்கிலிருந்து பிரும்மானந்தம் வந்து இங்கே ‘மொழி’ மாதிரி படமெல்லாம் செஞ்சிருக்காரு. ஆனா, இது பரவலா நடக்கலை.

இதுக்கு காரணம் நேட்டிவிட்டி பிரச்சினைதான். வட்டார வாழ்க்கை முறை பொறுத்து நாம காமெடி செஞ்சி பழகிட்டோம். அதுதான் நம்ம சினிமாவில் க்ளிக்கும் ஆகுது. வாய்ப்பு கிடைக்குதேன்னு நான் தெலுங்குக்கோ, கன்னடத்துக்கோ போய் ஏதாவது பேசி நடிச்சா அது அறுவையாதான் இருக்கும். இங்கிருக்கிறவங்களை திருப்திப்படுத்தவே நமக்கு நேரம் சரியா இருக்கு.”

- சுரேஷ்ராஜா