இசையால் காதலியை வசப்படுத்தியவர்!



ராஜபாளையம் அருகே உள்ள மேட்டு வடகரையில் மாரியப்பன்- பாலாம்பிகை பெற்றோரின் மகனாகப் பிறந்தார் மனோகரன். பன்னிரெண்டாம் வகுப்புவரை ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். கல்வி நிலையத்தில் பயின்றவர், இளநிலை அறிவியல் படிப்பை விருதுநகர் வி.எச்.என்.எஸ். கல்லூரியில் முடித்தார். பாட்டி சொல்லும் திருப்புகழ் மற்றும் திருவாசக பாடல்களைக் கேட்டு வளர்ந்ததால் இசையின்மீது இயல்பாகவே ஆர்வம் பிறந்தது.

கிடார் வாங்கி தனது போக்கில் வாசித்து வந்தவரை, ராஜபாளையம் ராஜ்குமார் பாதிரியார் முறைப்படுத்தி, முழுமையான கலைஞனாக மாற்றினார். சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒலியமைப்புப் பொறியாளர் படிப்பை மூன்றாண்டுகள் கற்றுத்தேர்ந்தார் மனோகரன்.

இசையமைத்துப் பாட்டுக்கட்டுவதில் பக்குவம் பெற்றிருந்த இவருக்கு கல்லூரி வட்டத்தில் ரசிகர் கூட்டம் இருந்தது. மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக புகழ்மிகு இசையமைப்பாளர் ஒருவர் கல்லூரிக்கு வந்திருக்கிறார்.

‘உடனே ஒரு பாட்டெழுதி, மெட்டுப்போட்டு, பாடிக்காட்டமுடியுமா?’ என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘மழை உடனே பெய்துவிடாது. அதற்கென கால அவகாசம் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர்.

‘எங்கள் மாணவர் மனோகரனால் அது சாத்தியமாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்ததும், இசையமைப்பாளர் ஒரு சூழலைச் சொல்ல, இவர் பாடல் வரிகளை எழுதி, மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அரங்கம் நிரம்பிய  கரவொலியில் முதல் ஓசை இசையமைப்பாளருடையதாக இருந்தது.

திரைப்படக் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் யுவன் ஷங்கர் ராஜா, தேவி  பிரசாத்,  மணிசர்மா, டி.ராஜேந்தர், வித்யாசாகர் ஆகியோரிடம் ஒலிப்பதிவுப் பொறியாளராகப் பணியாற்றினார் மனோகரன்.  ஆங்கில ஆல்பத்துக்கு இசையமைத்த போது நண்பர்கள் வேண்டுகோளின்படி  மாற்றம் செய்ய விரும்பி அப்பா மாரியப்பன் பெயரில் இருந்து பாதியை எடுத்து மரியா மனோகர் ஆனார். சினிமா தொடர்புகளுக்கு பெரிதும் உதவிய சித்தப்பா கோட்டூரானை நன்றியோடு நினைவு கூர்கிறார் இவர்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்து வந்த உறவுக்காரப்பெண் கல்பனாவுக்கு, தானே எழுதி இசை அமைத்து ஒரு காதல் பாடலை அனுப்பி வைத்தார். அந்தப் பாடல் கல்லூரி மாணவிகளிடையே வரவேற்பையும் கல்பனாவிடமிருந்து காதலையும் பெற்றுத்தந்தது.

பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார் மரியா மனோகர். அந்தப் பாடலைக் கேட்ட நண்பர் ‘feather’ என்ற ஆல்பத்துக்கு இசைஅமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். இயற்கை பற்றிய அந்த ஆல்பம் இயல்பாகவே நல்ல வரவேற்பைப்பெற்றது. தமிழ், இந்தியில் உருவான அந்த ஆல்பத்திற்கு புலமைப்பித்தன் பாடல்களை எழுதினார்.

இலங்கையில் போர் நடந்த போது கார்த்திக் நேத்தா வரிகளில் இவர் இசை அமைத்த தனிப்பாடல் உலகத்தமிழர் மத்தியில் உணர்வுபூர்வ வரவேற்பைப் பெற்றது. அந்த பாடலைக் கேட்ட இயக்குனர் குழந்தை வேலப்பன் தனது ‘ஆண்மை தவறேல்’ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை மரியா மனோகருக்கு வழங்கினார்.அந்தப் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டதால் அடுத்ததாக இவர் இசையமைத்து ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ படம் முதலில் வந்தது.

அந்தப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சங்கர் மகாதேவன் பாடிய ‘இருந்தா அள்ளிக்கொடு’ பாடல் முன்னணி நாயகர்களின்  அறிமுகப்பாடல் போல ரசிகர்களைச்  சென்றடைந்தது. ‘ஆண்மை தவறேல்’ படத்துக்கான முதல் பாடல் பதிவு பின்னணிப்  பாடகி சித்ராவின் ஒலிப்பதிவுக்கூடத்தில் நடந்தது. ‘வழியில் தொலைந்து போகவோ என் விரல்கள் கோர்த்து நடந்தது......’ என்ற பாடலை அறிமுகப்பாடகர்ஸ்ரீநிவாஸ் பாடினார். நான்கு  பாடல்கள் இடம் பெற்ற அந்தப் படத்தில் பாடகர் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து ராம்கி இயக்கத்தில் ‘இதயம் திரையரங்கு’ படத்திற்கு மரியா மனோகர் இசை அமைத்தார். ஷோபா சந்திரசேகர் மற்றும் நாட்டுப்புறப்பாடகர் ஜெயமூர்த்தி பாடிய ‘தூரத்தில தூரத்தில உட்கார்ந்து பேசுங்க’ பாடல் பேசப்பட்டது.

இவரது இசை அமைப்பில் ‘அகத்திணை’ படத்தில் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். இவரது அத்தனை மெட்டுக்களையும் வைரமுத்து வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். ‘இலைகளிலே சடுகுடு நடத்துது பனித்துளியே’ உட்பட நான்கு பாடல்கள் இடம் பெற்றன. ஹரிச்சரண், வேல்முருகன், சக்தி ஸ்ரீகோபாலன் ஆகியோர் பாடினார்கள்.

‘மதுரை மாவட்டம்’ படத்தில் இவரது இசையில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றன. ‘பொதைக்க மாட்டேன் கண்ணே, உன்னை விதைக்கப் போறேன் பெண்ணே’ என்ற பாடலை இவரும் ஜெயமூர்த்தியும் பாடினார்கள். ‘சாலையோரம்’ படத்திற்கு பின்னணி இசை அமைத்தார் இவர். கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’ படத்தில் இவரது  இசை அமைப்பை மனந்திறந்து பாராட்டியுள்ளார் புகழ்மிகு பின்னணிப்பாடகி ஷ்ரேயா கோஷல்.

மும்பையில் பாடல் ஒலிப்பதிவு நடந்த போது நீண்ட நேரம் மூச்சுப்  பிடித்து இவர் கீபோர்டில் மெட்டு வாசித்ததைக் கண்டு வியந்திருக்கிறார் அவர். நா.முத்துக்குமார் எழுதிய ‘சுடலமாடசாமிகிட்ட’ என்ற பாடலை ரசித்து நான்கு மணி நேரம் எடுத்து பாடியிருக்கிறார் ஷ்ரேயா கோஷல். கால் உடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அந்தப் படத்திற்காக சிரத்தை எடுத்து பாடிக்  கொடுத்திருக்கிறார் அதிதீ பால்.

புகழ்மிகு பாடகர் கே.கே. பாடியுள்ளதோடு, மசாக்கோ என்ற ஜப்பான் பாடகியும் இடம் பெற்றுள்ளார். பெயரிடப்படாத நான்கு படங்களுக்கு இசை அமைத்து வரும் மரியா மனோகர் பாட்டுச்சாலைப்  பயணத்தை பக்குவமாகத் தொடர்கிறார்.

அடுத்த இதழில்
இசையமைப்பாளர் கிஷோர்

நெல்லைபாரதி