காவிய நாயகி!



ஹீரோயினிஸம் 

லேசாக ஆண்மை தெறிக்கும் குரல். ஆளுமையான உடல்மொழி. நிறம் கருப்புதான். பின்தங்கிய வகுப்பில் பின்னணி இல்லாமல் வளர்ந்தார். ஆதரிக்க யாருமற்ற வாழ்க்கை. குறைகளையெல்லாம் நிறையாக மாற்றி இசையுலகிலும், திரையுலகிலும் கொடிகட்டிப் பறந்த பெண் என்றால் அது கே.பி.சுந்தராம்பாள்தான்.

இன்றைய நவீன காலகட்டத்தை வைத்து அவரது வாழ்க்கையை மதிப்பிட முடியாது. ஆணாதிக்கம் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் அவர் அடைந்த வெற்றிகள் ஒரு பெண்ணால் நிச்சயம் சாத்தியமற்றது என்று உறுதியாகவே சொல்லலாம்.

கொடுமுடியில் புறப்பட்டு  கோடம்பாக்கம் வந்த கதையும், ெவற்றிகளைக் குவித்த வரலாறும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். வெளிநாட்டுக்கு நாடகத்தில் நடிக்கச் சென்ற முதல் பெண் அவர்தான். நாடகத்தில் முன்பதிவு முறையை கொண்டு வந்த முதல் தயாரிப்பாளரும் அவரே. பெண்கள் ஆண்களாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆணாக நடித்த பெண் இவர்.

ஒரு படத்துக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை. இப்படி கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையில் ஆச்சர்யங்களும், அதிசயங்களும் ஏராளம். இவை எல்லாவற்றையும்விட அவரை கோடிக்கணக்கான பெண்களுக்கு ரோல்மாடலாக ஆக்கியது அவரது புனிதமான காதல்தான்.

எஸ்.ஜி.கிட்டப்பா நாடக உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நேரம் அது. அவரைப்போல தலைமுடி, உடைகள் அணிந்து அந்தக்கால இளைஞர்கள் திரிந்த நேரம். இலங்கையில் நாடகத்தில் நடிக்கச் சென்றார். அங்கு அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் கே.பி.சுந்தராம்பாள். “பேரழகனான எனக்கு இப்படி அழகில் சுமாரான பெண் ஜோடியா?” என்று முதலில் கொதித்தார்.

“அவரது கானத்தைக் கேளுங்கள், பின்பு காரணத்தைச் சொல்லுங்கள்” என்றனர். மைக்கோ ஸ்பீக்கரோ இல்லாத அந்தக் காலத்தில் நாடக மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து பாடினார் சுந்தராம்பாள். அடுத்த காட்சிக்காக வெளியில் காத்திருந்தவர்கள் நாடகம் ஆரம்பித்துவிட்டதாகக் கருதி ஓடி வந்தார்கள். அந்தக் குரலின் கம்பீரத்தில் விழுந்தவர்தான் கிட்டப்பா. நாடகக் காதலுக்கு முன்பே நிஜக்காதல் அவருக்குள் அரும்பியது.

நாடக ஜோடியாக இருந்தவர்கள், இலங்கையில் சக்கைப்போடு போட்டவர்கள், நாடு திரும்பும்போது நிஜமான காதலர்களாகத் திரும்பினார்கள். கிட்டப்பா உயர்ஜாதி வகுப்பைச் ேசர்ந்தவர். ஏற்கெனவே திருமணமும் ஆனவர்.

அதனால் அவர் குடும்பத்தில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு. அதையும் மீறி 1927ம் ஆண்டு கிட்டப்பா - சுந்தராம்பாள் திருமணம், மயிலாடுதுறையில் நடந்தது. புதிய நாடகக் கம்பெனி தொடங்கி இருவரும் சேர்ந்து நடித்தார்கள். கிட்டப்பாவின் குடும்பம் தனது சகுனி வேலையை சரியாக ஆரம்பித்தது. சதுரங்கக் காய் நகர்த்தியது. இருவரும் பிரிந்தார்கள். கிட்டப்பா, தன் முதல் மனைவி வீட்டில் சேர்ந்து கொண்டார். சுந்தராம்பாள் தனியாக நாடகக் கம்பெனி தொடங்கி நடத்தினார்.

சுந்தராம்பாளை மறக்கமுடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானர் கிட்டப்பா. அப்பழக்கம் உடல்நலத்தைச் சீர்குலைக்க, 1933ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 மட்டுமே. சுந்தராம்பாளுக்கு வயது 25. பிரிந்து வாழ்ந்தாலும் நெஞ்சில் கணவனைச் சுமந்து வாழ்ந்த சுந்தராம்பாள், கொங்கு நாட்டு வழக்கப்படி நகை துறந்து அழகு துறந்து விதவைக் கோலம் பூண்டார்.

நீண்ட காலம் தவ வாழ்வு வாழ்ந்தார். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது “கிட்டப்பாவைத் தவிர இன்னொரு ஆணுடன் என்னால் எப்படி நடிக்க முடியும்?” என்று கேட்டார். அதன்பிறகு நந்தனார், அவ்வையார், கவுந்தி அடிகள் என ேஜாடி இல்லாத கதாபாத்திரங்களில் நடித்தார். கடைசி வரை கிட்டப்பாவின் நினைவாகவே வாழ்ந்து மறைந்தார். சினிமாவில் கூட சித்தரிக்கப்பட முடியாத காவியக் காதலை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய மகத்தான நாயகி அவர்.

- மீரான்