கபாலிதான் காப்பாத்தணும்!



செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்களின் ஒற்றுமை ‘தெறி’யால் தெறித்துவிட்டது. படம் ரிலீஸ் ஆனபோது எழுந்த பிரச்சினை இன்னமும் ஓயாது போலிருக்கிறது. அப்படத்துக்கு கேட்கும் தொகை அதிகமென்று ஒட்டுமொத்த தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு நின்றபோது பதினோரு தியேட்டர்கள் மட்டுமே கடும் எதிர்ப்பையும் மீறி ‘தெறி’யை ரிலீஸ் செய்தார்கள். மீதியிருந்த தியேட்டர்காரர்களின் கோபத்தை சம்பாதித்தார்கள்.

அதன் காரணமாக அடுத்தடுத்து வெளிவந்த ‘24’, ‘இது நம்ம ஆளு’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உட்பட ஏராளமான படங்களை வெளியிட முடியாமல் இந்த தியேட்டர்கள் ரவுண்டு கட்டப்பட்டன. திரையரங்க உரிமையாளர்கள் இருதரப்பாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருப்பதை அடுத்து பலகோடி ரூபாய் நஷ்டம் தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மறந்ததால் ஏற்பட்ட வினை.

ரஜினிகாந்தின் ‘கபாலி’யின் தயாரிப்பாளரும் தாணுதான். ரஜினி படம் என்றாலே தியேட்டர்களுக்கு தீபாவளி சரவெடி. பழைய பகையை மனசில் வைத்து தங்களை தெறிக்க விட்டுவிடுவாரோ என்று ‘தெறி’ சமயத்தில் அவரோடு மோதிய தியேட்டர் அதிபர்கள் அஞ்சுகிறார்கள். அப்படியில்லை, ரஜினி பெருந்தன்மையானவர். தன் படத்தை பாரபட்சம் இன்றி வெளியிட விரும்புவார் என்று சிலர் நம்புகிறார்கள். கபாலி காப்பாற்றுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்!

- எஸ்ரா