கணக்கு கசக்கும்.. ஆனா ‘அம்மா கணக்கு’ அசத்தும்! தனுஷ் நம்பிக்கை



சமகால சமூகப் பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து இந்தியில் ஹிட் அடித்த படம் ‘நில் பேட்டா சனாட்டா’. அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி, தமிழில் ‘அம்மா கணக்கு’ என்கிற பெயரில் தன்னுடைய வொண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார் தனுஷ்.

இந்தியில் அப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியையே தமிழிலும் இயக்க வைத்திருக்கிறார். அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி, பேபி யுவா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இசை இளையராஜா.

இதுவரை ஒரு நடிகராக பேட்டி கொடுத்து பழக்கப்பட்ட தனுஷ், ‘அம்மா கணக்கு’ படத்துக்காக தயாரிப்பாளர் தனுஷாக நம்மிடம் மனம் திறந்தார்.“அதென்ன ‘அம்மா கணக்கு’? அரசியல் படமா?”“முதல் கேள்வியே வில்லங்கமா இருக்கே! இந்தப் படத்தை தயாரிச்சதில் ரொம்பவே பெருமைப்படுறேன். சமுதாயத்துக்குத் தேவையான அவசியமான கருத்தைக் கொண்டிருக்கும் படம். பொதுவாகவே மாணவர்கள் நிறைய பேருக்கு கணக்குன்னா கசக்கும். நானும்கூட +2வில் கணக்குலே ஃபெயிலுதான்.

இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அசுரவேகமாக மாறிவரும் நவீன சமூக கட்டமைப்பில் எப்படி பொருத்துவது என்று புரியாமல் திணறுகிறார்கள். கல்வி ஒன்றே தங்கள் பிள்ளைகளை கரை சேர்க்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், மாணவர்களுக்கோ கல்வி வேப்பங்காய். பெற்றோர், மாணவர் என்ற இந்த இருவேறு வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளும், நிராசையாகும் கனவுகளும் பற்றிய ஒரு விவாதமாக ‘அம்மா கணக்கு’ படம் இருக்கும்.”

“தமிழில் புதுசா பண்ண சப்ஜெக்ட்டே இல்லையா? எதுக்கு இந்தியில் இருந்து ரீமேக் உரிமை வாங்கி செய்யணும்?”
“நல்ல கேள்வி. ஆக்சுவலா இந்தப் படத்தை பார்க்குறதுக்கு முன்னாடி டிரெய்லரைப் பார்த்தே ரீமேக் உரிமையை வாங்கிட்டேன். இந்தியில் தயாரிச்ச ஆனந்த் எல்.ராய் எனக்கு நண்பர்தான். டிரெய்லரே எனக்கு அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்புறமா முழுசாப் படத்தைப் பார்த்தப்போ என்னோட கணிப்பு தவறாகலைன்னு சந்தோஷம்.

அம்மா, தன் மகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, பாசம், கனவு பற்றிய கதை இது. இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியே தமிழில் இயக்கினால் நல்லாருக்கும்னு நெனைச்சேன். அப்போதான் அந்தப் படத்தோட soul நமக்கு அப்படியே கிடைக்கும்.

இருந்தாலும் இந்திக்காரங்க படப்பிடிப்புக்கு ரொம்ப நாள் எடுத்துப்பாங்க. தயாரிப்புச்செலவு எகிறுமேன்னு ஒரு தயாரிப்பாளரா எனக்கு அச்சம் இருக்கத்தான் செஞ்சது. ஆனா, குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிச்சி பிரமாதமா கையில் கொடுத்திருக்காங்க.”

“அமலாபால்?”“அய்யோ. அவங்களைப் பத்தி நிறையச் சொல்லணும்னு தோணுது. ‘வேலையில்லா பட்டதாரி’ பண்ணப்பவே அவங்க டெடிகேஷனை நேரில் பார்த்து அசந்திருக்கேன். இந்தப் படத்தோட மொத்த சுமையும் அவரோட தோள்மீதுதான். சுகமான சுமையா கருதி சுமந்திருக்காங்க. அவங்க கேரக்டரை உணர்ந்து, ஹோம்வொர்க் பண்ணி செதுக்கியிருக்காங்க. இந்த கேரக்டருக்கு அவங்கதான் பொருத்தம்னு நாங்க கருதியதற்கு நியாயம் செஞ்சிருக்காங்க.

அம்மாவா நடிக்கணும்னு சொன்னேன். சின்னக் குழந்தைக்கு அம்மான்னு நெனைச்சிக்கிட்டு சந்தோஷமா ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம்தான் பத்தாவது படிக்கிற பதினைஞ்சு வயசு பொண்ணுக்கு அம்மான்னு சொன்னோம். கேட்டதுமே ஜெர்க் ஆயிட்டாங்க. முன்னணியில் இருக்கிற ஓர் இளம் நடிகையை இப்படி கேட்டா தயக்கம் இருக்கத்தானே செய்யும்?

அப்புறம் அவங்களுக்கு இந்திப் படத்தை போட்டுக் காட்டினோம். ரொம்ப நெகிழ்ச்சி ஆயிட்டு, ‘நான் பண்ணுறேன்’னு சொன்னாங்க. அந்த கேரக்டரை நல்லா உள்வாங்கினதோட இல்லாம, இவங்களும் மெருகேற்றி நடிச்சிக் கொடுத்திருக்காங்க.

நடிச்சி முடிச்சதும் அவங்க நடிப்பைப் பத்தி என்னோட அபிப்ராயம் என்னன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. நானும் விளையாட்டுக்கு ஒண்ணுமே சொல்லாம போக்கு காட்டிக்கிட்டிருக்கேன்.
இப்போ சொல்றேன். அமலாபால் நடிச்சதிலேயே இதுதான் பெஸ்ட். இந்தப் படத்துக்காக அவருக்கு தேசியவிருது கிடைச்சா, நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதேமாதிரி சுட்டிப்பொண்ணு யுவாவும் மிரட்டியிருக்கு.”

“இளையராஜா?”“அவர் மிகப்பெரிய ஞானி. அவரோட இசை நல்லாருக்குன்னு சொல்லுறதெல்லாம் க்ளிஷே. ராஜாவோட இசைன்னா அது நல்லா மட்டும்தான் இருக்கும். இந்தப் படத்தோட கதையை இசை மூலமாகவே ரசிகனுக்கு கடத்துகிற சவாலை அவரு வெற்றிகரமா கையாண்டிருக்காரு.

அமலாபாலோட குளோசப் காட்சிகளுக்கு அவரு செஞ்சிருக்கிற பின்னணியைக் கேட்டு மிரண்டுட்டேன். ராஜா சார் மாதிரியே குறிப்பிட்டு ஒளிப்பதிவாளரையும் சொல்லணும். ‘ஜிகர்தண்டா’ பண்ண ஆரிதான் அவரு. ஒளிப்பதிவும், இசையும் ஒரு படத்தோட தரத்தை எந்தளவுக்கு கூட்டமுடியும்னு இந்தப் படம் பார்த்தா புரியும்.”

“விருதை குறிவைச்சுதான் படங்கள் தயாரிக்கறீங்களா?”
“அப்படித்தான் நிறையபேர் என் காதுபடவே பேசிக்கறாங்க. அப்படியெல்லாம் இல்லை. நல்ல படம் தயாரிக்கணுங்கிறது ஆசை. அது நிஜமாவே நல்ல படமா வந்துச்சின்னா விருதுகள் கிடைக்கத்தான் செய்யும். ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’யெல்லாம் விருது வாங்கியது கடவுள் அருளால் அமைஞ்சது. நானும் சரி, எங்கிட்டே கதை சொல்லுற இயக்குநர்களும் சரி, ஒருமுறை கூட நமக்கு விருது கிடைக்கும்னு எதிர்பார்த்ததே இல்லை.”

- சுரேஷ்ராஜா