மீரா ஜாக்கிரதை



கொலை செய்யும் பாலம்!

“போதும் விடுங்கடா” என்று ‘பருத்திவீரன்’ கிளைமேக்ஸில் பிரியாமணி கதறியதைப் போல, பேய்களே வந்து ‘எங்களை விட்டுடுங்க’ என்று கையெடுத்து கும்பிட்டால்தான் தமிழ் சினிமாவில் பேய்ப்பட கலாச்சாரம் கட்டுக்குள் வரும் போலிருக்கிறது.

சென்னைக்கு வெளியே இருக்கும் கிராமம் அது. அங்கிருக்கும் பாலம் பல உயிர்களை காவு வாங்குகிறது. அந்த பாலத்தின் அருகில்தான் பாபிசிம்ஹாவின் குடும்பம் வசிக்கிறது. அப்பாலத்தில் நடக்கும் மர்ம மரணங்களைப் பற்றி குறும்படம் எடுக்க ஒரு மாணவர் குழு வருகிறது. அந்த மரணங்கள் பேயால் நிகழ்ந்ததா அல்லது தொடர் கொலைகளா என்கிற கேள்விகளுக்கு விடையளிப்பதே கிளைமேக்ஸ்.

பாபிசிம்ஹா, சினிமா வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்த காலத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது. நாயகி மோனிகா, மதம் மாறி கல்யாணம் ஆகி சினிமாவிலிருந்தே வெளியேறி நீண்டகாலம் ஆன நிலையில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது என்றால் எவ்வளவு பழசு என்று நாமே கணக்கு போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசை பேய்த்தனமான இம்சை. ஜெனீஷ்வீரபாண்டியனின் கேமரா ஓக்கே. ரெகுலர் பேய் டெம்ப்ளேட் கதையாக இருந்தாலும் சிரத்தையெடுத்து முடிந்தளவுக்கு உழைத்திருக்கிறார் இயக்குநர் கேசவன்.