பரீட்சையில் வென்று பாட்டெழுதிய பிரியன்! 105திருச்சியைச் சொந்த ஊராகக்கொண்ட பிரியன், ராஜாராமன் - மல்லிகா பெற்றோரின் மகனாகப் பிறந்தார். பன்னிரெண்டாம் வகுப்புவரை பிஷப் ஹீபரில் கல்வி கற்றவர், தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார்.

பள்ளிக்கூட நாட்களிலேயே பிரியனுக்கு பாடல்கள் மீது காதல் பிறந்தது. அதை ஊக்குவிக்கும் வகையில் அக்கம்பக்கத்து நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் பாடல்கள் இவரது காதில் விழுந்தன.

குறிப்பாக மாரியம்மன் கோவிலில் ஒலிக்கும் பாடல்களை எழுதிவைத்துப் பாதுகாக்கும் பழக்கம் ஏற்பட்டது. பள்ளி-கல்லூரி பருவத்தில் காதல், சமூகம் சார்ந்த கவிதைகள் எழுதி, வளாகம் அறிந்த கவிஞராக வலம் வந்தார். கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கிடைத்த கைதட்டல், சினிமா ஆசையைத் தூண்டிவிட்டிருக்கிறது. கவிதைத்தொகுப்பு போட்டால், 500 பேரைச் சென்றடையும், அதுவே சினிமாப்பாடலாக இருந்தால் ஐந்து கோடிப்பேரை எட்டும் என்பது மனதுக்குள் உறைந்துவிட்டது.

தமிழ் இலக்கியம் படிக்க ஆசைப்பட்டவரை, அப்பா தடுத்துவிட்டார். வேலை கிடைக்கும் படிப்பை மகன் தொடரவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. திருச்சி மாநகர மாணவர் சங்க தலைவராக இருந்த இவரை, சில அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க நடந்த நெருக்கடியில், தப்பித்து சென்னைக்கு வந்துவிட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே  சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு தேடியவருக்கு வாயில்கள் திறக்கப்படவில்லை. 

பின்னர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற பிறகு செய்த தீவிரமான தேடலில் மொழிமாற்றுப் படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிட்டியது. வேலையை விட்டுவிட்டு, பாடல் பணியை முழுமூச்சாய் மேற்கொண்டார்.‘ஆட்டம்’ என்ற நேரடி தமிழ்ப்படம் மூலம் முழு தமிழ்ப்பாடலாசிரியராக களம் இறங்கினார் பிரியன்.

ராஜ்கோட்டியின் உதவியாளர் பவ நாராயணன் இசையமைப்பில் ஒரேயொரு பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்டவர்கள், ‘ஐந்து பாடல்களும் உங்களுக்கே’ என்று ஆசீர்வதித்தார்கள். அந்தப்படத்தில் ‘பதினெட்டு வயதுப் பருவக்காற்று என்னைத் தீண்டியதே…’ பாடலில் வரியின் முடிவில் ஏகாரம் வருமாறு எழுதிய விதம் அனைவரையும் கவர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவுக்கூடத்தில் அந்தப்பாடலை பிரசன்னா பாடியபோது ஆனந்தக்கண்ணீர் வடித்திருக்கிறார் பிரியன்.

அப்படியும் இப்படியுமாகப் போய்க்கொண்டிருந்த பாட்டுச்சாலைப் பயணத்தில், மிஷ்கின் இயக்கத்தில், சுந்தர்.சி பாபு இசையில், இவர் எழுதி ஸ்வேதா பாடிய ‘மனசுக்குள் மனசுக்குள் புதுமழை…’ பாடல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

வாய்ப்பு கேட்டு வரும் பாடலாசிரியர்களுக்கு தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது விஜய் ஆன்டணியின் வழக்கம். பிரியனிடம் பிரபலமான ஒரு பாடலின் மெட்டினைக் கொடுத்து, ‘உங்கள் பாணியில் இந்த மெட்டுக்கு பாட்டெழுதுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ஐந்தே நிமிடத்தில் இவர் எழுதிக்கொடுத்ததைப் பார்த்துவிட்டு அவர் கொடுத்த வாய்ப்புதான் ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘புயலாய் புறப்படு…’ பாடல்.

தொடர்ந்து விஜய் ஆன்டணியின் அனைத்துப் படங்களிலும் இடம்பெறும் பாடலாசிரியராக வலம்வருகிறார்.  ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக முதலில் ஒரு சூழலைச் சொல்லியிருந்தார் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன். பாண்டிச்சேரியில் பண்ணை வீட்டில் பாடல் உருவாக்கத்துக்கு ஏற்பாடு. அங்கு போனதும் சூழலை மாற்றிவிட்டார் இயக்குநர். இருந்தபோதும், விஜய் ஆன்டணியின் மெட்டைக் கேட்டதும் பதினைந்து நிமிடத்தில் பிரியன் எழுதிய பாடல்தான் ‘செக்ஸி லேடி கிட்ட வாடி…’

வேறொரு படத்துக்கு பாட்டெழுத ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்திருந்த பிரியனிடம், விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு வரி சொல்லுங்களேன் என்று கேட்டிருக்கிறார் விஜய் ஆன்டணி. ‘வேலா வேலா வேலாயுதம்…’ என்று தொடங்கி ஒவ்வொரு வரியாக இவர் சொல்ல, சில நிமிடங்களில் முழுப்பாடலுக்கான வடிவமும் கிடைத்திருக்கிறது. காகிதத்தில் எழுதாமல் ஒலிப்பதிவான பாடல் அது.

விஜய் ஆன்டணி நாயகனாக நடித்து, இசையமைத்த ‘நான்’ படத்தில் இவர் எழுதிய ‘மக்காயாலா மக்காயாலா…’ பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ஒரு விழாவில் பிரியனைப் பார்த்த காவியக்கவிஞர் வாலி, ‘யோவ், என்னய்யா? நான் ‘முக்காபுலா முக்காபுலா’னு எழுதுனா, நீ ‘மக்காலாயா’னு வார்த்தையைப் போடுறியா? இந்த வருஷத்துல இதுதான்யா சூப்பர் ஹிட்’ என்று வாழ்த்தியிருக்கிறார். அவரது வாக்கு அப்படியே பலித்தது.

நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படப் பாடல்கள் என இசைக்கு வரிகளை அள்ளிக்கொடுக்கும் பிரியனுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் 2015ஆம் ஆண்டு, இலக்கியத்திற்கான ‘டாக்டர்’ பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. ‘கவியரசு கண்ணதாசன்’ உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இவரது இலக்கியப் பணிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன.

 ‘கனா வனம்’ பதிப்பகம் மூலம் பாடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சித் தொகுப்பாக  ஆண்டுதோறும் புத்தகம் வெளியிட்டு வருகிறார் பிரியன். சினிமாவில் பாடலாசிரியராக வரவேண்டும் என்கிற ஆசையுடன், வழிகாட்ட ஆளின்றி தவிக்கும் திறமையாளர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழி செய்வதற்காக பிரியன் உருவாக்கிய பயிற்சிக் கூடம் ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’. முன்னணி பாடலாசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் தரும் பயிற்சி, மாணவக் கவிகளுக்கு பேருதவியாக இருக்கிறதாம்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை. கட்டமைப்புக்கான கட்டணம் மட்டுமே கற்போரின் செலவு என்பது பாக்கூடத்தின் சிறப்பு. இங்கு பயின்றோரில் இதுவரை பதினைந்து பேர் பாடலாசிரியராக வலம் வருகிறார்கள்.

‘ரசிக்கும் சீமானே’ படத்தில் ‘நான் உன்னைப் பார்க்கும் நேரம்…‘, ‘அ ஆ இ ஈ’யில் ‘அ ஆ இ ஈ சொல்லித்தருதே வானம்…’, ‘தந அல 4777’ படத்தில் ‘சொர்க்கம் மதுவிலே…’, ‘உத்தமபுத்திரன்’ படத்தில் ‘உசுமுலாரசே உசுமுலாரசே…’, ‘யுவன் யுவதி’யில் ‘உன் கண்ணைப் பார்த்தபிறகு…‘, ‘முரண்’ படத்தில் ‘இதுவரை என் நெஞ்சை…‘, ‘சலீம்’ படத்தில் ‘மஸ்காரா போட்டு மயக்குறியே…’, ‘கோலிசோடா’வில் ‘ஜனனம் ஜனனம்…’, ‘பிச்சைக்காரன்’ படத்தில் ‘உனக்கென வருவேன்…’ என பிரியனின் பாட்டுப் பயணம் பரப்பரப்பாகத் தொடர்கிறது.

அடுத்த இதழில்

இலங்கைவாழ் பாடலாசிரியர்
ராஜகவி ராகில்

நெல்லைபாரதி